/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1483.jpg)
பாடலாசிரியரும், மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகியான சினேகன் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் சினேகம் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கி அதை வழிநடத்தியும் வருகிறார். இந்நிலையில் தனது அறக்கட்டளையின் பெயரில் சமூக வலைத்தளத்தில் போலி கணக்குகள் தொடங்கி நடிகையும், பாஜக பிரமுகரான ஜெயலட்சுமி பணம் வசூல் செய்து வருவதாக சென்னை ஆணையர் அலுவலகத்தில் சினேகன் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இதனை மறுத்துள்ள நடிகை ஜெயலட்சுமி, “ நான் சினேகம் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறேன். அதற்கான பதிவு எண்களும், நீதிமன்றம் அங்கீகாரம் அளித்த ஆவணங்களுக்கும் எங்களிடம் உள்ளது. அப்படி இருக்கையில் நான் ஏன் அவரின் பெயரில் மோசடி செய்து பணம் வசூலிக்கப் போகிறேன். எங்கள் அறக்கட்டளை மூலம் நாங்கள் செய்யும் நற்பணிகள் அனைத்தையும் எங்களது அறக்கட்டளை பெயரான சினேகம் என்ற பெயரில் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறோம். ஆனால் சினேகன் அவரது அறக்கட்டளை சார்பாக அப்படி எந்த விதமான நற்பணிகளையும் செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாக நான் பார்த்ததில்லை.
சினேகன் கூறியது போல் அவரது தரப்பிலிருந்து எங்களுக்கு எந்த விதமான அழைப்புகளும் வரவில்லை. என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர் என் மீது அபாண்டமாக குற்றம் சாட்டுகிறார். அரசியல் நோக்கத்தின் காரணமாக என் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது. இந்த பொய்யான குற்றச்சாட்டுக்குப் பின்னால் கமல்ஹாசனும் இருப்பதாகத் தெரிகிறது. திமுக கமல்ஹாசனை வாங்கியுள்ளது. திமுக அதிகப் பணம் கொடுத்துத் தொடர்ந்து தங்களது நிறுவனத்தில் கமலஹாசனை நடிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. திமுகவும், மக்கள் நீதி மய்யமும் தற்போது ஒன்றுதான். நான் பாஜகவில் இருப்பதால் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு தொடர்ந்து பாஜகவில் இருப்பவர்களுக்கு இந்த மாதிரியான பிரச்சனைகளை கொடுத்து வருகிறது. சினேகன் என் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு 7 நாட்களுக்குள் விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அப்படி அவர் குற்றச்சாட்டை நிரூபிக்கவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)