Skip to main content

“தற்கொலை எண்ணம் வந்தபோது...” - மனம் திறந்த ஏ.ஆர். ரஹ்மான்

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
ar rahman about spirituality

இந்தியத் திரைப்படத் துறையில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர். ரஹ்மான், தமிழ், இந்தி, ஆங்கிலம் எனப் பல்வேறு மொழிகளில் பணியாற்றி வருகிறார். இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம், ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்தியேன் நடித்துள்ள அயலான், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக் லைஃப் உள்ளிட்ட பல படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இதில் அயலான் நாளை (12.01.2024) மற்றும் லால் சலாம் அடுத்த மாதம் 9 ஆம் தேதி (09.02.2024) வெளியாகிறது.

ad

இந்த நிலையில், ஆக்ஸ்போர்டு யூனியன் மாணவர்கள் முன்னிலையில் பேசிய ஏ.ஆர். ரஹ்மான், தற்கொலை எண்ணம் குறித்துப் பேசியது தற்போது பலரது கவனத்தைப் பெற்று வருகிறது. நிகழ்ச்சியில் ஒரு மாணவன், ரஹ்மானின் ஆன்மீகம் குறித்த கருத்துக்கள், இருண்ட காலகட்டத்தில் இருந்து வெளியே கொண்டு வந்ததாகத் தெரிவித்து ஏ.ஆர். ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்தார். மேலும் ஆன்மீகம் குறித்து அதிகம் ஏன் பேசுவதில்லை என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்குப் பதிலளித்த ஏ.ஆர். ரஹ்மான், “எல்லாருக்குமே இருண்ட காலகட்டம் இருக்கும். இந்த உலகில் ஒரு சிறிய பயணத்தைத்தான் நாம் மேற்கொள்கிறோம். பிறந்து, போகப்போகிறோம். இந்த இடம் நமக்கு நிரந்தரமானது அல்ல. அடுத்து நாம் எங்கு செல்வோம் என்று தெரியாது. அது ஒவ்வொரு மனிதரின் சொந்த கற்பனை மற்றும் நம்பிக்கைகளைப் பொறுத்தது” என்றார். 

மேலும், “சிறு வயதில் எனக்கு தற்கொலை எண்ணம் வந்தபோது, என் தாய் ‘நீ மற்றவர்களுக்காக வாழும்போது உனக்கு இதுபோன்ற எண்ணங்கள் வராது’ என கூறினார். என் அம்மாவிடமிருந்து கிடைத்த மிக சிறப்பான அறிவுரைகளில் அது ஒன்று. நீங்கள் மற்றவர்களுக்காக வாழும்போது, சுயநலமாக இல்லாமல் இருந்தால் உங்கள் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருப்பதை உணர்வீர்கள். வேறொருவருக்காக இசையமைப்பது, எதையாவது எழுதுவது, சாப்பாடு வாங்க முடியாத ஒருவருக்கு உணவு வாங்கி கொடுப்பது அல்லது யாரையாவது பார்த்து புன்னகைப்பது இவைதான் நம்மை பயணிக்க வைக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய குறைந்த அறிவே நமக்கு உள்ளது. உங்களுக்காகப் பெரிய விஷயம் ஒன்று காத்திருக்கலாம்” என்றார். 

சார்ந்த செய்திகள்