Skip to main content

“படப்பிடிப்பு நடத்த லஞ்சம் கேட்பார்கள்” - பாக்யராஜ்

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
Bhagyaraj latest speech

எஸ்.ஆர். பிலிம் பேக்ட்ரி சார்பில் ராஜன் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இமெயில்’. இப்படத்தில் அசோக்குமார், ராகினி திவிவேதி, ஆதவ் பாலாஜி, ஆர்த்தி ஸ்ரீ உள்ளிட்டோர் முண்ணனி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் லொள்ளு சபா மனோகர், வனிதாஸ்ரீ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களிலும் பில்லி முரளி வில்லனாகவும் நடித்துள்ளனர். அவினாஷ் கவாஸ்கர் இப்படத்திற்கு இசையமைக்க திரவுபதி புகழ் ஜுபின் பின்னணி இசை மேற்கொண்டு இருக்கிறார். தமிழ், கன்னடம் என இரு மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.  

இதில் இயக்குனர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கே.ராஜன், மதுராஜ், நடிகர்கள் அருள்தாஸ், நடிகை வனிதா விஜயகுமார், கோமல் சர்மா, ரத்னா, லொள்ளு சபா மனோகர், சிதம்பரம், ஆரஞ்சு மிட்டாய் பிரபா, முத்துக்குமார், இந்திய தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும் நிறுவனருமான சாலமன், சமூக சொற்பொழிவாளர் முகிலன், தொழிலதிபர்கள் எஸ்.ஆர் பாபு, ராஜசேகர் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, “சிறு பட தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை தயாரிப்பாளர் ராஜன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நானும் கூட அவ்வப்போது இதுபற்றி கூறி வருகிறேன். ஒரு வளாகத்தில் நான்கு திரையரங்குகள் இருந்தால், அதில் ஒன்றை கட்டாயம் சிறுபட வெளியீட்டுக்காக கொடுக்க வேண்டும் என ஒரு சட்டமே கொண்டு வர வேண்டும். நிறைய திரையரங்குகள் கொடுத்தால் தானே மக்கள் வந்து படத்தை பார்த்து பாராட்டுவார்கள். இந்த படத்தின் நாயகன் அசோக் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி. ரொம்பவே கொடுத்து வைத்தவர். படத்தில் அவரது காட்சிகளை பார்க்கும்போது கண்கொள்ளாக் காட்சியாக தெரிந்தது. அதுமட்டுமல்ல இந்த படத்தில் சண்டை காட்சிகளை நன்றாக நடித்துள்ளார்.

படம் முடியும்போது இந்த படத்தின் தயாரிப்பாளரை தனிமரமாக விட்டு விட்டார்கள் என்று சொன்னார்கள். கட்டாயம் சோதனைகள் வரும். சோதனை வந்தால் தான் நல்லது. அதையெல்லாம் தாண்டி தான் சந்தோசத்தை அனுபவிக்க முடியும். இமெயில் வருவதற்கு முன்பு எல்லாவற்றையும் பேப்பரில் தான் எழுதி அனுப்பி கொண்டிருந்தோம். இமெயில் வந்த பிறகு பேப்பரின் தேவை குறைந்து விட்டது. அதனால் மரங்களை வெட்டுவதும் குறைந்து இயற்கையும் பாதுகாக்கப்பட்டது. அதுமட்டுமல்ல நிறைய இளைஞர்கள் காலணி அடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால் முன்பெல்லாம் ஒரு பெண்ணிடம் காதலை சொல்ல லவ் லெட்டர் கொடுத்து, அந்தப் பெண் உடனே கோபமாகி காலணியை கழட்டுவார். இந்த இமெயில் வந்தவுடன் அந்த அவசியம் இல்லாமல் போய்விட்டது. இதற்கு மட்டுமல்ல.. சில பெரிய மனிதர்களிடம் கூட தடுமாற்றம், பயம் காரணமாக நாம் சொல்ல முடியாத விஷயங்களை சொல்வதற்கு இந்த இமெயில் உதவுகிறது. 

ஆன்லைனில் தான் மோசடி நடக்கிறது என்றில்லை. ராஜன் சார் சொன்னது போல படப்பிடிப்பு நடித்த அனுமதி வாங்க சென்றாலும் அந்த இடத்தில் இருப்பவர்கள் லஞ்சம் கேட்பார்கள்.. அங்கே ஒரு தனி யூனியன் வைத்திருப்பார்கள்.. அதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கு தொல்லை கொடுப்பார்கள். அந்த மாதிரி கண்ணுக்கு தெரிந்து நிறைய மோசடிகள் நாட்டில் நடக்கிறது. தனி மனிதனாக பார்த்து திருந்தினால் மட்டுமே போன்ற மோசடிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் குறையும்” என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“தமிழர்கள் அப்படியில்லை” - பாக்கியராஜ் வருத்தம் 

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Bhagyaraj about manjummel boys writers review

சசிகலா புரடக்சன்ஸ் நிறுவனம் வழங்கும் தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் தயாரிப்பில், இயக்குநர் நாஞ்சில் இயக்கத்தில், நடிகை ஆண்ட்ரியா முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘கா’. சுந்தர் சி பாபு இசையமைத்துள்ள இப்படம் மார்ச் 29 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பாக்கியராஜ், ஆர்.வி. உதயகுமார், தயாரிப்பாளர் கே. ராஜன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.  

