சென்னையில் திரைப்பட எடிட்டர்களின் சங்கம் சார்பில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அணியினர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், சிங்கம் புலி, ஆர்.வி. உதயகுமார் நடிகை தேவயானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.
இதில் பேசிய இயக்குநர் அமீர், “ஒரு இயக்குநருக்கு எடிட்டிங் அறிவு மட்டுமல்ல, இசை, சண்டை எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், ஒரு எடிட்டருக்கு ஒரு இயக்குநருக்கான அறிவு ரொம்ப முக்கியம். ஒரு படம் தேறுமா தேறாதா என்று கண்டுப்பிடிப்பது ஒரு எடிட்டர்தான். ஆனால், இதைப் பல எடிட்டர் இதைச் சொல்வது கிடையாது. அதை அப்போதே இயக்குநரிடம் சொல்லிவிட்டால் அங்கேயே சரிசெய்ய முடியும்.
ஒரு இயக்குநருக்கு தன்னுடைய காதலியுடன் தனியறையில் இருக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்தை போல், எடிட்டிங் ரூமில் இருக்கும் போது கிடைக்கும். பருத்திவீரன் படத்தை 13 வெர்ஷன் எடிட் செய்தோம். தமிழ் சினிமாவே இப்ப அனாதையா கிடக்கு. ஒரு வருடத்திற்கு 250 படங்கள் உருவாகின்றன. ரசிகர்கள் எவ்வளவு படத்தைதான் பார்ப்பார்கள். ஒரு தனிநபர் கையில் சினிமா சென்றுவிட்டது. நானெல்லாம் இன்னும் இரண்டு வருடங்கள்தான் பார்ப்பேன். ஒன்னும் செட் ஆகவில்லை என்றால், மதுரைக்குச் சென்று அங்கேயே ஆட்களை பிடித்து படமெடுத்து கொண்டு அங்கேயே இருந்துவிடுவேன்.
எவ்வளவு செலவு பண்ணி படமெடுத்தாலும், தியேட்டர்கள் கிடைப்பதில்லை. க்யூப் நிறுவனங்கள் தொடங்கும் போது நம்மிடம் வந்து கெஞ்சுவார்கள். ஆனால், இப்போது அவர்கள் மோனோபோலி ஆகிவிட்டார்கள். இப்போது அவர்களைக் கேள்வி கேட்க முடியவில்லை. இப்போது தனித்தனி முதலாளிகளிடம் சினிமா மாட்டியிருக்கிறது. அதில் இருந்து சினிமாவைக் காப்பாற்ற வேண்டும். சினிமா இருந்தாதான் நாம் இருக்க முடியும்” எனப் பேசினார்.