Skip to main content

ஹீரோவா 18 படம் புக்காச்சு.... ஒரே விபத்துல எல்லாம் போச்சு... பாரதிராஜா பட ஹீரோவின் கண்ணீர் கதை! 

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

babu

 

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 'என் உயிர்த் தோழன்' படத்தின் மூலம், தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் பாபு.

 

நடிகர், வசனகர்த்தா எனப் பன்முக ஆளுமை கொண்ட பாபுவிற்கு முதல் படமே பெரிய அளவில் கை கொடுத்ததால் அடுத்த ஆறு மாதங்களிலேயே 18 படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. பகல், இரவு எனப் பாராது தொடர்ந்து படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்த பாபு, படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக விபத்தைச் சந்திக்கிறார். ஏறக்குறைய 20 வருடங்களுக்கு மேலாக, படுத்த படுக்கையாக இருக்கும் இவர், தற்போது பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளார். அவருக்கு உதவிடும் வகையில் பல்வேறு முயற்சிகள் எடுத்துவரும் நடிகர் பொன்வண்ணனைச் சந்தித்தோம். நடிகர் பாபுவுடனான தன்னுடைய நெருக்கம் குறித்தும் பாபுவின் தற்போதைய நிலை குறித்தும் பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவை பின்வருமாறு...  

 

" 'கொடி பறக்குது' படம் முடிவடைந்திருந்த சமயத்தில், இயக்குனர் பாரதிராஜாவிடம் கதை சொல்வதற்காகச் சென்றேன். அவர் என்னிடம் உதவி இயக்குனராகச் சேர்ந்து கொள்கிறாயா? எனக் கேட்டார். நானும் சம்மதம் தெரிவித்துவிட்டேன். அப்போது பாபு என்ற ஒருவரைச் சந்திக்கச் சொன்னார்.  நானும் போய் அவனைச் சந்தித்தேன். எங்களுக்கு இடையேயான முதல் அறிமுகம் இப்படித்தான் ஏற்பட்டது. கலைமணி சார் கதையில் பாரதிராஜா இயக்கிய 'என் உயிர்த் தோழன்' படத்திற்காக அந்தச் சந்திப்பு நடந்தது. மெட்ராஸ் பேச்சுவழக்கு பாபுவிற்கு சரளமாகத் தெரியும் என்பதால், அந்தப்படத்திற்கு அவன் வசனம் எழுதினான். அந்த காலகட்டத்தில் அவனுடன் இணைந்து பணியாற்றினேன். சில நாட்கள், அவன் வீட்டில் அமர்ந்து வசனம் எழுதுவோம். அதன் மூலமாக அவன் குடும்பம் எனக்கு அறிமுகமானது.

 

பாரதிராஜா திடீரென ஒருநாள், இவன்தான் நம்ம படத்துக்கு ஹீரோ என்றார். பாபு அந்தச் சமயத்தில் எலும்பும் தோலுமாக இருப்பான். இவனை எப்படி ஹீரோவா நடிக்க வைப்பார் என ஆச்சரியமாக இருந்தது. அதன்பிறகு, ஆறு மாதத்திற்குக் கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து தன்னைத் தயார்படுத்திக்கொண்டான். அந்தச் சமயத்தில் நாங்கள் மிக நெருக்கமாகப் பயணித்தோம். 'என் உயிர்த் தோழன்' படத்திற்குப் பிறகு அவனுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. படம் தோல்வியடைந்தாலும் பாபுவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. அதன்பிறகு பல படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டதால் நாங்கள் இருவரும் நீண்ட நாட்களாகச் சந்தித்துக் கொள்ளவில்லை.

