Skip to main content

90ஸ் கிட்ஸ்களுக்கு விருப்பமான 5 கிளாசிக் திரைப்படங்கள்

 

logo.jpg


‘கிளாசிக்’ என்ற சொல்லுக்கு பல விளக்கங்கள் இருந்தாலும், சினிமாவைப் பொருத்தவரையில் ஒரு படத்தின் தரம் தலைமுறைகள் கடந்து ரசிக்கப்படுமானால் அதை ‘கிளாசிக் படம்’ என்று வகைப்படுத்தலாம். வெளியான காலத்தில் கொண்டாடப்பட்ட பல திரைப்படங்கள், காலங்கள் கடந்தபின் ரசிக்கப்படுவதில்லை. ‘அப்போ நல்லா இருந்தது, இப்போ புடிக்கல’ என்று பொதுவாக சொல்வதுண்டு. ஒருசில திரைப்படங்களே அடுத்தடுத்த தலைமுறைகளாலும் ரசித்துக் கொண்டாடப்படுகின்றன. 

 

அந்தவகையில் பெரும்பாலான 90ஸ் கிட்ஸ்களுக்குப் பிடித்த கிளாசிக் ‘ட்ரெண்ட் செட்டர்’ படங்கள் என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள களத்தில் இறங்கினோம். நாஸ்டால்ஜியா தன்மையில் இருக்க வேண்டும் என்பதற்காக 1985 - 2000 காலகட்டங்களில் வெளியான படங்கள் மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு, பலரிடமும் கேட்டோம். பலருக்குப் படங்கள் வெளியான ஆண்டு நினைவில்லை என்றாலும், ‘சட்டென்று தோன்றும் படங்களைச் சொல்லுங்கள், நாங்கள் வகைப்படுத்திக்கொள்கிறோம்’ என்று சொல்லி பதில்களைப் பெற்றோம். இதோ அந்த 5 படங்கள்...

 

5. குருதிப்புனல்
 

kp.jpg

 

போலீஸ் கதாபாத்திரமென்றாலே சட்டென்று நம் நினைவுக்கு வரும் படம் ‘குருதிப்புனல்’. இன்றைய தலைமுறை இயக்குனர்களுக்கு கூட, போலீஸ் படம் எடுக்க வேண்டுமென்றால், அவர்களின் முதல் ரெஃபரன்ஸ் ‘குருதிப்புனல்’தான். 1995ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்தப்படம், ‘த்ரோஹ் கால்’ என்ற இந்திப் படத்தின் ரீமேக் ஆகும். இந்தியில் எடுத்த கோவிந்த் நிஹ்லானியே வியந்துபோய் பாராட்டும் அளவுக்கு உருவாக்கியிருந்தார் கமல்ஹாசன். காவல்துறையினருக்கும் தீவிரவாத அமைப்புக்கும் இடையிலான போராட்டமே இப்படத்தின் கதைக்களம். கதாநாயகர்களான கமல், அர்ஜூனை காட்டிலும் வில்லனான நாசர் என்ற மகா நடிகனைப் பார்த்துதான் மக்கள் மிரண்டனர். வில்லன் கதாபாத்திரத்தை எப்படி கட்டமைக்க வேண்டும் என்பதற்கு பத்ரி கதாபாத்திரம் ஓர் உதாரணம். இந்தப் படத்தில் கமல், நாசரை விசாரிக்கும் காட்சி, ‘விக்ரம் வேதா’ வரை பல படங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறது. 

 

படத்திற்கு கிளாசிக் தன்மை கொடுத்த விஷயங்களாக ஒளிப்பதிவு, இசை, வசனம் ஆகியவற்றைச் சொல்லலாம். ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம் எனும்போதே அதன் தரம் நமக்குத் தெரிந்துவிடும். பாடல்களே இல்லாத படத்தில் பின்னணி இசையின் முக்கியத்துவத்தை உணர்ந்து இசையமைத்திருப்பார் மகேஷ். ‘வீரம்னா என்னன்னு தெரியுமா, பயம் இல்லாத மாரி நடிக்கறது’, ‘எல்லாருக்கும் ஒரு செக் பாயிண்ட் இருக்கு’ போன்ற வசனங்கள் இன்றளவும் இளைஞர்கள் மத்தியில் பிரபலம். 

 

கமல் படம் என்றால் புதிய தொழில்நுட்பங்கள் இல்லாமலா..! டால்பி தொழில்நுட்பத்தில் வெளியான முதல் இந்திய திரைப்படம் ‘குருதிப்புனல்’. இதற்காக சென்னையில் உள்ள தேவி தியேட்டரை தன் சொந்த செலவில் டால்பி தியேட்டராக மாற்றினாராம் கமல். வெளியான போது கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், இன்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய அரசு அந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘குருதிப்புனல்’ படத்தைப் பரிந்துரைத்தது. 

