Clint Eastwood about jigarthanda double x

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த தீபாவளியை முன்னிட்டு 10 ஆம் தேதி வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரித்திருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. நடிகர் ரஜினி, படக்குழுவை பாராட்டி அறிக்கை வெளியிட்டார். மேலும் நேரில் அழைத்து பாராட்டினார். இவரை தவிர்த்து சீமான், ஷங்கர், சிம்பு, மாரி செல்வராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் படக்குழுவினரை வெகுவாகப் பாராட்டினர். இப்படம் கடந்த8 ஆம் தேதி தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் இயக்குநர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் தொடர்பாக ஒரு சின்ன கதை இடம்பெற்றிருந்த நிலையில், அவரையும் அனிமேஷன் மூலம் ஒரு காட்சியில் படக்குழு இணைத்திருந்தனர். அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அதை சேர்த்துள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருந்தார். இதையடுத்து எக்ஸ் பக்கத்தில் ஒரு ரசிகர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் பக்கத்தை டேக் செய்து, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் அவர் இடம்பெற்றிருப்பது குறித்து குறிப்பிட்டு நேரம் கிடைக்கும் பொழுது படத்தை பார்க்கும்படி பதிவிட்டிருந்தார்.

Advertisment

இவரின் பதிவிற்கு கிளிண்ட் ஈஸ்ட்வுட் பக்கத்திலிருந்து பதில் வந்துள்ளது. அதில் “கிளின்ட் இந்தப் படத்தைப் பற்றி அறிந்திருக்கிறார். மேலும் அவர் தனது புதிய படமான ஜூரி 2 படத்தை முடித்தவுடன் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்ப்பார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கார்த்திக் சுப்புராஜ், அவரது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, நெகிழ்ச்சியடைந்துள்ளார். அந்த பதிவில், “லெஜெண்ட் கிளிண்ட் ஈஸ்ட்வுட் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பற்றி அறிந்திருப்பதும், விரைவில் பார்க்கவுள்ளதும் ரொம்ப நெகிழ்ச்சியாக உள்ளது. இப்படம் அவரது மில்லியன் கணக்கான ரசிகர்கள் சார்பாகவும் என்னுடைய இதயப்பூர்வமான அர்ப்பணிப்பு. அவர் படம் பற்றி என்ன கூறுவார் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்” என குறிப்பிட்டு அந்த ரசிகருக்கும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பட ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.மேலும் ராகவா லாரன்ஸும் கிளிண்ட் ஈஸ்ட்வுட்டிடமிருந்து வந்த பதிவிற்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.