 

ponvannan

 

பொள்ளாச்சியில் அவனுக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது எனப் பின்னாட்களில் பத்திரிகை செய்திகள் மூலம் தெரியவந்தது. அதுகுறித்து விசாரிக்கையில், சண்டைக்காட்சியின் போது தவறி விழுந்துவிட்டதாகக் கூறினார்கள். மருத்துவ சிகிச்சையில் இருக்கும் போது அவனைச் சந்தித்தோம். சில மாத சிகிச்சைக்குப் பிறகு ஆரம்பக்கட்டங்களில் எழுந்து நடக்கக் கூடிய அளவிற்கு குணமானான். 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவனைச் சந்தித்தேன். அப்போது படுத்த படுக்கையாக இருந்தான். அவனுடைய அப்பா வங்கியில் வேலை பார்த்ததால் அவனுக்குப் பொருளாதார உதவிகளைத் தொடர்ந்து செய்துவந்தார். அவரது ஓய்விற்குப் பிறகு பணத்தை எல்லாம் ஒரு சிட்பண்டில் முதலீடு செய்திருந்தார்.

 

ஒரு கட்டத்தில் அதில் ஏமாற்றப்பட்டு எல்லாப் பணத்தையும் அவர் அப்பா பறிகொடுத்துவிட்டார். அதன் பிறகு அவர் தம்பி மட்டுமே பாபுவையும் அவரது அப்பாவையும் கவனித்து வந்தார். பின்னர் அவனது தம்பியும் இறந்துவிடுகிறார். இவையனைத்தையும் படுத்த படுக்கையாக இருந்த பாபு பார்த்துக்கொண்டே இருந்தான். பொருளாதாரப் பின்னடைவும் உறவுகள் பிரிவும் தொடர்ந்து அவனுக்கு நடந்தது. எந்த உதவியும் இல்லாமல் அந்தக் குடும்பம் இருக்கிற விஷயம் தெரிந்து பலர் உதவி செய்தனர். ஒரு கட்டத்தில் அது எதுவும் போதவில்லை. அவனுடைய நண்பர்கள் உதவியால் சில வருடங்கள் கழிந்தன. கடந்த 25 வருட காலத்தில் அவனை வெவ்வேறு கட்டங்களில் பார்த்துள்ளேன். தற்போது அனைத்தையும் இழந்து நடைப்பிணம் மாதிரியான நிலையில் உள்ளான்.

 

குணமடைந்து மீண்டு வந்துவிடவேண்டும் என்பதெல்லாம் அவனது நோக்கமில்லை. வாழுகிற காலம் வரை அடிப்படை வாழ்க்கையை வாழ்வதற்கான பொருளாதார உதவிகள்தான் அவனது தற்போதைய தேவை. வீட்டு வாடகை, உணவு, மருத்துவச் செலவு என மாதம் 50,000 வரை நிரந்தரப் பொருளாதார உதவி தேவைப்படுகிறது. இதைப் பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில்தான் தற்போது இறங்கியுள்ளோம். இயக்குனர் பாரதிராஜா, ஐ.ஏ.எஸ். பாலகிருஷ்ணன் உட்பட பலரும் உதவிசெய்து வருகின்றனர். திரையுலகம் மட்டுமின்றி மனிதாபிமானம் உள்ளவர்கள், அறக்கட்டளை நடத்துபவர்கள் எனப் பல்வேறு தரப்பிலிருந்து உதவிகள் பெற முயல்கிறோம்.

 

cnc

 

100 பேர் 500 ரூபாய் கொடுத்தால் இதை எளிதாக எட்டிவிடலாம். அப்படி ஒரு நூறு பேர்கள் கிடைக்கமாட்டார்களா என்று நினைத்துத்தான் இந்த முயற்சி எடுத்துள்ளோம். இந்த உதவி கிடைத்தால் படுத்த படுக்கையாக இருந்துகூட தன்னுடைய வாழ்க்கையை அவன் கடந்துவிடுவான். நம்மிடம் உள்ள மனிதாபிமானத்தைத் தக்க வைத்துக்கொள்ள மற்றும் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளச் சிறு வாய்ப்பாக நினைத்து இந்த உதவியைச் செய்வோம். நீங்கள் செய்கிற சிறு உதவி அந்த உயிரை இந்தப் பூமியில் வாழுகிற காலம் வரை நம்பிக்கையுடன் வாழ வைக்கும்.

 

உதவி செய்ய விரும்புவோருக்கு...

S. PREMALATHA
A/c 10013287586
State Bank of India
Santhome Highroad Branch
IFSC - SBIN0005797 

Mobile No: +91 9597224400

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன்'-பவதாரிணி மறைவுக்கு பாரதிராஜா இரங்கல்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
'How can I console my friend' - Bharathiraja's condolence on Bhavatharini's passed away

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி காலமானார்.

