Skip to main content

‘கடப்பாரையை எடுத்துவந்து அந்த கல்வெட்டை உடைப்பேன்’ - ஆனந்த் ராஜ் ஆவேசம்...

Published on 25/06/2019 | Edited on 25/06/2019

2019-2022ஆம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ஜூன் 23ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன. பல்வேறு தடைகளுக்குபின் திடீரென சொன்ன தேதியிலேயே மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் இத்தேர்தலுக்கான வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது. அப்போது தேர்தலில் வாக்களித்தபின் நடிகர் ஆனந்த் ராஜ் பத்திரிகையாளர்களிடம் பேசியது.
 

anandh raj

 

 

“இது எங்கள் குடும்பத்துக்குள் நடக்கும் சின்ன தேர்தல். 3 ஆண்டுகளுக்கு இந்தக் குடும்பத்தை நடத்துவது யார் என்பதற்கான தேர்தல். இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சி. எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணி நடிகர் சங்கக் கட்டிடப் பணியைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பது என் விருப்பம். தேர்தல் முடிவு வெளியானபிறகும் கட்டிடப் பணி நடக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
 

ஒரு முக்கியமான கருத்தை நான் பல நடிகர்களிடம் பேசினேன். இந்தக் கட்டிடத்தைக் கட்டி முடிக்கும்போது, எப்படி இருந்தாலும் கல்வெட்டு என்று ஒன்று வரும். யார் காலத்தில் கட்டப்பட்டது, யாரால் திறக்கப்பட்டது என ஒரு அடையாளம் இருக்கும். அந்த அடையாளம், ‘தென்னிந்திய நடிகர் சங்கம்’ என்று மட்டுமே இருக்க வேண்டும் என்பது நான் உள்ளிட்ட பல நடிகர்களின் விருப்பம்.
 

அதில், ‘என்னால் திறக்கப்பட்டது’, ‘உன்னால் திறக்கப்பட்டது’ என்று இருந்தால், நானே என் கையால் கடப்பாரை எடுத்துவந்து அந்தக் கல்வெட்டை உடைக்க வேண்டிய நிலை வரும். அப்படி ஒரு நிலை உருவாகாது என்று நம்புகிறேன். இது தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடமாகவே இருக்க வேண்டும். இதிலுள்ள ஒவ்வொரு கல்லுக்கும் ஒருவர் பொறுப்பேற்றுள்ளனர். ஒவ்வொருவருக்கும் கடமை இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நலிந்த கலைஞர்களுக்கு உதவ தமிழக அரசுக்கு நடிகர் சங்கம் கடிதம்...  

Published on 31/03/2020 | Edited on 31/03/2020

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கையாக மத்திய அரசு 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கரோனா தடுப்பு பணிகளுக்கு நிதியுதவி அளிக்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தனர். அதன் காரணமாக சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னணி தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சமூக நல அமைப்புகள், நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் பிரதமர் நிவாரண நிதிக்கும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கும் நிதி அளித்து வருகின்றனர். 

 

kk

 

இதற்கிடையே ஊரடங்கு உத்தரவால் சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகில் நிதி திரட்டப்படுகிறது. தமிழ்நாட்டில், திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான பெப்சி அமைப்புக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, உதயநிதி, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிதி வழங்கி உள்ளனர். இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு (நலிவுற்றகலைஞர்கள்) தமிழ்நாடு திரைப்படத்துறை நலவாரியம் மூலம் உதவிகேட்டு நடிகர் சங்கம் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதம்...

 

தேதி : 31.03.2020


அனுப்புநர்
M.நாசர், (முன்னாள் தலைவர், தென்னிந்திய நடிகர் சங்கம் மற்றும் திரைப்பட நடிகர்)
எண். 245, குகன் தெரு, காமகோடி நகர்,
வளசரவாக்கம், சென்னை – 87.

