15 வது சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விழா மற்றும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட படங்கள் அறிவிப்பு நிகழ்ச்சி மற்றும் ‘வீரத்தின் மகன்’ திரைப்பட திரையிடல் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளரும், இயக்குநருமான வி.சி.குகுநாதன், நடிகர் போஸ் வெங்கட், இயக்குநர் கெளரவ், தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி, இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன், பி.ஆர்.ஓ சங்க முன்னாள் செயலாளர் பெரு துளசி பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.
நார்வே தமிழ்த் திரைப்பட விழாவின் இயக்குநர் வசீகரன் சிவலிங்கம் பேசுகையில், “ஆஸ்கார் உள்ளிட்ட வெளிநாட்டு விருதுகள் மற்றும் திரைப்பட விழாக்களின் பின்னால் நம் மக்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு என்று தனியான திரைப்பட விழாக்கள் இல்லை. சுமார் 222 நாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும், அவர்களது படைப்புகளுக்கும் தனி அங்கீகாரம் கிடைக்க வேண்டும், அதற்காக தமிழர்களுக்கான திரைப்பட விழா ஒன்றை உருவாக்க வேண்டும் என்று நான் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் நினைத்து வந்தேன். பிறகு 20210 ஆம் ஆண்டு அதற்கான முதல் அஸ்த்திவாரத்தை அமைத்து, சிறுக சிறுக என்று இன்று மிகப்பெரிய விழாவாக நார்வே தமிழ்த் திரைப்பட விழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
நாம் ஆரம்பிக்கும் போது எனக்கு எந்தவித ஆதரவும் கிடைக்கவில்லை. நார்வே நாட்டில் 15 ஆயிரம் மக்கள் தான் இருப்பார்கள், ஏதோ ஒரு திரைப்பட விழா என்று தான் நினைப்பார்கள். ஆனால், இன்று சுமார் இரண்டரை கோடிக்கு மேல் நான் விதைத்திருக்கிறேன். நம் படைப்புகளை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்கான முயற்சி தான் இந்த திரைப்பட விழா. ஆனால், விருது அறிவிக்கப்பட்ட 25 கலைஞர்களையும் நார்வே நாட்டுக்கு அழைத்துச் சென்று விருது வழங்க வேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனால், அவர்களை அங்கே அழைத்து செல்வது என்பது மிகப்பெரிய பொருட்செலவு. அதனால், இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன், விருது அறிவிக்கப்பட்ட அனைத்து கலைஞர்களையும் நார்வே நாட்டுக்கு அழைத்துச் சென்று கெளரவிக்க வேண்டும், அதற்கு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இந்த ஆண்டு முதல், ஈழத் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததோடு, தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்த எங்கள் புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் பெயரில் விருது வழங்குவதை பெருமையாக அறிவிக்கிறோம். நாங்கள் தொடர்ந்து இந்த விழாவை நடத்திக் கொண்டிருப்போம். எனக்கு பிறகு என் இடத்தில் இருந்து நார்வே தமிழ்த் திரைப்பட விழாவை நடத்துவார்கள். நிச்சயம் ஒரு நாள் ஆஸ்கார் விருதுக்கு சமமான விருதாக சர்வதேச நார்வே தமிழ்த் திரைப்பட விருது இருக்கும், என்று கூறி விடைபெறுகிறேன்.” என்றார்.