Skip to main content

‘நோஞ்சான்’ சர்ச்சைக்கு விளக்கமளித்த பாரதிராஜா! 

Published on 15/09/2020 | Edited on 15/09/2020
barathiraja

 

 

ஏற்கனவே செயல்பட்டு வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், ஒருசில பிரச்சனைகளால் செயல்படாமல் இருக்கிறது. இதனால் தற்போது படங்களை தயாரித்து வரும் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து 'தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்' என்ற புதிய சங்கத்தை உருவாக்கியுள்ளனர். படம் தயாரிப்பு, பட வெளியீடு, பைனான்ஸ் சிக்கல்கள் உள்ளிட்ட பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கவே இந்தப் புதிய சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. 

 

இந்த சங்கத்தின் தலைவராக பாரதிராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அண்மையில் இச்சங்கம் சார்பாக தலைவர் பாரதிராகா அறிக்கைகள் மற்றும் கோரிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

 

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா சென்னையில் செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. இதில் பாரதிராஜா, டி.சிவா, தியாகராஜன், எஸ்.ஆர்.பிரபு, தனஞ்ஜெயன், சுரேஷ் காமாட்சி, லலித்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

இதனை தொடர்ந்து இச்சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இச்சங்கத்தின் தலைவரான பாரதிராஜா பேசுகையில், “திரையரங்க உரிமையாளர்கள் உடனான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்றால் என்ன பண்ண முடியும். படங்கள் திரைக்கு வர வேண்டும் என்றுதான் நாங்கள் ஆசைப்படுகிறோம். நீங்கள் அடாவடித்தனமாக சில விஷயங்கள் பண்ணும்போது, வேறு வழிகள் இருக்கின்றன. தொழில் சுதந்திரம் என்பது எங்களுக்கு உண்டு. இந்தப் பொருளை இவர்களுக்குத்தான் விற்கவேண்டும் என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. என்னுடைய பொருளை யாருக்கு வேண்டுமானாலும் விற்பேன், வாங்குகிறவர்கள் வாங்குவார்கள். இல்லையென்றால் எப்படி விற்க வேண்டும் என்று தெரியும்” என்று தெரிவித்தார். மேலும், தயாரிப்பாளர்கள் சங்கத்தையும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தையும் ஒப்பிட்டு, “வலுவுள்ள 100 பேர் பயில்வான் மாதிரி, 1000 பேர் நோஞ்சான்கள் மாதிரி இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

 

இதனால் அதிருப்தியான மற்ற தயாரிப்பாளர்கள் பாரதிராஜா அப்படி கூறியது தவறு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். இந்நிலையில் இதற்கு விளக்கம் தெரிவித்து ட்விட்டரில் பாரதிராஜா பதிவிட்டுள்ளார். அதில், “வணக்கம், என் பாசத்துக்குரிய தயாரிப்பாளர்களே இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் "நோஞ்சான்" என்கின்ற வார்த்தை நம் சக தயாரிப்பாளர்களைக் காயப்படுத்தும் விதமாகப் பேசியிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.

 

திரைத்துறையில் முதலாளித்துவமாக இருந்த தயாரிப்பாளர்கள், இன்று யார் யாருக்கோ அடிபணிந்து, ஒடுக்கப்பட்டு செயலற்ற நிலையில் திரியும் அவல நிலையைக் கண்டு கோபத்தில் வெளிவந்த வார்த்தைதான் தவிர வேறு எந்த உள்நோக்கத்துடன் நான் கூறவில்லை. மனதைக் காயப்படுத்தும் விதமாக பேசவேண்டும் என்கிற திட்டமிடுதல் இல்லை. இந்த வார்த்தை நம் தயாரிப்பாளர்களை உண்மையிலே காயப்படுத்திருந்தால், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று அர்த்தம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய காவலாளி... ஏ.வி.எம் வாசலில் நின்று சபதம் எடுத்த பாரதிராஜா!

Published on 17/08/2021 | Edited on 17/08/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

தமிழ்த்திரையுலகில் முன்னணி இயக்குநராகக் கொடிகட்டிப் பறந்தவர் பாரதிராஜா. புதுமை இயக்குநரான பாரதிராஜா எப்படி ஆழமான முத்திரைகளைப் பதித்தார் என்பது வரலாறு. ஆரம்பக்காலத்தில் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி, அதில் கிடைத்த நீண்ட அனுபவம் மூலமாக 16 வயதினிலே படத்தை இயக்கினார். உதவி இயக்குநராகச் சேர்வதற்கு முந்தைய காலகட்டம் பாரதிராஜாவிற்கு எப்படி இருந்தது?

 

அந்தக் காலகட்டங்களில் வடபழனியில் நிறைய ஸ்டூடியோக்கள் இருக்கும். இன்றைக்கு அவை மருத்துவமனைகளாகவும் திருமண மண்டபங்களாகவும் மாறிவிட்டன. 30 வருடத்திற்கு முன்பு ஏ.வி.எம் ஸ்டூடியோவைப் பார்ப்பதற்கே கண்கொள்ளா காட்சியாக இருக்கும். ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குள் எல்லோராலும் சாதாரணமாக நுழைந்துவிட முடியாது. வாசலிலேயே செக்யூரிட்டி தடுத்துவிடுவார்கள். ஏ.வி.எம் ஸ்டூடியோ வளாகத்திற்குள் நடந்து செல்வதையே பலர் பிறவிப்பயனாக நினைப்பார்கள். ஏ.வி.எம் மட்டுமல்ல வாகினி, சத்யா, ஜெமினி ஆகிய ஸ்டூடியோவிற்குள் நுழைவதென்பதும் பெரிய விஷயம். முதன்முறையாக பி.ஆர்.ஓவாக அந்த ஸ்டூடியோவிற்குள் நுழைந்தபோது எனக்கும் அதே உணர்வுதான் இருந்தது. 

