தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழில் சிம்புவின் 'பத்து தல', ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைக்கிறார். இது போக மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்திலும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
படங்களைத் தாண்டி பல நாடுகளிலும் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார் ஏ.ஆர் ரஹ்மான். வெளிநாடுகளில் இவரது நிகழ்ச்சிக்கு சில நிமிடங்களிலேயே டிக்கெட் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் அவரது அடுத்த இசைக் கச்சேரி மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வருகிற மார்ச் 7ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனைத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த ஏ.ஆர் ரஹ்மான் நிகழ்ச்சி குறித்த விவரத்தையும் அதற்கான போஸ்டரையும் பகிர்ந்திருந்தார்.
அந்த பதிவின் கீழ் ரசிகர் ஒருவர், பல நாடுகளில் இசைக் கச்சேரி நடத்தி வரும் ஏ.ஆர் ரஹ்மான் சென்னையை மறந்துவிட்டாரா என்ற பாணியில், "சார், சென்னை என்றொரு நகரம் இருக்கிறது நினைவிருக்கிறதா?" என கமெண்ட் செய்திருந்தார். அந்த ரசிகரின் கேள்விக்கு தற்போது ஏ.ஆர் ரஹ்மான் பதிலளித்துள்ளார். அந்த ரசிகரின் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து "இசை நிகழ்ச்சிக்கு அனுமதி கிடைக்க 6 மாத காலம் ஆகிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Permissions,permissions,permissions 6months process ..✊ https://t.co/Lx2879U75B— A.R.Rahman (@arrahman) February 8, 2023