 

4. தளபதி     
 

da.jpg

 

கமர்ஷியல் வலையிலிருந்து ரஜினி எனும் அற்புத நடிகனை மீட்டுக்கொடுத்த படம் ‘தளபதி’. 1991ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம், மகாபாரதக் கதாபாத்திரங்களான அர்ஜூனன் (அர்ஜூன்), கர்ணன் (சூர்யா), துரியோதனன் (தேவராஜ்) ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது. கேங்க்ஸ்டர் படங்களுக்கான புது வடிவத்தைக் கொடுத்த ‘தளபதி’, மாஸ் & கிளாஸ் படங்களுக்கான முன்னோடியாகவும் திகழ்கிறது. 

 

கதையின் போக்கில வரும் வசனம், ரஜினிக்கான பன்ச் வசனங்களாக மாறிய அற்புத தருணம் ‘தளபதி’யில் நடந்தது. ‘என்னடா பண்ணுவான் அந்த தேவராஜ்..’, ‘இது சூர்யா சார், உரசாதீங்க..’, ‘தொட்ரா பாக்கலாம்..’ என ரஜினி பேசும் வசனங்கள் இன்றளவும் பேசப்படுகிறது. மிக முக்கியமாக குறிப்பிட வேண்டியது படத்தின் இசை. டைட்டில் கார்டில் தொடங்கும் இளையராஜாவின் ராஜ்ஜியம் இறுதிவரை அதகளப்படுத்தியிருக்கும். “நீயெல்லாம் மனுசனாயா...” என்று ரசிகர்கள் அன்பாக கோபப்படும் அளவுக்கு உணர்ச்சிகளைத் தூண்டியிருப்பார் ராஜா. அன்றைய காலகட்டத்தில் உலக அளவில் அதிகம் கேட்கப்பட்ட பாடல் என்ற பிபிசியின் கணக்கெடுப்பில் முதல் பத்து இடங்களில் இடம்பெற்றது ‘ராக்கம்மா கையத்தட்டு...’ பாடல். இசையைக் கேட்டாலே காட்சி நினைவுக்கு வரும் அளவுக்கு ரசிகர்கள் மனதை நிறைத்திருந்தார் ராஜா. மணிரத்னம் - இளையராஜா கூட்டணியின் கடைசிப் படம் இது என்பது வரலாற்றுச் சோகம். 

 

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவும் சற்றும் சளைத்ததல்ல. மணிரத்னத்தின் காட்சிமொழிக்கு கூடுதல் அழகியலை வழங்கியிருப்பார் சந்தோஷ் சிவன். ஓவியத்துக்கான ஒளி சிதறல்களைக் காட்சி படிமங்களாக்கிய திறமை அனைவரையும் வியக்க வைத்தது. உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், தன் தாய் யார் என்று சூர்யாவுக்கு (ரஜினி) தெரிந்த பின்பு வரும் ‘சின்னத்தாயவள்...’ பாடலி்ன் நடுவில், கூட்டத்தின் இடையே கேமராவை வைத்து, கதாநாயகனோடு சேர்த்து நம்மையும் அவன் தாயைத் தேட வைத்த காட்சியைச் சொல்லலாம். இத்தனை நிறைகள் இருந்தாலும், படத்தில் நம்மை உறுத்தும் விஷயம் கதைக்களம். கதை எந்த ஊரில் நடைபெறுகிறது என்பதைச் சொல்பவர்களுக்கு 1 லட்சம் பரிசு தரப்படும் என்று அறிவிக்கும் அளவுக்கு, கடல், மலை, ஆற்றங்கரை, சேரி, நகரம் என தோன்றுகிற இடத்தில் எல்லாம் படமாக்கியிருக்கிறார் மணிரத்னம்.

 

3. ஹே ராம்
 

hr.jpg

 

பத்து பதினைந்து கட்டுரைகள் எழுதுமளவுக்கான உள்ளடக்கத்தைக் கொண்ட படம் ‘ஹே ராம்’. பிற கமல் படங்களைப் போலவே இந்தப் படமும் வெளியான சமயத்தில் யாருக்கும் புரியவில்லை. பெரும்பாலான வசனங்கள் பெங்காலி, மராத்தி, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் இருந்ததும் அதற்கு தமிழில் சப் டைட்டில் போடாததுமே குறையாகச் சொல்லப்பட்டது. இருப்பினும் படம் உருவாக்கப்பட்ட விதத்தைப் பார்த்து யாரும் பிரமிக்காமல் இல்லை. 