 

நடிகராக வேண்டும் என்ற ஆசையுடன்தான் பாரதிராஜா ஊரிலிருந்து சென்னைக்கு வந்தார். இங்கு வந்து நடிக்க வாய்ப்பு கேட்டு ஏ.வி.எம் ஸ்டூடியோவிற்குச் சென்றுள்ளார். வழக்கம்போல வாசலிலேயே செக்யூரிட்டி தடுத்து நிறுத்திவிடுகின்றனர். கடைசியில் அவரை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுகின்றனர். அதில், அதிருப்தியான பாரதிராஜா, 'பெரிய நடிகராகி இதே ஸ்டூடியோவிற்குள் ஒருநாள் நான் நுழைவேன்' என வெளியே நின்று சபதம் எடுத்துக்கொண்டு கிளம்பிவந்தாராம். அப்படியே காலங்கள் ஓடின. ஒரு கட்டத்தில் இயக்குநராக முடிவெடுத்த பாரதிராஜா, ஜெகநாதன், ஏ.எஸ்.பிரகாசம், ரா.சங்கரன் உட்பட பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அதன் பிறகு அவர் இயக்கிய 16 வயதினிலே திரைப்படம் வெளியானபோது பெரிய அளவில் பேசப்பட்டது. யார் இந்த பாரதிராஜா... இப்படிப்பட்ட ஒரு திறமைசாலி எங்கிருந்து வந்தார் என அனைவரும் பேசவும் தேடவும் ஆரம்பித்தனர்.

 

அதனைத் தொடர்ந்து வெளியாகிய கிழக்கே போகும் ரயில், தேவி காம்ப்ளக்சில் 50 வாரங்கள் ஓடியது. அதன் பின்னர் வெளியான புதிய வார்ப்புகள் 175 நாட்கள், சிகப்பு ரோஜாக்கள் 100 நாட்கள், நிறம் மாறாத பூக்கள் 125 நாட்கள் என தொடர்ந்து 5 வெற்றிப்படங்கள் கொடுத்தார். இந்த ஐந்து படங்கள் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குநர் என்றால் அது பாரதிராஜாதான் என்றானது. பாரதிராஜா படம் வெளியாகிறது என்றால் தேவி பாரடைஸ் தியேட்டரில் ஒரே நேரத்தில் ஆயிரம்பேர் அமர்ந்து படம் பார்ப்பார்கள். எந்த ஏ.வி.எம் ஸ்டூடியோ வாசலில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டாரோ பின்னாட்களில் அதே நிறுவனம் பாரதிராஜா இயக்கிய படத்தைத் தயாரித்தது. எந்த ஸ்டூடியோவில் அவமானப்படுத்தப்பட்டாரோ அதே நிறுவனத்திற்கு படம் இயக்குவதென்பது எவ்வளவு பெரிய வெற்றி என யோசித்துப்பாருங்கள். இயக்குநராகத் தன்னை நிரூபித்த பின், ராஜமரியாதையுடன் அந்த ஸ்டூடியோ வளாகத்திற்குள் நடந்தார் பாரதிராஜா.

 

 

Next Story

கண்கலங்கிய பாரதிராஜா... படுத்த படுக்கையில் நடிகர் பாபு!

Published on 10/01/2021 | Edited on 10/01/2021
barathiraja

 


தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா. அவருடைய ‘என் உயிர்த் தோழன்’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் பாபு.

 

அண்மையில் அவரது உடல்நிலை குறித்து வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் படத்திலேயே தனது நடிப்பால் கவனம் பெற்ற பாபுவுக்கு, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. 14 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் பாபு. ஆனால், மனசார வாழ்த்துங்களேன் படத்தில் நடித்தபோது பெரும் சோதனை ஏற்பட்டது.

 

ஒரு சண்டைக் காட்சிக்காக மாடியிலிருந்து குதித்தபோது அவருக்கு முதுகில் அடிபட்டது. தீவிர மருத்துவ சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்தார் நடிகர் பாபு. இருந்தபோதிலும் அவரால் பழையமாதிரி எழுந்து நடமாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதன்பிறகு 20 வருடமாக படுத்த படுக்கையாகவே சிகிச்சை பெற்று வருகிறார்.

 

நடிகர் பாபுவை அறிமுகம் செய்த இயக்குனர் பாரதிராஜா அண்மையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க நேரில் சென்றிருந்தார். அப்போது அவர் கண்கலங்கி நடிகர் பாபுவுக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்தார். கஷ்டத்தில் இருக்கும் பாபுவின் மருத்துவ உதவிக்காக நிதியுதவி அளித்துவிட்டு வந்துள்ளார்.பாபுவை பாரதிராஜா சந்தித்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வரைலாகி வருகிறது.