Skip to main content

‘தி கேரளா ஸ்டோரி’ பட இயக்குநருடன் கைகோர்த்த ஏ.ஆர். ரஹ்மான்

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

ar rahman is the music director of the kerala story movie director next project

 

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியானது முதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல சர்ச்சையைக் கிளப்பியது.

 

கலவையான விமர்சனத்தை இப்படம் பெற்ற நிலையில் உலகம் முழுவதும் ரூ.238 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் இந்த படத்திற்குத் தொடர் எதிர்ப்பு அதிகரிக்க, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து தி கேரள ஸ்டோரி படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன. மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்குத் தடை விதித்து உத்தரவிட்டார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. உண்மை சம்பவத்தைத் தழுவி இப்படம் எடுத்துள்ளதாகப் படக்குழு குறிப்பிட்ட நிலையில் இப்படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் மீண்டும் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியில் படம் இயக்கவுள்ளார்.

 

பிரபல தொழிலதிபரும் சகாரா குழுமத் தலைவருமான சுப்ரதா ராயின் வாழ்க்கை வரலாற்றை 'சஹாரா ஸ்ரீ’ (SAHARASRI) என்ற தலைப்பில் படமாக இயக்கவுள்ளார். இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. சந்தீப் சிங் தயாரிக்கிற இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. சுப்ரதா ராய், தனது நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தவறியதாகக் கூறி 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்பு டெல்லி திகார் ஜெயிலில் 2 வருடம் சிறைத் தண்டனை பெற்று பரோலில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஏ.ஆர். ரஹ்மான் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்', ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வரும் 'லால் சலாம்', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இது போக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்த படத்திற்கு சௌரவ் கங்குலி பாராட்டு

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
sourav ganguly praised ajay devgn starring ar rahman musical maidaan movie

அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜய் தேவ்கன், பிரியாமணி நடித்துள்ள படம் மைதான். இப்படம் இந்திய கால்பந்து ஆட்டம் குறித்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி, 1952 மற்றும் 1962க்கு இடையில் இந்திய கால்பந்தில் பங்காற்றிய சையத் அப்துல் ரஹீமின் கதையை விவரிக்கும் வகையில் உருவாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் உருவான இப்படம் கடந்த 10ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, பாராட்டு தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் பாராட்டி பதிவிட்டுள்ள பதிவில், “இந்தியாவின் புகழ்பெற்ற கால்பந்து பயிற்சியாளர் சையது அப்துல் ரஹீம் மற்றும் இந்திய கால்பந்தின் பொற்காலத்தின் வசீகரமான சித்தரிப்பான மைதான் படத்தை தவறவிடாதீர்கள். கட்டாயம் பார்க்க வேண்டிய இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இந்திய கால்பந்து நட்சத்திரங்களின் வாழ்க்கையைப் பெரிய திரையில் பார்த்து கண்டுகளியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.