Skip to main content

படப்பிடிப்பில் ஏற்பட்ட ரத்தக்காயம்; பதறிய தனுஷ் - சம்யுக்தா பகிரும் சுவாரசியம்

 

 Bleeding injury during filming; A nervous Dhanush-Samyukta sharing an interesting

 

நடிகர் தனுஷ் நடிப்பில் 'வாத்தி' படம் அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கேரளத்து வரவு நடிகை சம்யுக்தா வாத்தி பட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்... 

 

இயக்குநர் கற்றுத் தருவதற்கு மேல் கேரக்டர் வடிவமைப்பில் நீங்களாக சேர்த்த விஷயங்கள் ஏதேனும் இருக்கிறதா?

'வாத்தி' பட மீனாட்சி கேரக்டர் ஒரு டீச்சர். பொறுப்பான ஒரு டீச்சராகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் ஜாலியாகவும் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் இயக்குநர் எனக்கு மிகவும் உதவினார். இந்த கேரக்டரின் லுக் போன்ற விஷயங்களுக்காக எனக்கென்று ஒரு டீம் இருந்தது. முழுமையாக ஒரு டீச்சராக நான் தெரியவேண்டும் என்பதற்காக அந்த டீமோடு இணைந்து நானும் வேலை செய்தேன். 'வா வாத்தி' பாடல் வெளியான பிறகு பலர் இன்ஸ்டாகிராமில் அந்தப் பாடலை வைத்து ரீல்ஸ் செய்தனர். அதில் அந்தப் பாடலில் என்னுடைய லுக்கை அப்படியே பிரதிபலித்திருந்தனர். மக்களோடு கனெக்டாக வேண்டும் என்று நான் நினைத்தது நடந்தது. இதைத்தான் வெற்றியாக நான் கருதுகிறேன்.

 

தனுஷ் போன்ற சிறந்த நடிகரோடு நடிக்கும்போது ஆரம்பத்தில் பயம் இருந்ததா?

தனுஷ் ஒரே டேக்கில் சிறப்பாக நடிக்கக் கூடியவர். அதனால் ஒவ்வொரு சீனையும் முந்தைய நாளே கேட்டு வாங்கி நான் பாடம் செய்து கொள்வேன். முதல் ஷாட்டுக்கு முன்னால் ஒரு பயம் இருந்தது. இரண்டாம் பாதியில் உள்ள கடினமான ஒரு காட்சியுடன் தான் ஷூட்டிங் தொடங்கியது. கேட்டைத் திறந்து நான் உள்ளே செல்லும் காட்சி. நான் நடித்துக் கொண்டிருக்கும்போது தனுஷ் சார் 'கட் கட்' என்றார். கேட்டைத் திறக்கும்போது அதிலிருந்த ஊசி என்மேல் குத்தி ரத்தம் வழிந்தோடியது. அது தெரியாமல் நான் நடித்துக் கொண்டிருந்தேன். அவர் சொன்னவுடன் தான் எனக்கே தெரிந்தது. அதன் பிறகு மருத்துவரை அழைத்து சிகிச்சை கொடுத்தார்கள். தனுஷ் சாருடைய அன்பு அந்த நிகழ்வின் மூலம் தெரிந்தது.

 

செட்டில் தனுஷ் எப்படி இருப்பார்?

அவர் ரிகர்சல் செய்து நான் பார்த்ததே இல்லை. தன்னுடைய கேரக்டர் எப்படி இருக்க வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும். ஷாட்டில் நாம் கொடுக்கும் ஆச்சரியங்களுக்கு ஈடுகொடுக்க அவர் எப்போதும் தயாராக இருப்பார். நமக்கும் முழு சுதந்திரம் கொடுப்பார்.