/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Thilagavathi32.jpg)
மது என்கிற கேரள பழங்குடி இளைஞர் கொல்லப்பட்ட வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்.
கோர்ட்டில் மது மரணத்திற்கு முதலில் உண்மைக்கு ஆதரவாக சாட்சி சொன்னவர்கள் பிறகு பிறழ் சாட்சிகளாக மாறினர். இது தொடர்ச்சியாக நடந்தது. இதனால் வழக்கு தாமதமானது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை மதுவின் குடும்பத்தினர் வைத்தனர். தற்போது விசாரிக்கும் அதிகாரியை மாற்ற வேண்டும் என்றும் கேட்டனர். வழக்கு அப்படியே நின்று போனது. அதன் பிறகு உள்ளே வந்த பல்வேறு அதிகாரிகளும் வேறுவேறு காரணங்களைக் கூறி வெளியேறினர். சாட்சிகள் ஏன் பிறழ் சாட்சிகளாக மாறுகின்றனர் என்கிற ரீதியில் விசாரணை நடைபெற்றது.
மதுவின் தாயிடம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்று 50 லட்ச ரூபாய் பணம் தருவதாகப் பேரம் பேசியுள்ளனர். இது குறித்து அவரும் மதுவின் சகோதரியும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுபோல் சாட்சிகள் அனைவருக்கும் வேண்டியவற்றை அவர்கள் செய்து கொடுத்தது தெரிந்தது. சாட்சிகள் பாதுகாப்பாக வந்து சாட்சி சொல்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்தனர். அவர்களைத் தீவிரமாக கண்காணித்தனர். வழக்கு விசாரணை நடைபெற்றது. குற்றவாளிகள் கோர்ட்டில் அநியாயமாகப் பேசினர். நடந்த குற்றத்துக்கான ஆதாரமாக தெளிவான படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்தும் குற்றங்களை அவர்கள் மறுத்தனர்.
குற்றவாளிகள் தொடர்ந்து பொய்களைச் சொல்லி வந்தனர். வீடியோ ஆதாரம் மற்றும் மருத்துவரின் அறிக்கையை வைத்து மதுவின் இறப்புக்குக் காரணமான பெரிய காயம் ஏற்படும் அளவுக்கு கொடூர தாக்குதலை நடத்திய உசேன் என்பவன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டான். அவனுடன் 16 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். செல்ஃபி எடுப்பதற்காகத் தான் அங்கு சென்றோம் என்று கூட குற்றவாளிகளில் ஒருவன் கூறிய கொடுமை எல்லாம் நடந்தது. உசேன் என்பவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
மற்றவர்களுக்கு அவர்கள் செய்த குற்றத்துக்கு ஏற்ற வகையில் தண்டனை வழங்கப்பட்டது. சொற்ப காயம் விளைவித்தவருக்கு மூன்று மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் 11000+ பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் ஒரு பாடமாகவே அமைந்தது.இவ்வளவு கொடூரமான கொலையைச் செய்த குற்றவாளிகளுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது மிகவும் குறைவு என்று மதுவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். தங்களுக்கு இழப்பீடு எதுவும் வேண்டாம் என்றும், மது மீண்டும் உயிருடன் வேண்டும் என்றும் அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)