Skip to main content

“தமிழகத்தில் மட்டும் 3.50 லட்சம் பேருக்கு அன்னதானம்” - புஸ்ஸி ஆனந்த்

Published on 28/05/2024 | Edited on 28/05/2024
bussy anand press meet

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் விஜய்,  2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் இலக்கு எனக் குறிவைத்து செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 26ஆம் தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதில், பட்டினியில்லா உலகத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் அனைவருக்கும் உணவு கிடைத்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உலக பட்டினி தினமான (28.05.2024) அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்துச் சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அவரது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.  

அதன்படி உலக பட்டினி தினமான இன்று தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஏழை எளிய மக்களுக்கு த.வெ.க. சார்பில் உணவு வழங்கப்பட்டது. இதனை அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். 

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், “உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இதே போல் 234 தொகுதிகளிலும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் அவரவர் சக்திக்கு ஏற்ப காலை மற்றும் மதிய உணவு அளித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தளபதி விலையில்லா விருந்தகம் பல வருடங்களாக 23 இடங்களில் தினசரி காலை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்தப் பட்டினி தினத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா எனப் பல்வெறு மாநிலங்களில் த.வெ.க நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் தமிழகத்தில் மட்டும் 3.50 லட்சம் பேருக்கு அன்னதானம் கொடுக்கப்பட்டுள்ளது.      

வரும் காலங்களில் த.வெ.க. நிர்வாகிகள் வீட்டு நிகழ்ச்சி நடக்கும் மண்டபங்களில், அருகில் உள்ள முதியோர், ஆதரவற்ற இல்லங்களில் இருப்பவர்களை அழைத்து உணவு வழங்கப்படும். ஜூன் 22 தலைவருடைய பிறந்தநாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்யவுள்ளோம்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“அரசு நிர்வாகத்தின் அலட்சியம்” - த.வெ.க தலைவர் விஜய் கண்டனம்

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
TVP leader Vijay comdemns kallakurichi fake liquor issue

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது தொடர்ந்து வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 34 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர்  ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் என பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பிறகே  முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம்  செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து 30க்கும் மேற்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த நிலையில், த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்

Next Story

“எம்.ஜி.ஆர் போல் விஜய்யும் மக்களுக்கு உதவி செய்ய நினைக்கிறார்” - செல்லூர் ராஜூ

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Sellur Raju says Like MGR, Vijay also wants to help people

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு வரும் ஜூலை 10ஆம்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பா.ஜ.க கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி.அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அ.தி.மு.க, தே.மு.தி.கவும் இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

இதற்கிடையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை த.வெ.க தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்தார். இது தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது, 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் தான் பிரதான இலக்கு என்றும், ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும் தமிழக வெற்றிக் கழகம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று (18-06-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவரிடம், த.வெ.க தலைவர் விஜய் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவர் என்று அவர் அறிக்கை வெளியிட்டிருந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இது அவருடைய நோக்கம். தனிப்பட்ட முறையில் ஒரு இளைஞர் (விஜய்) எம்.ஜி.ஆர் போல் தான் சம்பாரித்த பணத்தை மக்களுக்கு கொடுத்து உதவ நினைக்கிறார். அவர் களத்திற்கு வந்த அவருடைய கொள்கை, செயல்பாடு உள்ளிட்டவையெல்லாம் முதலில் சொல்லட்டும். எப்போதுமே அதிமுக யாருடனும் கூட்டணி பேச்சுவார்த்தை வச்சுக்காது. அவர் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால் நல்லது தான்” என்று கூறிச் சென்றார்.