thilagavathi-ips-rtd-thadayam-21

வித்தியாசமான ஒரு வழக்கு குறித்தவிவரங்களை, தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

Advertisment

1989 ஆம் ஆண்டு நடந்த கேஸ் இது. அப்போது நான் திருநெல்வேலி சென்றிருந்தேன். அங்கு கல்லூரி மாணவிகள் நீதி கேட்டு போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். ஒரு இளம் கல்லூரி பேராசிரியையின் இறப்புக்கான நீதி கேட்டு அவர்கள் போராடினர். அவருடைய சாவில் மர்மம் இருக்கிறது என்று அவர்கள் கூறினர். இறந்துபோன பேராசிரியையின் பெயர் லீலா ஜாய்ஸ். அக்கா, தம்பி, அம்மா என்று அவருடைய குடும்பம் இருந்தது. அப்பா இறந்துவிட்டார். அந்தப் பெண் நன்றாகப் படிப்பவர். அவருடைய திறமையால் கல்லூரியில் பணிபுரியும் வாய்ப்பு 1987 ஆம் ஆண்டு அவருக்கு கிடைத்தது.

Advertisment

1988 ஆம் ஆண்டு உடல் பாதிப்புற்ற மாணவர்களுக்கான பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரின் மகனுடன் இந்தப் பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. மாணவிகளுக்கு மிகவும் பிடித்தமான பேராசிரியராக அந்தப் பெண் திகழ்ந்தார். மேற்படிப்பு படிப்பதற்காக அவர் உட்பட நான்கு ஆசிரியர்கள் திருச்செந்தூர் கல்லூரிக்கு சென்றனர். திருமணத்துக்கு முன்பு அந்தப் பெண்ணிடம் இருந்த கலகலப்பு இப்போது இல்லை என்பதை அனைவரும் கவனித்தனர். முன்பு போல் அவர் பேசவில்லை. ஒருநாள் கல்லூரியிலிருந்து அவர் அவசரமாக வீட்டுக்குச் சென்றார். அதுதான் அவரை கல்லூரியில் அனைவரும் கடைசியாகப் பார்த்தது.

லீலாவின் மாமனார் மற்றும் அவருடைய தம்பி இருவரும் லீலாவை ஒரு காருக்குள் வைத்து அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். லீலா ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்தது. மாமனாரின் தம்பி அரசு மருத்துவமனையில் லீலாவுக்கு இறப்பு சான்றிதழ் பெற முயற்சித்தார். அவரும் மருத்துவமனையில் டிரைவராக வேலை செய்ததால் லீலா மாரடைப்பால் இறந்ததாக எளிதாக இறப்பு சான்றிதழ் பெற்றார். சொந்தங்கள் அனைவருக்கும் சொல்லி அனுப்பினார்கள். லீலாவின் தரப்பைச் சேர்ந்தவர்களுக்கு இந்த இறப்பில் ஒரு சந்தேகம் இருந்தது.

அவர்கள் வீட்டில் இருந்த இரண்டு பசு மாடுகளும் இறந்து கிடந்தன. இது சந்தேகத்தை மேலும் வலுவடையச் செய்தது. லீலாவின் குடும்பத்தினர் மற்றும் உடன் வேலை செய்த பெண்கள் அனைவரும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றனர். பரிசோதனையில் லீலாவுக்கு இதயத்தில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பதும் லீலாவுக்கும், பசு மாடுகளுக்கும் சைனைடு கொடுக்கப்பட்டது என்பதும் தெரிந்தது. இது ஒரு பார்வை. அந்தப் பெண்ணின் மாமனார் பலமுறை அவளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்று, குடும்பத்தினரிடம் பலமுறை தெரிவித்தும் அவர்கள் அதை நம்ப மறுத்து, ஒருநாள் அப்படியான அத்துமீறலில் அவர் ஈடுபட்டபோது விபத்து ஏற்பட்டு அந்தப் பெண் இறந்தார் என்பது இன்னொரு பார்வை.

என்னதான் நடந்தது லீலாவிற்கு என்பதை அடுத்த பாகத்தில் காணலாம்...