Skip to main content

“திரைத்துறைக்கு ஒரு கருப்பு நாள்”-கிரேசி மோகனுக்கு இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்...

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

பிரபல நகைச்சுவை நடிகரும், கதை, திரைக்கதை ஆசிரியரும், வசனகர்த்தாவும், நாடகக்கலைஞருமான கிரேசிமோகன்(66) மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.    கவலைக்கிடமான நிலையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணிக்கு காலமானார்.
 

crazy mohan

 

 

இந்நிலையில் அவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் ட்விட்டரிலும் நேரடியாகவும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 
 

வைரமுத்து,  “கிரேசி மோகன் மறைவு எதிர்பாராதது. ஒரு நகைச்சுவை அழவைத்துவிட்டுப் போய்விட்டது. அவர் வெறும் நாடக ஆசிரியர் மட்டும் அல்லர். வெண்பா எழுதத் தெரிந்த விகடகவி. யாரையும் வருத்தப்படவைக்காத நகைச்சுவையாளர் எல்லாரையும் வருந்தவிட்டுப் போய்விட்டார். சோகம் மறைந்து போகும்; நகைச்சுவை நிலைக்கும்.”
 

சித்தார்த் , “கிரேசி மோகன் மறைந்துவிட்டார். சினிமாவுக்கு, நாடகத்துக்கு, சிரிப்புக்கு, வாழ்க்கைக்கு ஒரு வருத்தமான நாள். அவரைப்போல இன்னொருவர் என்றும் வரமுடியாது. அவரது ஆன்மாவுக்கு என் பிரார்த்தனைகள். குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள். நம் தமிழ் உணர்வின் மிகப்பெரிய அங்கம் அவர்”
 

குஷ்பு , “கிரேசி மோகனின் மறைவு குறித்த செய்தி இப்போதுதான் கிடைத்தது. துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனளிக்கவில்லை. ஒரு மேதை, ஒரு பாரம்பரியத்தை விட்டுச் சென்றிருக்கிறார். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்”
 

 

சரத் குமார், “தொடர் நகைச்சுவை,யாரையும் புண்படுத்தாத வசனங்கள்,குறும்பான கதாபாத்திரங்கள்,நகைச்சுவை நாடகங்கள்,இவை மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த #கிரேஸி மறைவு கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.அவரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்.அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்”
 

காயத்ரி ரகுராம், “கிரேசி மோகன் இறந்து போனதில் மனமுடைந்து போனேன், அதிர்ச்சியானேன். எனது தந்தையின் நெருங்கிய நண்பர். எனது இயக்கத்தை ஆரம்பிப்பதற்கு முன், அவருடன் உட்கார்ந்து, அவரது யோசனைகளைக் கேட்டுப் பெற்றது நினைவில் இருக்கிறது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும் கிரேசி மோகன் சார். நீங்கள் சினிமாவுக்கு ஒரு இனிமையான பரிசு. உங்கள் மறைவு கண்டிப்பாக உணரப்படும்”
 

வரலஷ்மி சரத்குமார், “நமது திரைத்துறைக்கு ஒரு கருப்பு நாள் இன்று. ஒரே நாளில் இரண்டு அற்புதக் கலைஞர்களை இழந்திருக்கிறோம். அவர்கள் இழப்பு கண்டிப்பாக உணரப்படும். நமக்கு மிகப்பெரிய இழப்பு. அவர்கள் விட்டுச்சென்ற மரபிலிருந்தும் திறமையிலிருந்தும் நம்மால் கற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்”

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"எங்களுக்கெல்லாம் சமகாலத்து சாக்லேட் கிருஷ்ணன்" - கமல்ஹாசன்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

kamalhassan about crazy mohan

 

பிரபல நகைச்சுவை நடிகரும், கதை, திரைக்கதை ஆசிரியரும், வசனகர்த்தாவும், நாடகக்கலைஞருமான மறைந்த கிரேசி மோகனின் பிறந்தநாள் இன்று (16.10.2023). தமிழ் சினிமாவில் இவரது நகைச்சுவை வசனங்கள் இன்றளவும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இவரது பிறந்தநாளையொட்டி திரை பிரபலங்களும், ரசிகர்களும் அவர் சம்மந்தமான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

 

அந்த வகையில் கிரேசி மோகனின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசன், "என் அன்புக்குரிய நண்பர் கிரேசி மோகனின் பிறந்த நாள் இன்று. நகைச்சுவை உணர்வைத் தோலாகத் தகவமைத்துக் கொண்டிருந்த மனிதர். அந்தத் தோலுக்குள்ளே, ஆழ்ந்த மரபிலக்கியப் பயிற்சி, தொன்மம் தொடர்பான அகன்ற வாசிப்பு, தீவிர உணர்வுகளின் கனம் உணரும் திறன் அத்தனையும் கொண்டிருந்தவர். அதனாலேயே எங்களுக்கெல்லாம் சமகாலத்து சாக்லேட் கிருஷ்ணனாக இருந்தவர்" என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

கமல்ஹாசன் - கிரேசி மோகன் கூட்டணி, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, காதலா காதலா, தெனாலி, பஞ்சதந்திரம், வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், பம்பல் கே சம்பந்தம், மன்மதன் அம்பு உள்ளிட்ட படங்களை கொடுத்துள்ளது. 

 

 

 

Next Story

"எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார்" - கமல் இரங்கல்

Published on 19/04/2023 | Edited on 19/04/2023

 

kamal condolences post about crazy mohan wife passed away

 

பிரபல நகைச்சுவை நடிகரும், கதை, திரைக்கதை ஆசிரியரும், வசனகர்த்தாவும், நாடகக் கலைஞருமான கிரேஸி மோகன்(66) மாரடைப்பால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி காலமானார். இவரது மறைவு திரையுலகத்தில் பெரிதும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கிரேஸி மோகனின் நெருங்கிய நண்பரான கமல்ஹாசன், "நட்பிற்கு முடிவு என்பது கிடையாது. அவரது குடும்பம் ஒரு அற்புதமான கூட்டுக் குடும்பம். அவர்களுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் ஆறாது, போதாது" என உருக்கமாகப் பதிவிட்டிருந்தார். 

 

இந்த நிலையில் கிரேஸி மோகனின் மனைவி நளினி கிரேஸி மோகன் நேற்று (18.04.2023) காலமானார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் பதிவைப் பகிர்ந்துள்ளார் கமல்ஹாசன். அந்த பதிவில், "எனக்கு வாய்த்த இன்னொரு அண்ணியார் நளினி கிரேஸி மோகன் இயற்கை எய்திவிட்டார். நட்பில் துவங்கி உறவாகவே மாறிவிட்ட அக்குடும்பத்தார் அனைவருடனும் துக்கம் பகிர்ந்து கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.