பெறுநர்
    மாண்புமிகு. செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் அவர்கள்
    செய்தி மற்றும் விளம்பர துறை,
தலைமை செயலகம், சென்னை – 600 009

அன்புடையீர் வணக்கம்,

பொருள் : தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு (நலிவுற்றகலைஞர்கள்) தமிழ்நாடு திரைப்படத்துறை நலவாரியம் மூலம் உதவிடுமாறு கோருதல் – தொடர்பாக.
                         ----------
    தென்னிந்திய நடிகர் சங்கத்தில் திரைப்படங்களில் நடிக்கும் துணை நடிகர், நடிகையர்கள் சுமார் 1500 உறுப்பினர்கள் மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலுள்ள நாடக கலைஞர்கள் என சுமார் 2000-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.

தற்போது உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு அரசு அறிவித்துள்ளது.  இதனால் திரைப்பட படப்பிடிப்புகளும் மாவட்டங்களில் நடைபெற இருந்த நாடக விழாக்களும் நடைபெறாமல் போனதால் அதையே நம்பி இருக்கும் அன்றாடம் ஊதியம் பெறும் திரைப்படம் / நாடகம் ஆகிய துறைகளில் உள்ள கலைஞர்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையுள்ள நலிந்த கலைஞர்கள் உட்பட அனைவரும் தங்கள் அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, தாங்கள் இதனை கருத்திற்கொண்டு, தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு திரைப்படத்துறை நல வாரியம் மூலம் உதவி செய்ய பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இக்காலகட்டத்தில் தாங்கள் செய்யும் பேருதவி எங்களின் மனதில் நீங்காத இடம் பெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்கள் அன்புள்ள

(M.நாசர்)

நகல்:

1 உயர்திரு.அரசு முதன்மை செயலாளர் அவர்கள்
  செய்தி மற்றும் விளம்பர துறை,  தலைமை செயலகம், சென்னை – 600 009.
2. உயர்திரு. இயக்குநர் அவர்கள் செய்தி மற்றும் விளம்பர துறை
  தலைமை செயலகம், சென்னை – 600 009
3. திரு.தனி அலுவலர் அவர்கள்,
  தென்னிந்திய நடிகர் சங்கம்,
  G1,எண்.21, நந்தா அப்பார்ட்மெண்ட், ஹபிபுல்லா சாலை, தி.நகர் , சென்னை - 17. என குறிப்பிட்டுள்ளனர்.

 

 

Next Story

‘நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் அரசு தலையிட்டிருக்காவிட்டால்..?’ -விஷால் தரப்பு வாதம்!

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
 

film actors association election issue


நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்தி வைத்து  பிறப்பித்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷாலும், நடிகர் சங்கத்திற்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக் கோரி சங்க உறுப்பினர்கள் ஏழுமலை, பெஞ்சமின் உள்ளிட்டோரும் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்தார். விசாரணையின் போது, விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கடந்த ஜுன் 23-ஆம் தேதி நடந்த தேர்தலில் 80 சதவீதம் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர் என்றும், பதவிக்காலம் முடிந்தாலும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய நிர்வாகிகள் பதவியில் நீடிக்கலாம் என்றும், நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
 

film actors association election issue


இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டிருக்காவிட்டால் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றிருப்பார்கள் என விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பில், உறுப்பினர்கள் புகார் குறித்து விசாரிக்கவும், தனி அதிகாரியை நியமிக்கவும் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது என்று வாதிடப்பட்டது. ஆறு மாதங்கள் பதவி நீட்டிப்பு செய்வதற்கு நடிகர் சங்க விதிகளில் இடமில்லாததால் சங்கத்தின் குழு நடத்திய தேர்தலே செல்லாது எனவும்  தெரிவிக்கப்பட்டது. மேலும், நடிகர் சங்க தேர்தல் நடைமுறைகளில் தலையிடவில்லை எனவும் தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கல்யாண சுந்தரம், இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.