Skip to main content

"தியாகம் செய்யும் போது தான் உண்மையான விவசாயியாக இருக்க முடியும்" - பொன்வண்ணன் 

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

actor ponvannan talks about true farmers sacrifice  

 

சென்னையில் நடிகர் கார்த்தி நடத்தும் உழவன் பவுண்டேசன் ஒருங்கிணைத்த உழவர் விருது 2023 வழங்கும் விழாவில் பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் கலந்து கொண்டார்கள். பல்வேறு நபர்களைப் பாராட்டி விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நடிகர் பொன் வண்ணன் பேசியதாவது...

 

"நீண்ட நெடிய பாரம்பரியமிக்க விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். அந்த விவசாய குடும்பத்தில் முதலில் படித்த பையனும் நான். படிப்பு என்பது பள்ளி பாட புத்தகத்தை தாண்டியும் நூலகமே கதி என்று இருந்தவன். அது ஒரு முரண்பாடான வாழ்க்கை. என்னுடைய தந்தை கிராமத்துச் சூழலில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர். விண்மீன்களின் நகர்வுகளையும், பறவைகளின் ஒலிகளையும் வைத்து நேரத்தைக் கணக்கிடும் அளவுக்கு இயற்கையோடு இணைந்து வாழ்ந்தவர்.

 

அவரிடம் பெரும்பாலும் மூணு அல்லது நாலு வேட்டி தான் இருக்கும். என்னுடைய அப்பாவை நான் பெரும்பாலும் கோவணத்தோடு தான் பார்த்து உள்ளேன். அவர்  எங்காவது வெளியில் செல்ல வேண்டும் என்றாலும், அந்த கோவணத்தின் மேல் ஒரு வேட்டியை கட்டிக்கொண்டு தோளில் துண்டை போட்டுக்கொண்டு செல்வார். மாட்டு வண்டியில் போகும் கிராம வாழ்க்கை சூழல் இருந்தது. என்னுடைய அம்மா காலை நான்கு மணிக்கு எல்லாம் எழுந்து சமையல் வேலைகள் எல்லாம் முடித்து விட்டு காலை ஆறு மணிக்கு எல்லாம் வீட்டை விட்டு சென்று விடுவார்.

 

மாலை நாலு மணிக்கு எல்லாம் பள்ளி முடிந்து வரும் போது நேராக தோட்டத்திற்குச் சென்று அங்கு அம்மாவிற்கு உதவியாக அங்குள்ள வேலைகளைச் செய்வேன். புதன்கிழமை அன்று எங்கள்  ஊரில் சந்தை கூடும் நாட்களில் காய்கறிகளை எங்க அம்மா தலையில் சுமந்து கொண்டு செல்வார். அவருக்கு பின்னாலேயே நானும் காய்கறிகளைச் சுமந்து கொண்டு செல்வேன். இப்படி செல்லும் போது பள்ளி நண்பர்கள் யாராவது நம்மை பார்த்து விடுவார்களா என்று நினைத்துக் கொண்டே செல்வேன். இவ்வாறு செல்வதை சில சமயங்களில் கௌரவ பிரச்சனையாகக் கூட கருதி இருக்கிறேன்.

 

வயது வயது கூடக் கூட எனக்கு விவசாயம் ஒத்து வரவில்லை. படிப்பும் கனவும் என்னை வேறு பக்கம் இழுத்துச் சென்றது. கம்யூனிச வாழ்க்கை, நாடகத்துறை, திரைத்துறை என  வந்த பிறகும் கூட என்னுடைய அப்பா கடைசி வரைக்கும் விவசாய சூழலில் இருந்து மடிந்து விட்டார். ஆனால் என்னுடைய படிப்பு கற்று கொடுத்தது விவசாயத்தை விட்டு விட்ட நீ ஒரு முட்டாள் என்று. அதற்குள் வாழ்க்கை சூழல் மாறிவிட்டது. நான் மீண்டும் கிராமத்திற்குச் செல்லும் போது எதை இழந்தேனோ அதை  உறவினர்கள்  மற்றும்  நட்பின் மூலம்  அதை மீண்டும் பெற முயற்சிக்கிறேன்.

 

மனித இனம் கண்டுபிடித்த மிக கொடூரமான, பரிதாபமான ஒரு தேர்வு முறை விவசாயம். விவசாயம் என்பது மற்ற தொழில்களை போன்று சாதாரணமானது  இல்லை. இயற்கையோடு இணைந்து பயணிக்க வேண்டி இருக்கிறது. வியாபாரத்தோடு இழப்புகளையம் சந்திக்க வேண்டி இருக்கிறது. பிரசவத்தில் ஆடு, மாடு இறந்து போவதைப் பார்த்து இருக்கிறேன். வறட்சியால் பயிர்களை மாடுகளை விட்டு மேய்ப்பதை பார்த்து இருக்கிறேன். ஆனால் அதற்காக எல்லாம் என் தந்தை வீட்டையோ, சமையல் அறையையோ மாற்றியது இல்லை. நிலத்தை வியாபாரத் தன்மையோடு அடையாளம் காட்டும் சூழல் வந்து விட்டது. இளைஞர்கள் முகநூலில் விவசாயத்தை பற்றி பேசுகிறார்கள். ஆனால் உண்மையில் விவசாயம் செய்வது என்பது  ஒருவர் தனது வாழ்க்கையை தொலைத்து விட்டு பெரிய தியாகம் செய்யும் போது தான் உண்மையான விவசாயியாக இருக்க முடியும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கார்த்தியுடன் கூட்டணி அமைக்கும் மாரி செல்வராஜ்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
mari selvaraj next with karthi

மாமன்னன் படத்தை தொடர்ந்து வாழை என்ற தலைப்பில் ஒரு படம் எடுத்து வருகிறார் மாரி செல்வராஜ். இப்பட பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.   

இதையடுத்து துருவ் விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இப்படம் 2021ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில் மாரி செல்வராஜின் அடுத்தடுத்த படங்களால் படப்பிடிப்பு தள்ளி போனது. இப்போது, வருகிற 15 ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

இதையடுத்து ரஜினியின் 172வது படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பாக லலித் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த ஜனவரி மாதம் தகவல் வெளியானது. அதன் பிறகு இப்படம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் மாரி செல்வராஜ் கார்த்தியுடன் இணைந்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

கார்த்தி தற்போது நலன் குமாரசாமியுடன் ஒரு படம், பிரேம் குமாருடன் ஒரு படம் கைவசம் வைத்துள்ளார். இதில் பிரேம் குமார் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவுற்றது. நலன் குமாரசாமி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக தகவல் உலா வருவது குறிப்பிடத்தக்கது.  

Next Story

கார்த்தியின் அடுத்த படக்குழு வெளியிட்ட அப்டேட்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
karthi 26 movie update

கார்த்தி தற்போது பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார். கார்த்தியின் 27வது படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீ திவ்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாக சமீபத்தில் படக்குழு தெரிவித்தது.

இதனிடையே, நலன் குமரசாமி இயக்கத்தில் கார்த்தி ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படம் கார்த்தியின் 26வது படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் பூஜை வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. பூஜையில் சூர்யா, சிவகுமார் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் கவுதம் கார்த்திக்கும் கலந்து கொண்டுள்ளார். விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.