Skip to main content

தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்? - விஜய் சேதுபதிக்கு பாரதிராஜா கடிதம்!!!

 

பரதிரஜ

 

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை படமாக்கப்படுகிறது. முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்திற்கு '800' என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியானது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல், ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பல எதிர்ப்புகளையும் தாண்டி இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.

 

மேலும், இந்தப் படத்தில் அரசியல் இல்லை என்றும் முத்தையாவின் வாழ்க்கை வரலாற்றைச் சம்மந்தப்படுத்திதான் படம் உருவாகிறது என்றும் தெரிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.

 

இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜா விஜய்சேதுபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “மக்களிடம் நல்ல பெயர் எடுப்பது ரொம்பக் கடினம். ஆனால் பொதுமக்கள் வெகு வேகமாகவே உங்கள் மீது அன்பைக் கொட்டியுள்ளனர். 

 

அதற்கு இயல்பான, யதார்த்தமான பேச்சும்.. கடைக்கோடி மக்களின் எண்ண பிரதிபலிப்புமே காரணம். இன்னும் நீண்டு செல்லும் இந்தப் பயணத்தில் மேலும் புகழ் பெறவே வாழ்த்துகிறேன். 

 

நிற்க. 

 

Ad

 

தாங்கள் செய்யவிருக்கும் '800' என்ற படம் பற்றிக் கேள்விப்பட்டேன். இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனைப் பற்றிய பயோபிக் படமாக உருவாகப் போவதாக அறிந்தேன். 

 

நம் ஈழத்தமிழ்ப் பிள்ளைகள் செத்து விழுந்த போது பிடில் வாசித்தவர் இந்த முத்தையா. சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்தவர். 

 

விளையாட்டு வீரனாக என்னதான் சாதித்தாலும், தன் சொந்த மக்கள் கொல்லப்பட்டபோது சிரித்து மகிழ்பவர் என்ன சாதித்து என்ன பயன்? 

 

எத்தனையோ துரோகங்களை எம்மினம் கடந்து வந்துள்ளது. எங்களைப் பொருத்தவரை முத்தையா முரலைதரனும் ஒரு நம்பிக்கைத் துரோகிதான். 

 

அடிபட்ட வலியை நினைவுகூறும் மக்கள் என்னிடம், ஏன் நம்ம விஜய் சேதுபதி அதில் நடிக்கிறார்? மறுத்திருக்கலாமே... எனக் கேட்கின்றனர். 

 

அவர்களின் வேதனையும் வலியும் புரியும் அதேசமயம் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் என்னால் காணமுடிந்தது. 

 

உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் சார்பாக நான்  கோரிக்கை வைக்கிறேன்

 

இனத்துரோகம் செய்த ஒருவரின் முகம் காலகாலமாக உங்கள் முகமாக வெறுப்போடே எம் மக்கள் பார்க்க வேண்டுமா? 

 

எந்த வகையிலாவது தமிழின வெறுப்பாளனின் வாழ்வியல் படத்தில் நடிப்பதை தவிர்க்க முடியுமா பாருங்கள். 

 

தவிர்த்தால் எப்போதும் எம் ஈழ மக்களின் மனதிலும், என் மனதிலும் நன்றியோடு நினைவுகொள்ளப்படுவீர்கள். 

 

பின் குறிப்பு :  '800' திரைப்படத்தை எடுக்க இருக்கும் Dar media நிறுவனம் நேற்று மாலை ஒரு அறிக்கை வெளியிட்டதை அறிந்தேன்.

 

'800' - திரைப்படம் அரசியல் படமில்லை. ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்க இருக்கிறோம்.. இந்தத் திரைப்படம் எடுத்தால் பல ஈழத்தமிழர் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமை உலக அரங்கில் வெளிக் காட்ட அடித்தளமாக இருக்கும் என்று வெளியிட்டு இருந்தீர்கள். துரோகிக்கு துணை போகும் உங்களை நினைத்து கோபப்படுவதா? இல்லை உங்கள் அறியாமையைக் கண்டு சிரிப்பாதா? அனைத்துத் துறைகளிலும் உலகரங்கில் தமிழர்களின் பங்களிப்பு என்னவென்று வரலாற்றைப் புரட்டிபாருங்கள்.. பாடம் சொல்லும்.

 

Nakkheeran

 

ஒரு செய்தியை அழுத்தமாக இங்கு பதிவிட விரும்புகிறேன். உங்களுக்கு வேண்டுமானால் முத்தையா முரளிதரன் சிறந்த விளையாட்டு வீரனாக கருதலாம். எங்களைப் பொறுத்தவரை அவர் இனத் துரோகி. துரோகிகளை ஒரு போதும் தமிழினம் மன்னிக்க இயலாது. ஒரு போராளியின் தியாகம், ஆயிரம் முத்தையா முரளிதரன் வந்தால் கூட ஈடு செய்யமுடியாது. உண்மையிலேயே நீங்கள் தமிழர்களின் திரைக் கலைஞர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களின் திறமையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால்.. அகிம்சை வழியில் போராடி தியாக இன்றும் சுடர்  விட்டுக் கொண்டிருக்கும் தம்பி திலீபனின் வாழ்க்கை வரலாறு, அல்லது எங்கள் மக்களுக்காக தன்னையே உயிராயுதமாக உருக்கி எம் மண்ணோடு, காற்றோடு, கலந்துபோன பல்லாயிரக்கணக்கான போராளிகளில், ஒரு மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை, உலகரங்கில் எடுக்க முன் வா... ஒட்டு மொத்த தமிழர்களும், திரைத் துறையினரும் இலவசமாகப் பணியாற்றக் காத்திருக்கோம்" என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்