/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/174_26.jpg)
தெலுங்கு திரையுலகில் மறைந்த மூத்த நடிகர் மற்றும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் என்.டி.ஆரின் 101வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் சில படங்களைத்தயாரித்து இயக்கியும் உள்ளார். இவரது சேவையைப் பாராட்டி பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது. கிருஷ்ணர் வேடத்தில் இவர் நடித்த ஸ்ரீ கிருஷ்ணார்ஜுன யுத்தம் (1962), கர்ணன் (தமிழ், 1964) மற்றும் தான வீர சூர கர்ணன் (1977) உட்பட 17க்கும் மேற்பட்ட படங்கள் இவரை தெலுங்கு திரையுலக சூப்பர் ஸ்டார் ஆக்கியது.
நடிப்பை தாண்டி அரசியலிலும் ஈடுபட்டு வந்த இவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். 1984 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருந்த போது அவருக்காக தேர்தலில் பிரச்சாரம் செய்து தமிழக மக்களிடமும் பிரபலமானார். இந்த நிலையில் என்.டி.ஆரின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு ஹைதரபாத்தில் உள்ளஅவரது நினைவிடத்தில் அவரது மகன் நந்தமுரி பாலகிருஷ்ணா, பேரன்கள் ஜூனியர் என்.டி.ஆர், கல்யாண் ராம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/175_25.jpg)
இதனிடையே மூத்த தெலுங்கு நடிகர், சிரஞ்சீவி என்.டி.ஆருக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, “சிலரின் புகழ் என்றும் அழியாது. தலைமுறைகள் அவர்களை நினைவில் வைத்திருக்கும். வருங்கால சந்ததியினருக்கு என்.டி.ராமராவ் ஒரு உதாரணம். இன்று அவரை நினைவுகூரும் போது பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டால் பொது வாழ்வில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்குப் பொருத்தமான மரியாதையாக இருக்கும். தெலுங்கு மக்களின் இந்த நீண்ட நாள் ஆசையை மத்திய அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)