 

காலப்பயணம் செய்து உண்மையாகவே அந்தந்த இடங்களில் படமெடுத்திருப்பாரோ என்று நினைக்குமளவுக்கு உருவாக்கியிருந்தார் கமல்ஹாசன். தான் இயக்கும் முதல் படம் என்பதால் உட்சபட்ச உழைப்பை வழங்கியிருந்தார் கமல். எந்த வகையிலும் சமரசம் செய்யாத அவரது உழைப்பு இன்றைய இயக்குனர்களுக்கும் வருங்கால இயக்குனர்களுக்கும் ஒரு பாடம். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் போன்றோரது அபார திறமையையும் தாண்டி, படத்தைப் பிரமித்து பார்க்கச் செய்தது சாபு சிரிலின் கலை இயக்கம். பாகிஸ்தான், கொல்கத்தா,. தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி என பயணிக்கும் கதையில், அதிலும் பீரியட் ஃபிலிம், எந்த இடத்திலும் நம்பகத்தன்மையை சிதைக்காத உழைப்பை எப்படி கொண்டாடுவது என்று தெரியவில்லை என்பதுதான் நம் பாராட்டாக இருக்க முடியும்.

 

இசை இளையராஜா. “இசையமைப்பாளராக ஆசைப்படுகிறவர்களுக்கு ‘ஹே ராம்’ படத்தின் இசை ஒரு மியூசிக்கல் சிலபஸ்” என்று கமல் சொன்னதிலேயே படத்தின் இசை குறித்து தெரிந்துகொள்ளலாம். ‘இசையில் தொடங்குதம்மா...’ பாடலுக்காகவே இளையராஜாவை கொண்டாடலாம். 

 

கருத்து ரீதியாக பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், சினிமாவின் அனைத்து துறையைச் சேர்ந்தவர்களும் கற்றுக்கொள்வதற்கு இப்படத்தில் ஏராளமான நுட்பங்கள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. எல்லா படத்திலும் புதுமையான முயற்சியை மேற்கொள்ளும் கமல், இந்தப் படத்தை லைவ் ரெக்கார்டிங் (live recording) முறையில் படமாக்கியிருக்கிறார். மூன்று தேசிய விருதுகளைப் பெற்ற ‘ஹே ராம்’, இந்திய அரசு சார்பில் அந்த ஆண்டுக்கான (2000) ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

 

2. ஊமை விழிகள்
 

ov.jpg

 

1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளியான ‘ஊமை விழிகள்’ தமிழ் சினிமாவின் மைல்கல் என்றால் மிகையாகாது. சென்னை திரைப்படக் கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய படம் என்பதே தனி சிறப்பு. மேலும் தமிழ் சினிமாவில் அதுவரை நிலவி வந்த சில சென்டிமென்ட்களை உடைத்தப் படமும் ‘ஊமை விழிகள்’தான். சினிமாஸ்கோப் முறையில் எடுத்தால் படம் ஓடாது என்ற சென்டிமென்ட்டை உடைத்து வெள்ளிவிழா கண்டது இப்படம். முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என யாரும் இல்லாமல் முழுக்க திரைப்படக் கல்லூரி மாணவர்களே பங்காற்றிய படம், தரத்திலும் வசூலிலும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

 

இளைஞர்களின் முயற்சி என்பதாலேயே சம்பளம் வாங்காமல் நடித்துக்கொடுத்திருக்கிறார் விஜயகாந்த். இந்தப் படத்தில்தான் அருண்பாண்டியன் நடிகராக அறிமுகமாகிறார். இதன் நினைவாகவே தான் நடித்த நூறாவது படத்தை (தேவன்), தானே இயக்கி, அதில் ‘ஊமை விழிகள்’ படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்களை நடிக்க வைத்திருந்தார் அருண்பாண்டியன். கதை, திரைக்கதை எழுதிய ஆபாவாணன், பாடல்களையும் எழுதியிருந்தார். மனோஜ் - கியான் இசையில் பாடல்கள் வெற்றிபெற்றாலும், இப்போது பார்க்கும்போது சில பாடல்கள் வேகத்தடையாக இருப்பதை உணர முடியும்.

