Skip to main content

விஜயகாந்த், அஜித், விஜய்.. மூன்று பேருக்கும் முருகதாஸ் தந்த முக்கிய பரிசுகள்!

ஏ.ஆர்.முருகதாஸ்... தமிழ் சினிமாவில் மிக இளம் வயதில் இயக்குனராக அறிமுகமாகி, அடுத்தடுத்து எடுத்து வைத்த பெரிய எட்டுகள் வெற்றி பெற்று பாலிவுட் வரை பிரபலமாகி இருப்பவர். பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான ஃபாக்ஸ் ஸ்டார் இந்திய படங்களை தயாரிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் இவரை தன்னுடன் இணைத்துக்கொண்டது. இப்படி பெரிய வெற்றிகளுக்கு சொந்தக்காரரான முருகதாஸ், சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவரும் இல்லை. கஜினி, கத்தி, சர்கார், பின் மிக தாமதமாக ரமணா என கதை குறித்த புகார்கள் எழுந்தன. ஆனால், அவையெல்லாம் மறையுமளவுக்கு இவரது வெற்றி பெரிதாகியிருக்கிறது.  
 

arm with ajith

 

 

எஸ்.ஜே.சூர்யா மூலமாக அஜித்திற்கு அறிமுகமாகி, கதை சொல்லி, 'தீனா' படத்தை இயக்கிய போது முருகதாஸ் இருபதுகளின் தொடக்கத்தில்  இருந்தார். முதல் படமே பெரிய கமர்ஷியல் வெற்றி. எதிரில் விஜய், சூர்யா நடித்து மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படத்தின் ரீமேக்காக வெளிவந்த 'ப்ரண்ட்ஸ்' படம் குடும்பங்களை கவர்ந்து பெரு வெற்றி பெற, 'தீனா'வோ அஜித்திற்கு இளைஞர்களை ரசிகர்களாக, வெறியர்களாக மெல்ல உருவாக்கிக்கொண்டிருந்தது. 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' என்று எஸ்.பி.பி. குரலில் ஓப்பனிங் சாங், 'தல' என்று அஜித்திற்கு பட்டம், 'கை இருக்கும் கால் இருக்கும்...' என்று பன்ச் வசனம், 'தினக்கு தினக்கு தின தீனா' என்று அஜித் நடந்துவரும்போது இசை... இப்படி அஜித்திற்கு முதல் மாஸ் ஆக்ஷன் படமாக 'தீனா' அமைந்தது. இன்று வரை அஜித்தை ரசிகர்கள் 'தல' என்றே விரும்பி அழைக்கின்றனர். அந்தப் பெயரை தோனிக்காக கிரிக்கெட் வணிகர்களும் ரசிகர்களும் எடுத்துக்கொண்டனர். அஜித், தன்னை நம்பி வாய்ப்பளித்ததற்கு பதிலாக முருகதாஸ் அளித்தது ஒரு மிக முக்கிய பரிசு, 'தீனா'. அதற்குப் பிறகு இருவரும் இணைவதாக அறிவித்து வெளிவந்த 'மிரட்டல்' படத்தின் போஸ்டர்கள் சோசியல் மீடியா இல்லாத போஸ்டர், பேப்பர் காலத்திலேயே வைரல் ஆகின. ஆனால், அந்தக் கூட்டணி தொடராமல் படம் கைவிடப்பட்டது (பின்பு கஜினி என்று வந்தது) ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம்தான்.

ரசிகர்களின் வரவேற்பை பெற்று 'தீனா' வெற்றி பெற்றாலும் விமர்சகர்களை பொறுத்தவரையில் அது மிக சாதாரணமான அல்லது வன்முறையை தூண்டும், இளைஞர்களை கெடுக்கும் படமாகவே இருந்தது. அந்தப் பெயரை முற்றிலும் நீக்கி அதற்கு நேர்மாறாக வெளிவந்து மெகா ஹிட் ஆனது 'ரமணா'. அரசியல் திட்டங்களில் இருந்த விஜயகாந்த்திற்கு 'ரமணா' கொடுத்த மைலேஜ் மிகப் பெரியது. கிராமங்களில் ஏற்கனவே வேரூன்றியிருந்த விஜயகாந்த் மீது அப்போதைய நகரத்து மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஈர்ப்பும் மரியாதையும் ஏற்பட முக்கிய காரணமாக இருந்தது 'ரமணா' பாத்திரம். அஜித்தின் 'வில்லன்', விஜய்யின் 'பகவதி', சிம்புவின் முதல் படமான 'காதல் அழிவதில்லை' என பெரும் போட்டியின் இடையே வெளியாகி முதலிடத்தில் மிகப்பெரும் வெற்றியை பெற்றது 'ரமணா'. 'மன்னிப்பு... தமிழ்ல எனக்குப் பிடிக்காத ஒரே வார்த்தை', 'யார்யா அவரு, எனக்கே அவரை பாக்கணும் போல இருக்கு' என இன்றும் மீம்ஸ்களில் வலம் வரும் பல நல்ல வசனங்களை கொண்டிருந்த அந்தப் படம் முருகதாஸுக்கும் மிக முக்கிய படமாக அமைந்தது. தன்னைப் போன்ற இளம் இயக்குனரை நம்பி கால்ஷீட் கொடுத்த கேப்டனுக்கு முருகதாஸ் அளித்த மிகப்பெரிய பரிசாக அமைந்தது.                                         

நடிகர் விஜய்க்கு அவரது கேரியரில் பல வெற்றிப் படங்கள் அமைந்திருந்தாலும் அவரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்ற மிக முக்கியமான படங்களாக மூன்றை சொல்லலாம். ஒன்று, விஜய்க்கு உண்மையான வெற்றிப் படமாக முதன் முதலில் அமைந்த 'பூவே உனக்காக'. இரண்டு, ஆக்ஷன் கதையில் அவரது முதல் வெற்றிப் படமான 'திருமலை'. அதுவரை விஜய்யின் காதல் படங்கள் மட்டுமே வெற்றி பெற்றன. 'திருமலை' வெற்றிக்குப் பிறகு பல ஆண்டுகளாக லோக்கல் கில்லியாக இருந்த விஜய்யை க்ளாஸ் மாஸ் நாயகனாக வெற்றிகரமாக உருவாக்கியது ஏ.ஆர்.முருகதாஸின் 'துப்பாக்கி'தான். இன்று வரை விஜய்யின் ரசிகர்களை தாண்டி பொதுவான சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த விஜய் படங்களின் லிஸ்ட்டில் 'துப்பாக்கி'க்கு முக்கிய இடமுண்டு. 'துப்பாக்கி' பெற்ற பெருவெற்றி விஜய் - முருகதாஸ் என்ற கூட்டணியை இன்று வரை பலமாக வைத்துள்ளது. அந்த வகையில் 'துப்பாக்கி', விஜய்க்கு முருகதாஸ் தந்த நல்லதொரு பரிசு என்றே சொல்லலாம். 
 

arm with vijay

 

 


இது மட்டுமல்ல நடிகர் சூர்யா பெற்ற முதல் ஆல்-க்ளாஸ் வெற்றி என்பது 'கஜினி' படத்தில் நிகழ்ந்ததே. இப்படி தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களுக்கு வெற்றிப் படங்களை பரிசளித்த முருகதாஸ், இப்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த்தை 'தர்பார்' படத்தில் இயக்கிக்கொண்டிருக்கிறார். அரசியல் அறிவிப்பு செய்திருக்கும் ரஜினிக்கு அது முருகதாஸின் பரிசாக இருக்குமா என்பது விரைவில் தெரியும்.