கரோனா வைரஸ் தொற்று உலகையே நாளுக்கு நாள் அச்சுறுத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவத் தொடங்கிய இந்த வைரஸானது தற்போது உலகம் முழுக்க 190 நாடுகளில் பரவியுள்ளது.
அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற வளர்ந்த நாடுகள் கூட இந்த நோயின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நோயை தடுக்க தற்போது எந்த தடுப்பு மருந்தும் இல்லை என்பதால் நோயின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வீட்டை விட்டு மக்கள் வெளியேற வேண்டாம் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு இந்தியாவில் மட்டுமில்லை, உலக நாடுகள் பல இந்த உத்தரவைதான் தற்போது கரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியா முழுவதும் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியுள்ளார்.
இந்த ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு எந்த மாலும், திரையரங்குகளும் திறக்கப்படாது என்பதால் அடுத்த மாதம் வெளியாக இருந்த படங்களின் தேதிகளும் தள்ளி போகின்றது. இந்நிலையில் கரோனா பாதிப்பால் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி தீவு உள்ளிட்ட நாடுகளில் வருகின்ற ஜூன் மாதம் வரை எந்தவித திரையரங்குகளும் திறக்கப்படாது என்று அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.