Skip to main content

"அண்ணன் ஜெயிச்சி வரும்போது நானும் குடும்பத்தோடு வர்றேம்மா" வைகோ வீட்டில் விஜயகாந்த்! - கடந்த கால தேர்தல் கதைகள் #6 

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

உடல்நலம் குன்றியிருந்த தேமுதிக தலைவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுத் திரும்பினார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளில் அவர் கலந்துகொண்டாலும் தொண்டர்களிடம் நேரடியாகப் பேசக்கூடிய நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் அவர் கலந்துகொள்வார் என்று அவ்வப்போது கூறப்பட்டது. அவரே ஒரு பேட்டியில் மருத்துவர் அறிவுரைப்படி பிரச்சாரத்தில் கலந்துகொள்வேன் என்று கூறினார். ஆனாலும், ஆரம்ப கட்ட தேர்தல் பிரச்சாரங்களில் எதுவும் கலந்துகொள்ளவில்லை. நாளை பிரச்சாரம் முடியவிருக்கும் நிலையில் இன்று சென்னையில் விஜயகாந்த் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வார் என்று நேற்று ஒரு அறிவிப்பு வந்தது. வடசென்னையில் விஜயகாந்த்தின் குரலைக் கேட்க தொண்டர்கள் ஆர்வத்துடன் கூடினார்கள்.

 

vaiko with vijayakanth



கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக அமைத்த கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் இருந்தன. அதில் மதிமுக - தேமுதிக இரண்டு கட்சித் தலைவர்களிடையே நல்ல உறவும் நெருக்கமும் இருந்தது. பாமக - தேமுதிக இரண்டு கட்சிகளும் சற்று விலகியே நின்றிருந்தன. தேர்தலுக்கு முன்பும் தேர்தலுக்கு பின்பும் அவர்களிடையே நல்லுறவு இல்லை. இப்பொழுது மதிமுக, திமுக தலைமையிலான கூட்டணிக்கு சென்றுவிட்டது. தேமுதிகவும் பாமகவும் பாஜகவுடன் அதிமுக தலைமை என்று சொல்லப்படும் கூட்டணியில் இருக்கின்றன. இப்பொழுது முழு வீச்சில் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள முடியாத நிலையில் இருக்கும் விஜயகாந்த், கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் சுழன்று பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கலிங்கப்பட்டியில் உள்ள மதிமுக தலைவர் வைகோ வீட்டிற்கும் சென்றார். 

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது விஜயகாந்த் தன் இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்பு சென்னையில் இருந்தபோது அவரை போனில் தொடர்புகொண்ட வைகோ, "கேப்டன்.. நான் இப்ப கலிங்கப்பட்டி வீட்டிலே இருக்கேன். எங்கம்மா உங்ககிட்டே பேசணும்னு சொன்னாங்க கேப்டன்" என்று சொல்ல, விஜயகாந்த்தும் ஆர்வத்தோடு, "அம்மாகிட்டேயா.. கொடுங்கண்ணே"ன்னு சொல்லியிருக்கிறார். விஜயகாந்த்கிட்டே போனில் பேசிய வைகோவின் அம்மா மாரியம்மா, "தம்பீ உங்களை போட்டோவுல பார்த்திருக்கேன், டி.வி.யில பார்த்திருக்கேன். உங்களைப் பத்தி, உங்க பூர்வீகம் பத்தியெல்லாம் புள்ள சொல்லுச்சு. இங்கதான் உங்கம்மா பொறந்த ஊராமே, நீங்களும் எனக்குப் புள்ளதான். இங்கே பிரச்சாரத்துக்கு வரும்போது எங்க வீட்டுக்கு வாங்க. எனக்கு வயசாயிடிச்சி. என்னால அங்க வந்து உங்களைப் பார்க்க முடியாது. உங்களை நேரிலே பார்க்க ஆசையா இருக்குது தம்பி"ன்னு அன்போடு சொல்ல, விஜயகாந்த்தும் நெகிழ்ந்து போய், "என் அம்மாவைப்போலத்தான் நீங்களும். உங்க வீட்டுக்கு வந்து கண்டிப்பா பாக்குறேன். அது உங்க வீடல்ல. நம்ம வீடு.. வந்து சாப்பிடுறேம்மா" என்று சொன்னாராம்.

 

vijayakanth at vaiko's house



பின்னர் தென்தமிழகத்தில் தனது பிரச்சாரப் பயணத்தின் போது, வைகோ வீட்டிற்குச் சென்றார் விஜயகாந்த். கலிங்கப்பட்டி வீட்டில் வைகோ அம்மாவும் உறவினர்களும் இருந்திருக்கிறார்கள். எல்லோரையும் விஜயகாந்த்துக்கு வைகோ அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். வீட்டில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனோடு வைகோ இருந்த படத்தை விஜயகாந்த் ஆச்சரியமாகப் பார்க்க, தோணியிலே ஈழத்துக்குப் போனப்ப உதவியவரை விஜயகாந்த்திடம் வைகோ அறிமுகப்படுத்தினார். பின்னர்  அவரை சாப்பிட அழைத்தார் வைகோ. தோசை, வடை, தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று டிபன் பரிமாறப்பட, ருசித்து சாப்பிட்ட விஜயகாந்த்துக்கு அல்வாவும் பரிமாறப்பட்டது.

