/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Thila_0.jpg)
காவல்துறைக்கு கடும் சவாலாக விளங்கிய மம்பட்டியானின் வாழ்க்கையிலிருந்து சில பகுதிகளை ஏற்கனவே பார்த்தோம்.இன்னும் பல சுவாரசியமான தகவல்களை நமக்கு விவரிக்கிறார் தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி அவர்கள்.
காட்டுப் பகுதிகளில் நடந்து செல்வதே மம்பட்டியானின் வழக்கம். காடுகளின் அமைப்பு முழுவதும் அவருக்கு அத்துப்படி. ஊர் மக்களுக்குப் பல வேளைகளில் அவர் உதவியிருக்கிறார். தன்னுடன் பயணிப்பவர்களுக்கு உணவு வழங்குவதற்காக அவர் கொள்ளைகளை மேற்கொண்டார். இதனால் காவல்துறையின் கோபத்திற்கு அவர் ஆளானாலும் மக்களில் பெரும்பாலானோர் அவர் மீது பயம் கலந்த அன்பு வைத்திருந்தனர். மம்பட்டியானைப் பிடிப்பதற்கு உளவாளிகள், மலபார் போலீஸ், கர்நாடக போலீஸ் என்று பலருடைய உதவியையும் தமிழ்நாடு போலீசார் நாடினர்.
மம்பட்டியான் குறித்து சட்டசபையில் காரசார விவாதங்கள் எழுந்த பிறகு, மம்பட்டியானை உயிருடனோ பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்தது. மம்பட்டியானோடு இணக்கமாகச் செல்ல காவல்துறை நினைக்கவில்லை. என்கவுண்டர்கள் பலமுறை நடைபெற்றாலும் அதில் மம்பட்டியானை ஒன்றும் செய்ய முடியவில்லை. மம்பட்டியானுக்கு இரண்டு முறை திருமணம் நடைபெற்றிருக்கிறது. அவருக்கு மொத்தம் 5 குழந்தைகள்.
மம்பட்டியான் உண்மையில் நல்லவரா கெட்டவரா என்று சொல்ல முடியவில்லை. சிறு வயதில் எனக்கு அவர் ஒரு ராபின்ஹுட் போல தான் தெரிந்தார். பிற்காலத்தில் காவல்துறை அதிகாரியான பிறகு, சட்டவிரோதமாக அவர் செய்த செயல்களை அறிந்த பிறகு, அவர் காவல்துறையின் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டியவர் தான் என்பதை உணர்ந்தேன். தன் நண்பரின் சகோதரியான நல்லம்மாள் மீது அவர் கொண்ட காதல் தான் அவருடைய உயிருக்கு ஆபத்தாக மாறியது. அதற்கு முன்பே அந்த நண்பரின் இன்னொரு விதவை சகோதரியோடும் மம்பட்டியானுக்குத் தொடர்பு இருந்தது. அதனால் அவருடைய நண்பனே அவருக்கு எதிரியாக மாறி, காவல்துறையோடு சேர்ந்துகொண்டுஇறுதியில் பாயாசத்தில் விஷம் வைத்து தான் மம்பட்டியானைக் கொல்ல முடிந்தது.
மம்பட்டியானின் உடல் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டபோது மிகப்பெரிய கூட்டம் திரண்டது. பெண்கள் பலர் அன்று முழுவதும் சாப்பிடவே இல்லை. பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து மம்பட்டியானின் உடலைப் பார்க்கச் சென்றனர். சமீபத்தில் மம்பட்டியானின் மகன் கொடுத்த பேட்டி ஒன்றைப் பார்க்க முடிந்தது. மிகவும் உடல் தளர்ந்து போயிருந்த அவருடைய பேச்சில் மம்பட்டியான் குறித்த எந்தப் பெருமிதமும் இல்லை. மம்பட்டியானால் தான் இன்னும் தலைமறைவு வாழ்க்கை வாழ வேண்டியுள்ளது என்று அவர் விரக்தியோடு பேசினார். போலீசாரின் தொந்தரவு இல்லை என்றாலும் சொந்த ஊரில் இருந்த பகை காரணமாக அவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)