Skip to main content

"13 ஆண்டுகள்; நான் ஒருபோதும் நினைத்து கூட பார்க்கவில்லை" - ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

Actress Shruti Haasan completes 13 years cine industry

 

நட்சத்திர வாரிசாக திரைத்துரையில் அறிமுகமான ஸ்ருதிஹாசன் ஹே ராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். அதன்பிறகு கடந்த 2009 ஆம் ஆண்டு இம்ரான் கான் நடிப்பில் வெளியான லக் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த ஸ்ருதிஹாசன் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். அதன் பிறகு பல ஹிட் படங்களில் நடித்து ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாகவும், பாடகராகவும் இருந்து வருகிறார்.

 

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் திரைத்துரையில் 13 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பதிமூன்று ஆண்டுகளை அற்புதமான ஆண்டுகளாக நிறைவு செய்திருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் ரசிகர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டே இந்த பதிமூன்று ஆண்டு நிறைவை உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன். என்னுடைய திரையுலக வாழ்க்கை, ஒரு மாயாஜாலமிக்கது. 

 

ad

 

திரைப்படத்தில் நடிப்பேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. ஏதேனும் எனக்கு விருப்பமான துறையில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. அதே தருணத்தில் எனக்கு விருப்பமான வேலையை எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன். மாயாஜாலம் மிக்கதாக கடந்த பதிமூன்று ஆண்டுகள் கழிந்தது. 

 

ஒரே ஒரு படத்தில் தான் நடிப்பேன் என நினைத்திருந்தேன். அதே தருணத்தில் நான் நடிகையாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை. பிறகு அதனை நேசிக்க கற்றுக் கொண்டேன். சினிமா என் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியாக மாறியுள்ளது. இதற்கு நான் உண்மையில் நன்றி உள்ளவளாக இருக்கும் வகையில் வாழ்க்கை என்னை மாற்றி அமைத்திருக்கிறது.வெற்றி, தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும், நம்பிக்கையுடன் எப்படி பணியாற்றுவது என்பதையும், கதைகளை கேட்பதிலும், அதனை தேர்ந்தெடுப்பதிலும் அதிலுள்ள நேர்மறையான விஷயங்களை பாராட்டுவது எப்படி என்பதனையும் கற்றுக் கொண்டேன்.

 

இதனை இதற்கு முன் கற்றுக் கொண்டதில்லை. எனக்கு கிடைத்து வரும் அன்பு மற்றும் பாராட்டிற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். பதிமூன்று ஆண்டுகளாக என் மீது மாறாத அன்பு காட்டி வரும் அனைவருக்கும் என்னுடைய பணிவான நன்றி நன்றி நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லோகேஷ் கனகராஜ் - ஸ்ருதிஹாசனின் ‘இனிமேல்’ டீசர் அப்டேட்

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Lokesh Kanagaraj - Shruti Haasan's 'Inimel' Teaser Update

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வரும் ஸ்ருதிஹாசன், கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான பிராபாஸின் சலார் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து, 'தி ஐ' (The Eye) மற்றும் ‘சென்னை ஸ்டோரி’ எனும் இரண்டு ஹாலிவுட் படங்களிலும், டகோயிட் (Dacoit) எனும் தெலுங்கு படத்திலும் ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார்.

இதனிடையே கமலுடன் இணைந்து இசை ஆல்பம் ஒன்றில் பணியாற்றவுள்ளதாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிப்பு வெளியானது. அதை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில், கடந்த மாதம் லோகேஷ் கனகராஜும் ஸ்ருதிஹாசனும் இணைந்திருக்கும் போஸ்டர் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, ஸ்ருதி ஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்திருக்கும் இந்த ஆல்பத்திற்கு ‘இனிமேல்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கடந்த 14 ஆம் தேதி ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்தது. 

மேலும், இந்த ஆல்பத்திற்கு ஸ்ருதிஹாசன் இசையமைக்க, கமல்ஹாசன் வரிகள் எழுதியுள்ளதாகக் கூறப்பட்டது. துவர்கேஷ் பிரபாகர் இயக்கியுள்ள இந்த ஆல்பம் பாடலில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளார். இதன் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் புதிய அப்டேட்டை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. அதில், இந்த ஆல்பம் பாடலின் டீசர் இன்று மாலை 6:30 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது. மணமக்கள் கோலத்தில் இருக்கும் லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசனின் போஸ்டரை வெளியிட்டு, ‘வெற்றியாளர்கள் இல்லை; தோற்றவர்கள் இல்லை; இனிமேல் வீரர்கள் மட்டுமே’ எனப் படக்குழு தெரிவித்துள்ளது. 

லியோ படத்திற்கு பிறகு ரஜினிகாந்தை வைத்து ஒரு படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும், ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான ‘சிங்கப்பூர் சலூன்’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.