இந்தியில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ், 18வது சீசனை எட்டியுள்ளது. கடந்த 6ஆம் தேதி முதல் இந்த சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வழக்கம் போல் சல்மான் கானே இந்த சீசனையும் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தொலைக்காட்சி நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் என மொத்தம் 18 போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஒருவராக பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசன் பேத்தியும் நடிகையுமான ஸ்ருதிகா பங்கேற்று விளையாடி வருகிறார்.
இந்த சீசனில் புதுமையாக போட்டியாளர்களோடு கழுதை ஒன்றும் பிக் பாஸ் வீட்டில் இடம்பெற்றுள்ளது. அந்த கழுதைக்கு ‘காதராஜ்’ எனப் பெயரிட்டு போட்டியாளர்கள் அதை பராமரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீட்டாவின் இந்திய அமைப்பு, கழுதையை பயன்படுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அதோடு சல்மான் கான், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டிஸில், “பிக்பாஸ் நிகழ்ச்சியில் கழுதையை பயன்படுத்துவது நகைச்சுவையான விஷயம் இல்லை. வீட்டில் இருந்து ஏற்படும் சத்தம், வெளிச்சம் ஆகியவை கழுதையை பயமுறுத்தும். இதனால் பார்வையாளர்களும் மன உளைச்சலுக்கு ஆளாவர். எனவே கழுதையை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளனர்.