பிரபல பாடகர் எஸ்.பி.பி கரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து ஆகஸ்ட் 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி திடீரென சிகிச்சை பலனின்றி 25ஆம் தேதி காலமானார்.
தாமரைப்பாக்கத்திலுள்ள அவரது பண்ணையில் எஸ்.பி.பி-யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. எஸ்.பி.பியின் மறைவிற்கு இந்திய பிரதமர், குடியரசுத் தலைவர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் எஸ்.பி.பி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது பிளாகில் பதிவிட்டுள்ளார். அதில், “வேலைப்பளுவின் நடுவே நம்மை விட்டு புறப்பட்டு விட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களை நினைத்து மனம் அலைபாய்கிறது. கடவுள் பரிசளித்த அந்த குரல் அமைதியாகிவிட்டது. நாட்கள் செல்ல செல்ல விசேஷமானவர்கள் நம்மை விட்டு வானுலகம் சென்று விடுகிறார்கள்.
இந்த கரோனா இன்னொரு நல்ல மனிதரை கொண்டு சென்றுவிட்டது. தெய்வீகம் மற்றும் ஆன்மாவின் குரல். பல வருடங்களுக்கு முன்னால் ஒரு விழாவில் அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிகப் பிரபலமானவராக இருந்தாலும் எளிமையும், பண்பும் கொண்ட மனிதர் அவர்” என்று தெரிவித்துள்ளார்.