இளையராஜாவின் மகள் பவதாரிணி (47) இலங்கையில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளையராஜா இசையமைத்த ராசய்யா திரைப்படத்தில் இடம்பெற்ற 'மஸ்தானா மஸ்தானா' பாடல் மூலம் பாடகியாக அறிமுகமானார் பவதாரிணி.

தொடர்ந்து பாரதி படத்தில் இடம்பெற்ற 'மயில் போல பொண்ணு ஒண்ணு' பாடல் மூலம் பிரபலமானவர். அந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றவர். அதனைத் தொடர்ந்து தனது சகோதரர்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா மற்றும் அப்பா இளையராஜா ஆகியோர் இசையில் பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். விஜய் நடித்த காதலுக்கு மரியாதை, பிரண்ட்ஸ் படங்களில் பாடல்களை பாடியுள்ளார். தனித்துவமான குரலில் பாடி ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றவர். இது சங்கீத திருநாளோ, காற்றில் வரும் கீதமே, ஒளியிலே தெரிவது தேவதையா உள்ளிட்ட பாடல்கள் இவரது குரலில் வந்த ஹிட் பாடல்களாகும்.

பாடல்கள் மட்டுமல்லாது தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட திரைப்படங்களுக்கு இசை அமைத்தும் உள்ளார் பவதாரிணி. சனிக்கிழமை நடைபெற உள்ள இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவுடன் இலங்கை சென்றிருந்தவர் அங்கு ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இலங்கையில் காலமானார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த துயர சம்பவம் தமிழ் திரையுலத்தினர் மற்றும் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் திரைத்துறையினர் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு திரைப்பட இயக்குனர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்த இரங்கல் குறிப்பில், 'என் நண்பனுக்கு எப்படி ஆறுதல் சொல்வேன். மகள் பவதாரிணியின் மறைவு எங்கள் குடும்பத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்' என தெரிவித்துள்ளார்.

Next Story

“எது நடக்கக்கூடாததோ அது நடந்துவிட்டது” - பாரதிராஜா இரங்கல்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
bharathiraja about vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இவரது மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர். இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை மாலை 4.45 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படுகிறது. 

இந்த நிலையில் பாரதிராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “சில நேரங்களில் சில விஷயங்கள் சந்தோஷமாக பகிர்ந்துகொள்ள இருக்கும். சில விஷயங்கள் வருத்ததுடன் பகிர வேண்டிருக்கும். இயற்கை மனிதனை கொண்டு செல்வது நியாயம் தான். பிரயோஜனமான சில மனிதர்களை கொண்டு செல்வது கஷ்டம். என் நண்பன், சிறந்த நடிகன், சிறந்த மனிதாபிமானி. பல நாட்களாக எந்த வித அசைவும் இல்லாமல் இருந்த போதே தமிழ்நாடு முழுவதும் வருத்தப்பட்டது. எது நடக்கக்கூடாததோ அது நடந்துவிட்டது. இருந்தாலும் அவர் வீட்டிற்கு சென்று சாப்பிடாதவர்கள் கிடையாது. அவரை நேசிக்காதவர்கள் கிடையாது. இவ்வளவு சீக்கிரமாக கடவுள் அழைத்து கொள்வார் என நினைக்கவில்லை. நல்ல கலைஞன், நல்ல ஃபைட்டர். சினிமாவில் அள்ளிக் கொடுத்தவன் விஜயகாந்த். அவரோடு பழகி பார்ப்பவர்களுக்கு தான் தெரியும், அவர் எவ்ளோ பெரிய மனிதர் என்று. விஜயகாந்த்தின் மறைவு தமிழகத்தில் மட்டுமல்ல உலகத் தமிழர்களுக்கு பெரிய இழப்பு. என்னுடைய உடல்நிலை சரியில்லாததால் போகமுடியவில்லை. கவலையளிக்கிறது. விஜயகாந்த் வெற்றி கொடி நாட்டியவன்” என்றார்.