Skip to main content

வந்தார் ஜூனியர் சிரஞ்சிவி சர்ஜா... ஆனந்தக் கண்ணீரில் அர்ஜூன் உறவினர்கள்!

Published on 22/10/2020 | Edited on 22/10/2020

 

chiranjeevi

 

கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக இருந்தவர் சிரஞ்சீவி சர்ஜா. இவர் இந்த வருடம், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், இளம் வயதிலேயே காலமானார். இவருடைய மனைவி மேக்னா ராஜ் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவர் நடிகர் அர்ஜூனின் நெருங்கிய உறவினர். 

 

இவர்கள் இருவரும் கடந்த 2018ஆம் ஆண்டு காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர். சிரஞ்சீவி சர்ஜா இறக்கும் போது, மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்தார். 

 

கணவர் இறந்து மூன்று மாதங்களுக்கு மேலான நிலையில், மனமுடைந்து இருந்த மகளுக்குத் தந்தை சுந்தர்ராஜ் வளைகாப்பு நடத்த முடிவெடுத்தார். 'கணவர் இல்லாததால் எதற்கு வளைகாப்பு' என மேக்னா முதலில் மறுப்பு தெரிவித்தார். பின்னர், கணவரின் விருப்பத்தை நிறைவேற்ற மேக்னா ராஜ் ஒப்புக்கொண்டார். வளைகாப்பில் தன்னுடைய கணவரை மிஸ் செய்யக் கூடாது என்பதற்காக, சிரஞ்சீவி சர்ஜாவின் ஆள் உயர கட் அவுட்டை தன் அருகிலேயே வைத்து கொண்டு வளைகாப்பை நடத்தினார் மேக்னா. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

 

இந்நிலையில் மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தனது கணவர் கட்டவுட்டுடன் குழந்தையை வைத்துப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். 'மறைந்த கணவரே உங்களுக்கு மகனாகப் பிறந்திருக்கிறார்' என்று இணையத்தில் மேக்னா ராஜுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

22 குடும்பங்களுக்கு அபராதம்; ஹோலி மழை நடன நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
 22 families fined; Holi rain dance performance restricted

கர்நாடகா மாநிலம், பெங்களூர் பகுதியில் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அதிகப்படியான ஐ.டி நிறுவனங்கள், தொழில்நுட்ப நிறுவனங்களால் இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத் தலைநகரமாக பெங்களூர் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகளில் குறைவான நீர் மட்டுமே தேக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பெங்களூர் பகுதியில் வழக்கமாக வழங்கப்படும் அளவை விடக் குறைந்த அளவில் மட்டுமே நீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

குறிப்பாக, புறநகர்ப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருந்து வருகிறது. இதனால், அந்தப் பகுதிகளில் வாடகை வீடுகளில் குடியிருப்பவர்கள் பலர் தங்கள் வீடுகளை காலி செய்து தங்களது சொந்த ஊருக்குச் செல்லும் நிலைமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனிடையே, குடிநீர் சிக்கனத்தை கடைப்பிடிக்கும் நோக்கில் பெங்களூரில் காரை குடிநீரில் கழுவ தடை விதித்து பெங்களூர் மாநகராட்சி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், தோட்டம், கார் கழுவுதல், கட்டுமான பணிகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கு இந்த தடை அமலில் இருக்கும் எனவும், தடையை மீறினால் 5000 ரூபாயும், தொடர்ந்து தடையை மீறினால் 5000 ரூபாயுடன் தினமும் கூடுதலாக 500 ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெங்களூருவில் குடிக்கும் தண்ணீரை பயன்படுத்தி வாகனங்களை கழுவிய 22 குடும்பங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக பெங்களூரில் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை பெங்களூரு நிர்வாகம் விதித்துள்ளது. ஹோலி பண்டிகையை வணிக நோக்கத்திற்காக செயற்கை மழை நடனம், தண்ணீரை பீய்ச்சி அடித்து நடனமாடுவது போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு கட்டுப்பாடு விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. காவிரி நீர் மற்றும் குழாய், கிணற்று நீரை ஹோலி கொண்டாட்டத்திற்குப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெங்களூருவில்  பிரபல ஹோட்டல்களில் ஹோலி பண்டிகையை  முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மழை நடன நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Next Story

குழந்தை விவகாரம் - நடிகை கைது!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
sonu srinivas.gowda child issue

பெங்களூரைச் சேர்ந்தவர் கன்னட நடிகை சோனு ஸ்ரீநிவாஸ் கௌடா. கன்னட பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலமும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் பிரபலமானவராக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், அவ்வப்போது ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும்படியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். அந்த குழந்தையை அவர் தத்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் அக்குழந்தையை சட்ட விரோதமாக சோனு ஸ்ரீனிவாஸ் கௌடா தத்தெடுத்துள்ளதாக குழந்தைகள் நலத்துறை சார்பில் காவல் துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்குழந்தையின் அடையாளத்தை நடிகை வெளிப்படுத்தியதாகவும், மார்ச் மாதம் தேர்வு இருந்தும் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு குழந்தை தத்தெடுக்கும் நடைமுறையில், குழந்தைக்கும் தத்தெடுப்பவருக்கும் 25 வயது இடைவெளி இருக்க வேண்டும் என சட்டம் இருக்கும் நிலையில் அக்குழத்தைக்கு 8 வயது என்றும் நடிகைக்கு 29 என்றும் மனுவில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.  

இந்த புகாரின் அடிப்படையில் நடிகையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரை விசாரித்த போது, குழந்தை தத்தெடுக்கும் முறையை முழுமையாக பின்பற்றவில்லை என்று ஒப்புகொண்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பின்பு நடிகையை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.