 

ஒளிப்பதிவுக்காகவே கொண்டாடப்பட்ட படம் ‘ஊமை விழிகள்’. கிளைமாக்ஸில் சிறு புள்ளியாக தொடங்கி வரிசையாக போலீஸ் ஜீப்கள் வரும் காட்சியை விமர்சகர்கள், பொதுமக்கள் என அனைவரும் சிலாகித்தனர். சஸ்பன்ஸ் திரில்லர் படத்தின் தன்மைக்கேற்ப பெரும்பாலும் இரவிலேயே படமாக்கியிருந்தார்கள். முதிர்ந்த நடிகர்களான ஜெய்சங்கர், இரவிச்சந்திரன், இளைய நடிகர்களான கார்த்திக், அருண்பாண்டியன், வாகை சந்திரசேகர் இவர்களுடன் விஜயகாந்த், சரிதா, ஸ்ரீவித்யா, குமரிமுத்து, மலேசியா வாசுதேவன் என கலவையான நடிகர் பட்டாளமே அசத்தியிருந்தாலும், சோழா பிக்னிக் வில்லேஜில் இருக்கும் பாட்டியை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

 

1. மௌன ராகம்

 

mor.jpg


உங்களது கிளாசிக் படங்கள் லிஸ்ட்டில் மேற்குறிப்பிடங்கள் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆனால் 95 சதவீத 90ஸ் கிட்ஸ்களின் கிளாசிக் படங்கள் பட்டியலில் கட்டாயம் இடம்பெறும் படம் ‘மௌன ராகம்’.  கொள்கை ரீதியாக மணி ரத்னத்தை விமர்சிப்பவர்கள் கூட, அவரது மேக்கிங்கை குறைசொல்ல மாட்டார்கள். மணிரத்னத்துக்கு இது ஐந்தாவது படம், ஆனால் இதுவே அவரது முதல் படமாகக் கருதப்படுகிறது. சினிமா என்பது காட்சி ஊடகம் என்பதை உணர்ந்த மிகச்சில இயக்குனர்களில் மணிரத்னம் முதன்மையானவர். முன்னதாக மகேந்திரன் இருந்தாலும், அவரது படங்களில் (இரண்டு படங்களைத் தவிர) சற்றே நாடகத்தனம் இருக்கும். ஆனால் நாடகத்தனமற்ற, இயல்பான, கவித்துவமான காட்சி மொழி உடையவர் மணி ரத்னம். அதற்கு மௌன ராகமே முதல் சான்று.

 

cnc

 

முதன்முதலாக இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள், கார்த்திக் வரும் காட்சிகளைத்தான் அதிகம் ரசிப்பார்கள். ‘மிஸ்டர் சந்திரமௌலி...’ என்று கார்த்திக் பேசும் காட்சி பரவலான வரவேற்பைப் பெற்று, திரைப்பட பெயராகவும் உருமாறியது. அடுத்தடுத்த முறை பார்ப்பவர்கள் மெல்ல மெல்ல ரேவதி வரும் காட்சிகளை ரசிக்கத் தொடங்குவார்கள். ‘கம்பிளி பூச்சி ஊறுற மாரி இருக்கு...’ என்ற வசனம் பலவிதமான உணர்வுகளைத் தூண்டக் கூடியது. ஆனால் படத்தை முழுமையாக ரசித்தவர்களுக்கு மோகனின் நடிப்பே வியப்பைத் தரும். இத்தகைய எழுத்தும் உருவாக்கமுமே மணிரத்னத்தின் பலம்.

 

இந்தப் படத்தை இன்றளவும் ஃப்ரெஷ்ஷாக வைத்திருப்பது பி.சி.ஸ்ரீராமின் கேமராவும், இளையராஜாவின் இசையும்தான். படத்தின் பின்னணி இசை, இன்றைய இளைஞர்களின் ரிங் டோனாக ஒலிப்பதே அதற்கு சாட்சி. நேர்த்தியான மேக்கிங், வலிமையான கதாபாத்திர வடிவமைப்பு, தேவையற்ற காட்சிகள் இல்லாதது, கச்சிதமான இசை, முக்கியமாக அளவான கூர்மையான வசனங்கள் இவையாவும் ‘மௌன ராக’த்தை தலைமுறைகள் கடந்து ரசிக்க வைக்கிறது.


மேற்குறிப்பிட்ட 5 படங்கள் தவிர்த்து பல படங்கள் விடுபட்டுப் போனதாக தோன்றலாம்.. ஆனால் பழைய மரபுகளை உடைத்து, புதிய பாதைகளை உருவாக்கும் படைப்புகளே ‘கிளாசிக்’ என்று சொல்லப்படும். அந்தவகையில் தமிழ் சினிமாவில் அதுவரை இருந்த ட்ரெண்டை உடைத்து ‘ட்ரெண்ட் செட்டர்’ படங்களாக உள்ள படங்களைத்தான் இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளோம். இருப்பினும் விடுபட்ட ட்ரெண்ட் செட்டர் படங்கள் குறி்த்த விமர்சனத்தையும் ஏற்கிறோம்.