Skip to main content

ஜூனியர் என்.டி.ஆருக்கு வில்லனாகும் அமீர் கான்

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

  Aamir Khan to play villan in jr ntr, prashanth neel project

 

கே.ஜி. எஃப் படம் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குநராக வலம் வரும் பிரஷாந்த் நீல், தற்போது பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில்  ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இதையடுத்து தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படம் ஜூனியர் என்.டி.ஆரின் 31வது படமாக உருவாகிறது. 

 

இந்த நிலையில் என்.டி.ஆரின் 31வது படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் அமீர் கானை நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறதாம். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் அமீர் கான், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பிரஷாந்த் நீல் உள்ளிட்ட மூவரும் ஒரே படத்தில் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். 

 

ஜூனியர் என்.டி.ஆர், ஆர்.ஆர்.ஆர் படத்தைத் தொடர்ந்து கொரட்டாலா சிவா இயக்கத்தில் அவரது 30வது படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக பிரஷாந்த் நீலுடன் இணையவுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வைரலான வீடியோ - வழக்கு தொடுத்து அவசர விளக்கமளித்த அமீர்கான்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Aamir Khan files case for fake video and said Never endorsed any political party

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் திரைபிரபலங்களும் கலந்து கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதனிடையே கடந்த வாரம் லியோ படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் வரும் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாகவும் தகவல் உலா வந்தது. ஆனால் அத்தகவலை சஞ்சய் தத் மறுத்திருந்தார். இந்த நிலையில் மற்றொரு பாலிவுட் முன்னணி நடிகரான அமீர் கான், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஊக்குவிப்பதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் அந்த வீடியோ குறித்து அமீர் கான் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமீர் கானின் செய்தித் தொடர்பாளர் பேசியதாவது, “அமீர் கான் தனது 35 ஆண்டுகால வாழ்க்கையில் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு அளித்ததில்லை. கடந்த பல தேர்தல்களில் தேர்தல் கமிஷன் பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்த தனது முயற்சிகளை எடுத்துள்ளார். அமீர் கான் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டி சமீபத்தில் வைரலான வீடியோவால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம். இது போலியான வீடியோ என்றும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் அமீர் தெளிவுபடுத்த விரும்புகிறார். 

மேலும் அனைத்து இந்தியர்களையும் வெளியே வந்து வாக்களிக்குமாறும், நமது தேர்தல் செயல்பாட்டில் தீவிரமாக பங்கேற்குமாறும் கேட்டுக்கொள்கிறார். அமீர் கானின் அந்த வைரல் வீடியோ, ஏறக்குறைய 10 வருடங்களுக்கு முன்பு அவர் தொகுத்து வழங்கிய ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டவை. அதை ஏ.ஐ மூலம் எடிட் செய்துள்ளனர்” என்றார். 

Next Story

ஜப்பானில் ராஜமெளலி படம் எடுத்த புதிய பரிணாமம்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
rajamouli rrr at japan

ராஜமௌலி இயக்கத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் 'நாட்டு நாட்டு' பாடல் திரைத்துறையில் உயரிய விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. 

இந்த நிலையில் ஜப்பானில் இப்படத்தின் சிறப்பு திரையிடல் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இதனால் தனது குடும்பத்துடன் ஜப்பான் சென்ற ராஜமௌலி, சிறப்பு திரையிடலில் கலந்து கொண்டு உரையாடினார். பின்பு அவருக்கு 83 வயது மூதாட்டி ஒருவர், 1,000 ஓரிகமி கிரேன்களை பரிசாக வழங்கினார். அந்த சிறப்பு பரிசு குறித்து நெகிழ்ச்சியுடன் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ராஜமௌலி, “இது விலைமதிப்பில்லாத பரிசு” என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து கடந்த 21ஆம் தேதி அங்கு நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்திருந்தார். 

இதனை தொடர்ந்து தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தை ஜப்பானிய பெண்கள் நாடகமாக அரங்கேற்றியதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “110 வருட பழமையான தகராசுகா நிறுவனத்தால் எங்கள் ஆர்.ஆர்.ஆர் படம் இசை நாடகமாக அரங்கேற்றப்பட்டது எனக்கு பெருமை. படத்தைப் போலவே நாடகத்தையும் ஏற்றுக்கொண்ட ஜப்பானிய பார்வையாளர்களுக்கு நன்றி. உங்கள் வரவேற்பால் மனம் நெகிழ்ந்தேன்” எனக் குறிப்பிட்டு அந்த நாடகத்தில் நடித்த பெண்களுக்கு நன்றி தெரிவித்தார். 

ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்கவுள்ளார். இப்படத்திற்கான கதை உருவாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படம் மட்டுமல்லாமல் ஆர்.ஆர்.ஆர் பட இரண்டாம் பாகமும் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.