ashok selvan speech in Por Thozhil press meet

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் உருவாக்கி வரும் படம் 'போர் தொழில்'. இப்படத்தை அப்ளாஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்க அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நிகிலா விமல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜுன் 9 தேதி வெளியாகவுள்ளதால் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisment

நடிகை நிகிலா விமல் பேசுகையில், 'முன்னதாக இயக்குநர் ஒருவர் என்னிடம் கதை சொல்ல வருகை தந்தார். லேப்டாப்பை திறந்து வைத்து, கதையை சொல்லத் தொடங்கினார். கதையை முழுவதுமாக சொல்லி முடித்தார். அதன் பிறகு நான் அவர் திறந்து வைத்த லேப்டாப்பை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர், ‘லேப்டாப்பை ஒரு பில்டப்புக்காக திறந்து வைத்திருக்கிறேன். மற்றபடி அதில் எந்த விசயமும் இல்லை’ என்றார். இதற்கு அடுத்த நாள் தான் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை சொல்ல வந்தார். அவரும் வந்தவுடன் லேப்டாப்பை திறந்து வைத்தார். மனதில் நேற்றைய சம்பவம் ஓடியது. இருப்பினும் கதையை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது எங்கிருந்தோ இசை ஒலித்துக் கொண்டிருந்தது. அதன் பிறகு அந்த இசை, லேப்டாப்பிலிருந்து ஒலிக்கிறது என சொன்னார். முதன் முதலாக பின்னணி இசை ஒலிக்க, கதையை சொல்லி என்னை கவர்ந்தார்" என்றார்.

Advertisment

நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், ''எனக்கும் மிகவும் பிடித்த திரைக்கதை இது. 2015 ஆம் ஆண்டில்.. இப்படத்தில் மூலக்கதை குறித்து நானும், நண்பரான இயக்குநர் விக்னேசும் விவாதித்திருக்கிறோம். தமிழ் சினிமாவில் தோன்றும் காவல் துறை உயரதிகாரி போல் மீசையை வைத்து நடிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. ஆனால் இந்த திரைப்படத்தில் காவலர் என்றால் மீசை இருக்க வேண்டுமா? என்ற கேள்வியை எழுப்பி, மீசை இல்லாத காவலராக நடித்திருக்கிறேன். இதற்கு நேர் எதிராக கரடு முரடான தோற்றத்தில் மூத்த காவல் அதிகாரியாக சரத்குமார் நடித்திருக்கிறார். காவல்துறையில் பயிற்சிகளை முடித்துவிட்டு கள அனுபவம் இல்லாத ஒரு இளம் காவலரும், கள அனுபவம் அதிகம் உள்ள மூத்த காவல் அதிகாரியும் எப்படி ஒருங்கிணைந்து பணியாற்றுகிறார்கள்? இவர்கள் இருவரும் இணைந்து எப்படி ஒரு கொலை குற்றவாளியை கண்டுபிடிக்கிறார்கள்? என்பது தான் படத்தின் கதை. எனக்கு காதலியாக நடிக்கவில்லை. அதில் சின்ன வருத்தம் இருக்கிறது. படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் திறமையானவர்கள்.

நடிகர் ஆர்.சரத்குமார் பேசுகையில், ''இயக்குநர் விக்னேஷ் என்னை சந்தித்து கதை சொல்லும் போது ஒரு சிறிய அளவிலான ஸ்பீக்கரை டேபிளில் வைத்தார். அதிலிருந்து இசை ஒலிக்க.. பின்னணி இசையுடன் ஒரு கதையை முழுவதுமாக விவரித்தார். இப்படத்தின் கதையை நேர்த்தியாக விவரிக்க, முழுமையாக தன்னை தகுதிப்படுத்திக் கொண்டிருந்தார். அவருடைய திட்டமிடல் என்னை மிகவும் கவர்ந்தது. அவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய இயக்குநராக உயர்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் கூட படப்பிடிப்பின் போது வேறு ஏதேனும் கதைகள் இருக்கிறதா? என்று கேட்டபோது, ‘இருக்கிறது. முதலில் இதை நான் நிறைவு செய்கிறேன்’ என உறுதிப்பட தெரிவித்தார். இதில் அவர் ஒரு முழுமையான கலைஞர் என்பதை உணர முடிந்தது. இதுவரை 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தாகிவிட்டது. 40க்கும் மேற்பட்ட படங்களில் காவல்துறை அதிகாரியாகவும் நடித்தாகிவிட்டது. இதில் என்ன வித்தியாசம்? என்றால், மூத்த அதிகாரியாக பணியாற்றுவதுடன் மட்டுமல்லாமல், புதிதாக பயிற்சிக்கு வரும் இளம் காவலர்களுக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரியாகவும் நடித்திருக்கிறேன்" என்றார்.