விருந்துக்குப் பிறகு வீட்டில் உள்ள அறையில் இரண்டு பேரும் 15 நிமிடம் பேசியிருக்கிறார்கள். பேசியது சம்பந்தமாக இரண்டு பேருமே தங்களுக்கு வேண்டியவர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, தே.மு.தி.க நின்ற தொகுதிகளில் பா.ம.ககாரர்கள் சரியாக  ஒத்துழைப்பு தருவதில்லையென்று விஜயகாந்த் சொன்னதோடு, 'சேலத்தில் சுதீஷை நிற்கச் சொன்னதே அன்புமணிதான். ஆனா சேலத்துல உள்ள பா.ம.க.காரங்க எங்களோட ஒட்டாம இருக்காங்க' என்று வருத்தத்தோடு விஜயகாந்த் சொல்ல, அவரை சமாதானப்படுத்திய வைகோ, "விடுங்க கேப்டன், அடுத்த சட்டமன்றத் தேர்தலை நாமதான் நிர்ணயிக்கப்போறோம். நாம இனி இணைந்தே இருப்போம்" என்று சொல்லியிருக்கிறார். கலிங்கப்பட்டி வீட்டிலிருந்து விஜயகாந்த் புறப்படும்போது வைகோ அம்மாவிடம், "அண்ணன் வைகோ ஜெயிச்சி மத்திய மந்திரியா இங்கே வரும்போது நானும் குடும்பத்தோடு நம்ம வீட்டுக்கு வர்றேம்மா" என்று  சொல்லிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நல கூட்டணியுடன் தேமுதிக சேர்ந்து போட்டியிட்டது.  இப்படியிருந்த இரு கட்சிகளும் தலைவர்களும் இன்று எதிரெதிர் முகாம்களில் இருக்கிறார்கள். அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை, இப்போதிருக்கும் நிலையும் நிரந்தரமில்லை. 

 

 

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.  

Next Story

“மத்தியில் நல்லாட்சி அமைய துரை வைகோவுக்கு வாக்களியுங்கள்” - அமைச்சர் கே.என்.நேரு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vote for Durai Vaiko for good governance in Madhya Pradesh Minister KN Nehru

திருச்சி பாராளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளர் துரைவைகோ, நேற்று காலை ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சித்தாநத்தத்தில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார்.  தொடர்ந்து சமுத்திரம், மறவனுார், கண்ணுடையான்பட்டி, முத்தப்புடையான்பட்டி, மொண்டிப்பட்டி, பெரியப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும், மாலை ஸ்ரீரங்கம் மேலுார், மூலத்தோப்பு, வடக்குவாசல், கீழவாசல், அம்பேத்கர்நகர், நெல்சன் ரோடு மற்றும் அந்தநல்லுார் ஒன்றியத்துக்குட்பட்ட பகுதிகளிலும் நேற்று வீதி, வீதியாக ஓட்டு சேகரித்தார்.

அமைச்சர் கே.என்.நேரு, பொதுமக்களிடையே ஓட்டு சேகரித்து பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில்,‘‘துரை வைகோ எம்பியாக வெற்றி பெற்றால் மத்திய அரசில் இருந்து அனைத்து நன்மைகளும் திருச்சிக்கு கிடைக்கும். இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் மணப்பாறை சிப்காட் உணவுப்பூங்கா, பாதுகாப்பு தளவாட தொழிற்சாலை அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இப்போதுள்ள மத்திய அரசு உதவ மறுப்பதால் இத்திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை. ஐஎன்டிஐஏ கூட்டணி வெற்றி பெற்றால், இந்த திட்டங்கள் நமக்கு வந்து சேரும். பாஜ அரசு 100 நாள் வேலை திட்டத்தை 30 நாளாக குறைத்துவிட்டது. எனவே, மத்தியில் நல்லாட்சி அமைய துரை வைகோ வெற்றி பெற, தீப்பெட்டி சின்னத்தில் ஓட்டளிக்க வேண்டும்’’, என்றார்.

பிரச்சாரத்தில் வேட்பாளர் துரை வைகோ பேசுகையில்,‘‘இந்த தேர்தல் டில்லியில் யார் ஆட்சிக்கு வர வேண்டும், வரக்கூடாது என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். ஸ்ரீரங்கத்துக்கு உலகத்தின் பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். நான் வெற்றி பெற்றால், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பான அனுபவத்தை தரும் வகையிலான திட்டங்களை செயல்படுத்துவேன். கடந்த 3 ஆண்டுகளில் ஸ்ரீரங்கம் நகரத்துக்கு தேவையான புதிய பஸ் நிலையம், புதிய சாலைகள், ரூ.138 கோடி செலவில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், காவிரியின் குறுக்கே புதிய பாலம் திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.

மத்திய அரசு தமிழகத்திற்கு உரிய நிதியை முழுமையாக வழங்காததால் மேலும் பல திட்டங்களைச் செயல்படுத்தவில்லை. இந்நிலையில், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ராகுல் காந்தி பிரதமர் ஆனால்  தமிழகத்திற்கு உரிய நிதி கிடைக்கும். அதன்மூலம் ஸ்ரீரங்கம் உட்பட தமிழகத்திற்கான நிதியை பெற்று திட்டங்களை செயல்படுத்தலாம். கல்விக் கடன், பயிர்க்கடன் ரத்து என பல்வேறு வாக்குறுதிகளை இந்தியா கூட்டணி வாக்குறுதிகளாக அளித்துள்ளது. எளிய மக்கள் எளிதில் அணுகும் எளிமையான எம்பியாக, தொகுதி மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எம்பியாக, ஸ்ரீரங்கம் பகுதி மக்களின் குரலாக லோக்சபாவில் ஒலித்து சிறந்த எம்பியாக செயல்படுவேன். அதற்கு எனக்கு ‘தீப்பெட்டி’ சின்னத்தில் ஓட்டளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்’’ என்றார்.

பிரச்சாரத்தில், திமுக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, மாநகரச் செயலாளர் மேயர் அன்பழகன், எம்.எல்.ஏ பழனியாண்டி, மேயர் அன்பழகன், பகுதி செயலாளர் ராம்குமார், மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்ட திமுக, மதிமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.