Skip to main content

விஜய் சேதுபதி விலகிய படம்; ஆஸ்கர் வென்ற பட பிரபலம் இணைந்தார் - வெளியான போஸ்டர்

Published on 17/04/2023 | Edited on 17/04/2023

 

800 first look poster released

 

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு '800' என்ற தலைப்பில் படமாக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் ஆஸ்கர் வென்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படப்புகழ் நடிகர் மதுர் மிட்டல் நடித்துள்ளார். மேலும் மகிமா நம்பியார், நரேன், நாசர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

 

இலங்கை, சென்னை, கொச்சி, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டு இதன் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இன்று, முத்தையா முரளிதரன் தனது 51வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதனை முன்னிட்டு பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் 800 படக்குழு அவருக்கு வாழ்த்தும் விதமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

 

முன்னதாக முரளிதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கமிட்டானார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. அப்போது விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. இதுமட்டுமல்லாமல், ஈழத் தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று கருத்து தெரிவித்து வந்தனர். பின்பு விஜய் சேதுபதி இப்படத்திலிருந்து விலகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உழைப்பாளர் தினம்' சிறப்பு காட்சி; கண்ணீர் விட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
 Santhosh Nambirajan  movie

சென்ற வாரம் சிங்கப்பூர் கார்னிவல் சினிமாஸில் 'உழைப்பாளர் தினம்' சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.  சிங்கப்பூர் நாட்டின் முக்கிய பிரமுகர்களுடன் தமிழ்நாட்டில் இருந்து சென்று சிங்கப்பூரில் வேலை செய்யும் வெளிநாட்டு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். முதல் பாதியில் காமெடி, காதல்  என்று பரபரப்புடன் சென்றது.  இரண்டாவது பாதியில் வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்வியலை அழுத்தத்துடன் கனமான காட்சிப்படுத்துதலில்  சென்ற கதை கிளைமாக்சில் யாரும் எதிர்பார்க்காத திருப்பத்துடன் நிறைவடைந்தது. 

படம் நிறைவடைந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள்.  அதில் உச்சபட்சமாக ஒரு வெளிநாட்டு தொழிலாளர்,  நடிகரும் இணை தயாரிப்பாளருமான 'சிங்கப்பூர்' துரைராஜ் அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு "எங்களுடைய வெளிநாட்டு வாழ்க்கையை எங்களுடைய குடும்பங்களுக்கு கூட தெரியாது,  எங்களுடைய கஷ்டம் எங்களுடைய இருக்கட்டும் எதற்கு குடும்பத்திற்கு என்று சொல்ல மாட்டோம். ஆனால், எங்களுடைய வாழ்க்கையை  மிக அழகாக காட்சி ஆக்கி அதனை கமர்சியல் உடன் சிரிக்க வைத்து எங்களையும் சிந்திக்க வைத்தது 'உழைப்பாளர் தினம்' படம் என்று ஆனந்த கண்ணீருடன் நன்றி பாராட்டியுள்ளார் . 

மற்றொரு வெளிநாட்டு தொழிலாளர் "என்றாவது ஒருநாள் எனது சொந்த ஊரில் வெற்றிகரமாக சென்று நிரந்தரமாக வாழ்வேன் அதற்கு 'உழைப்பாளர் தினம்' படம் தான் எனக்கு உத்வேகம்" என்றார்.  படம் திரைக்கு வரும் போதும் மீண்டும் பார்க்க ஆவலாக உள்ளார்கள்.  இதனைத் தொடர்ந்து அமெரிக்க மற்றும் துபாயில் சிறப்பு காட்சி திரையிட படக் குழுவினர் முயற்சிகள் மேற்கொண்டு உள்ளனர். 

நடிகர் மற்றும் இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன் சென்ற வருடம் வெளியான 'வட்டார வழக்கு' படத்தில் ஆக்ஷனில் மிரட்டி இருந்தார்.  'உழைப்பாளர் தினம்'  படத்தை நடித்து இயக்கி நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்துள்ளார்.  ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது. "வெளிநாட்டு தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தொழிலாளர்களும் இந்த உழைப்பாளர் தினம் படத்தைக் கொண்டாடுவார்கள்" என்கிறார்.

Next Story

“விஜய் கூறிய விவரங்கள் நெகிழவைத்து” - நித்திலன் சாமிநாதன்

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
nithilan saminathan about vijay praised his maharaja movie

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான படம் ‘மகாராஜா’. பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ இணைந்து தயாரித்திருந்த இப்படம், விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாகும். பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப், நட்டி நட்ராஜ், முனீஸ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படம், நல்ல வரவேற்பை பெற்றது. 

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து பேசிய இத்திரைப்படம், வித்தியாசமான முறையில் திரைக்கதை வடிவமைத்து ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் இப்படம் ரூ.20 கோடி பட்ஜெட்டில் உருவானதாகக் கூறப்படும் நிலையில் 18 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.100 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. 

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதனை விஜய் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நித்திலன் சாமிநாதன், “டியர் விஜய் அண்ணா, இந்த சந்திப்புக்கு நன்றி. உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது ஒரு பெருமையாக உணர்கிறேன். மகாராஜாவைப் பற்றி நீங்கள் கூறிய விவரங்கள் என்னைப் நெகிழவைத்தது. அது எனக்கு பெரிய பாராட்டு. உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் ஊக்கத்துக்கு மிக்க நன்றி. லவ் யூ ணா” என பதிவிட்டுள்ளார்.