இயக்குநர் பாக்யராஜ் பேசுகையில், “சசிகலா புரடக்சன்ஸ் எனக்குத் தெரிந்தவர்கள். அதனால் அவர்கள் அழைத்தால் உடனே வந்துவிடுவேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். ஆண்ட்ரியா இப்படத்தில் எந்தளவு கடினமாக உழைத்துள்ளார் என இயக்குநர் கூறினார். அவருக்கு வாழ்த்துகள். இயக்குநர் சினிமா என்பது அனுபவம் என்றார். அவர் சொன்னது படம் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டியது. அந்த காலத்தில் வெளிவரும் ரிவால்வர் ரீட்டா போன்ற பெண்கள் நடிக்கும் ஆக்சன் படங்கள் எனக்குப் பிடிக்கும். விஜய சாந்தி இதுபோல் படங்கள் செய்தார். இப்போது ஆண்ட்ரியா ஆக்சன் செய்துள்ளார். பார்க்கும் ஆர்வம் அதிகமாக உள்ளது” என்றார். 

மேலும் மஞ்சும்மல் பாய்ஸ் படம் குறித்து பேசிய அவர், “மஞ்சும்மல் பாய்ஸ் படம் மலையாளத்தை விட இங்குதான் அதிகம் ஓடுகிறது. அடுத்த ஊரில் எடுக்கும் படங்கள் ஓடுகிறது. மக்கள் ரசிப்பதால் தான் ஓடுகிறது. நம்மூர் எழுத்தாளர் அதை காட்டமாக விமர்சித்துள்ளார். அதிலும் படத்தை மட்டுமின்றி கேரள மக்களை விமர்சித்து விட்டார். அது தமிழனுடைய பண்பாடு கிடையாது. நாம் அனைவரையும் பாராட்டி தான் சொல்லுவோமே தவிர இறங்கி விமர்சனம் செய்தது கிடையாது. பெரிய எழுத்தாளர் இப்படி பேசியது மனதுக்கு வருத்தமாக இருக்கிறது. இதை இப்போது சொல்லக் காரணம் தமிழர்கள் யாரும் கண்டிக்கவில்லையே எனக் கேரள மக்கள் நினைத்துவிடக் கூடாது. தமிழர்கள் அப்படியில்லை” என்றார்.

Next Story

“சொன்னதின் நோக்கம் இது தான்” - போலீஸ் அறிக்கைக்கு பாக்கியராஜ் தன்னிலை விளக்கம்

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
k bhagyaraj explained police statement

இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தனது அனுபவங்களை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கடந்த 12 ஆம் தேதி நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற தலைப்பில், “கோவை  மாவட்டம் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோயில் அருகே ஒரு ஆறு உள்ளது. அந்த ஆற்றில் செல்லும் மக்கள் திடீரென்று காணாமல் போய்விடுவார்கள். தொடக்கத்தில் ஆற்றில் உள்ள சுழலில் மாட்டிக் கொள்வார்கள் என்றுதான் சொல்லப்பட்டது. உள்ளூர்க்காரர் ஒருவர் குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு உடலை மீட்டுத் தருவார்.

நாளடைவில் தான் தண்ணீருக்குள் மூச்சைப் பிடிக்கும் தன் திறமையை அவன் தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்தது. தண்ணீருக்குள் இறங்குபவர்களை பின்தொடர்ந்து, திடீரென்று காலை பிடித்து இழுத்து பாறைக்குள் சிக்க வைத்துவிடுவார். பிறகு இவரே வெளியில் வந்து அவர்களது உடலை மீட்டுக் கொடுப்பதை தொழிலாக வைத்துள்ளார். இது மிகவும் வருத்தமளிக்கிறது. அந்தப் பகுதிக்கு செல்வோர் கவனமாக இருங்கள்..” என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. 

பின்பு பாக்கியராஜ் கூறிய விஷயங்கள் குறித்து அறிக்கை வெளியிட்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பாக்யராஜின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என கூறியிருந்தார். மேலும் அந்த நீண்ட அறிக்கையில், வதந்தியை உருவாக்குவதும் பரப்புவதும் குற்றச்செயல் என எச்சரித்திருந்தார். இந்த நிலையில் காவல் துறை அறிக்கைக்கு பதில் தெரிவித்து பாக்கியராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “போலீஸுக்கு எப்போதுமே தப்பு நடக்கும் போது தெரியாது. அதுக்கப்புறம் தான் அவுங்க கண்டுபிடிப்பாங்க. அந்த சம்பவத்தில் போலீஸை எந்த விதத்திலும் சம்மந்தப்படுத்தவில்லை. சொன்னதின் நோக்கமே மீண்டும் இது போன்று நடந்து விடக்கூடாது என்பதற்காகத் தான். ஆனால் இதை சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மறைவோடு தொடர்பு படுத்திவிட்டார்கள். 

அவரது கார் விபத்து ஆன பின்பு அவரது உடல் தேடப்பட்டு வந்தது.  உடலைத் தேடி கண்டுபிடித்து தருபவருக்கு ரூ.1 கோடி வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தார்கள். அந்த பரிசுத் தொகையால் இந்த செய்தி பரபரப்பாகி விட்டது. அதனால் இரண்டு சம்பவத்தையும் தொடர்புபடுத்தி அனைவரிடத்திலும் கருத்து கேட்கத் தொடங்கிவிட்டனர். அது போலீஸ் வரை போய்விட்டது. அவர்கள் வதந்தி என சொல்லிவிட்டனர். அதற்கு விளக்கம் கேட்டு என்னிடம் நிறைய பேர் கேட்கின்றனர். காவல் துறையினரின் கவனக் குறைவு, அவர்கள் கண்டுபிடிக்கவில்லை என எதையும் நான் சொல்லவில்லை. சொன்னதின் நோக்கமே மீண்டும் இது போன்று நடந்து விடக்கூடாது என்பது மட்டுமே. காவல் துறையை நான் சம்மந்தப்படுத்தி பேசவில்லை. ஆனால், இப்போது திருப்பி நான் விசாரித்த போது, 15 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதாக தெரியவந்தது" என தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.