Skip to main content

"இந்த மாதிரி மனுஷங்க இருப்பாங்களான்னு பார்த்தேன்" - பிரபல நடிகர் குறித்து சிம்ஹா நெகிழ்ச்சி

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

actor simha speech at Vasantha Mullai Trailer launch

 

முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக ரேஷ்மி சிம்ஹா தயாரிப்பில் நடிகர் சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வசந்த முல்லை'. அறிமுக இயக்குநர் ரமணன் புருஷோத்தமா இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகியாக கஷ்மீரா பர்தேசி நடிக்க ஆர்யா மற்றும் ரக்‌ஷித் ஷெட்டி ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்கள். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வருகிற 10 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். 

 

நடிகர் சிம்ஹா பேசுகையில், ''கதைகளை தற்போது கவனமாக தேர்வு செய்து நடிக்கத் தொடங்கி இருக்கிறேன். இனி வலிமையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது எனத் தீர்மானித்திருக்கிறேன். கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமாருக்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினேன். உடனே வரச் சொல்லி, 'வசந்த கோகிலா' எனும் இந்தப் படத்தின் கன்னட பதிப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டு வாழ்த்தும் ஆசியும் வழங்கினார். 

 

தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவிக்கும் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினேன். அவரும் உடனே வரச் சொல்லி, 'வசந்த கோகிலா' எனும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பின் முன்னோட்டத்தை வெளியிட்டு வாழ்த்தும் ஆசியும் வழங்கினார். சிவராஜ்குமார், சிரஞ்சீவி ஆகியோர் இன்று இந்த உயரத்தில் இருந்தாலும் அவர்களுடைய எளிமை, விருந்தோம்பல் என்னை கவர்ந்தது.

 

மிகவும் அழுத்தமான திரைக்கதை கொண்ட படம் இது. படம் தொடங்கி 20 நிமிடத்திற்குப் பிறகு ஒரு காட்சியைக் காணத்தவறினாலும் குழப்பம் ஏற்படலாம். ஏனெனில், இந்த திரைப்படம் ஒரு புதுவித பரிட்சார்த்தமான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. ஆர்யாவின் மார்க்கெட் சார்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு உயர்ந்திருந்தாலும், என் மீதுள்ள நட்பிற்காகவும் கதை பிடித்ததாலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். அவரை பார்க்கையில் ‘இந்த மாதிரி மனுஷங்க இருப்பாங்களா..’ என்று நெகிழ்ந்து பார்த்தேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஃபிட்னஸ் ஸ்டுடியோ திறப்பு விழாவில் ஆர்யா

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
arya attend studio opening ceremony

ஓ.எம்.ஆர் என்று குறிப்பிடப்படும் பழைய மகாபலிபுரம் சாலையில் ப்ராட்ஸ்லைஃப் ஃபிட்னஸ் ஸ்டுடியோ எனும் உடற்பயிற்சி கூடம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் திறப்பு விழாவில் நடிகர் ஆர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 

மேலும் ரமேஷ் திலக், அபி ஹாசன், பெசன்ட் நகர் ரவி, நடிகைகள் விஜி சந்திரசேகர், லவ்லின் சந்திரசேகர், தீப்தி, ஷெர்லின் சத் ஆகியோரும் சின்னத்திரை பிரபலங்களான சிது, ஸ்ரேயா ஆஞ்சன், சாய் பிரமோதிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இந்த ஜிம்மின் நிறுவனர் பரத் ராஜ்,  'சீயான்' விக்ரம், ஆர்யா, ஜெயம் ரவி, சரத்குமார் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர்களின் பிரத்யேக ட்ரெய்னர் என்பதும், நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' படத்தின் படப்பிடிப்பின் போது சில காட்சிகளுக்காக அவருக்கு பரத் ராஜ் பிரத்யேகமாக பயிற்சி அளித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா வழக்கு - அரசு சார்பில் நீதிமன்றத்தில் பதில்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
prakash raj, bobby simha case update

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஆகஸ்ட் மாதம், வருவாய் கோட்டாட்சியர் ராஜா தலைமையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பிரகாஷ் ராஜும், பாபி சிம்ஹாவும் உரிய அனுமதியின்றி இடத்தை ஆக்கிரமித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பிரகாஷ் ராஜ், தனது பெயரில் உள்ள 7 ஏக்கர் நிலம் அல்லது அதற்கருகில் உள்ள சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்ததாக அக்கூட்டத்தில் புகார் எழுந்தது. மேலும் பாபி சிம்ஹா, அரசுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மூன்று மாடிக் கட்டடம் கட்டி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பினர். பின்பு பிரகாஷ் ராஜ், அஞ்சுவீடு பகுதியில் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியானது. பாபி சிம்ஹாவும் ஒப்பந்ததாரர்கள் ஏமாற்றிவிட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் ஒப்பந்ததாரர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தார்.  

இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஜுனைத் என்பவர் பிரகாஷ் ராஜ் மற்றும் பாபி சிம்ஹா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், “கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் பிரபல நடிகர்கள் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் விதிமுறைகளைப் பின்பற்றாமல், அரசின் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டி வருகின்றனர்” எனக் குறிப்பிட்டிருந்தது. மேலும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் மீது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்பு வழக்கு குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கொடைக்கானலில் கட்டியுள்ள கட்டுமானம் உரிய அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது. இருவரும் மேற்கொண்ட கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இப்போது கட்டுமான பணிகள் மேற்கொள்ளவில்லை. உள்ளூர் திட்டக்குழுமம், அனுமதியின்றி கட்டப்படும் கட்டுமானம் மீது தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது என வாதிட்டார். இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.