Skip to main content

இலக்கை நோக்கி பயணிக்கும் இளையராஜா, ஏ.ஆர் ரஹ்மான்

Published on 01/09/2022 | Edited on 01/09/2022

 

ar rahman ilaiyaraaja at airport

 

மாநிலங்களைவை உறுப்பினரான இளையராஜா சில தினங்களுக்கு முன்பு இசைக் கச்சேரிக்காக ஹங்கேரி நாட்டிற்கு புறப்பட்டார். அண்மையில்கூட அவர் தங்கியிருந்த விடுதியில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இதனிடையே ஏ.ஆர் ரஹ்மான் கனடா நாட்டிற்குச் சென்றார். அங்கு அவரை கௌரவிக்கும் வகையில், மர்காம் (Markham) நகரத்தில் உள்ள ஒரு தெருவிற்கு 'ஏ.ஆர் ரஹ்மான்' எனப் பெயர் வைக்கப்பட்டது. இது தொடர்பாக சில புகைப்படங்களைப் பகிர்ந்து அறிக்கையும் வெளியிட்டிருந்தார் ஏ.ஆர் ரஹ்மான். 

 

இந்நிலையில் ஏ.ஆர் ரஹ்மான் இளையராஜாவுடன் இருக்கும் சிறிய வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த பதிவில், "வெவ்வேறு கண்டங்களில் இருந்து இருவரும் திரும்பி வருகிறோம்... ஆனால் இலக்கு எப்போதும் தமிழ்நாடுதான்" எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

 

தமிழ் சினிமாவில் இரு ஜாம்பவன்களாக இருக்கும் ஏ.ஆர் ரஹ்மானும் இளையராஜாவும் ஒரே வீடியோவில் இடம்பெற்றுள்ளதால் இந்த வீடியோவை அவர்களது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ARR (@arrahman)

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இளையராஜா வழக்கில் நீதிபதி விலகல்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ilaiyaraaja song copywright issue case

இளையராஜாவின் 4500 பாடல்களை பயன்படுத்துவதற்காக எக்கோ, அகி உள்ளிட்ட நிறுவனங்கள் அவரிடம் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆனால் 2014ஆம் ஆண்டு, ஒப்பந்தம் முடிந்த பிறகும் காப்புரிமை இல்லாமல் தனது பாடல்களை பயன்படுத்தியதாக எக்கோ, அகி மியூசிக் உள்ளிட்ட சில நிறுவனங்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2019ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. அதில் தயாரிப்பாளரிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களை பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதென்றும், இளையராஜாவுக்கும் இந்த பாடல்கள் மீது தனிப்பட்ட தார்மீக சிறப்பு உரிமை இருக்கிறதென்றும் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து இளையராஜா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அவர்கள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் மீது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இதையடுத்து எக்கோ நிறுவனம் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளரிடமிருந்து பெற்றுள்ளோம். அதனடிப்படையில் இந்த பாடல்களை பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த மனு இன்று நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதி சுப்பிரமணியன் அறிவித்தார். மேலும் இந்த வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் வழக்கை தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தும் உத்தரவிட்டுள்ளார்.