Skip to main content

தற்காப்பு, தற்பெருமை தெரியும்... தற்படம் தெரியுமா? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 20

Published on 14/09/2018 | Edited on 25/09/2018
soller uzhavu

 

 

தான், தன் என்னும் இரண்டு சொற்களை அறிவீர்கள். தான் என்பது படர்க்கை ஒருமைப் பெயர்.   “தான் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் பேசினான்” என்னும்போது அங்கே தான் என்பது படர்க்கையிடத்திலுள்ள ஒருமையைக் குறிக்கிறது.

தான் என்பதற்கு ஆண்பால், பெண்பால் வேறுபாடு இல்லை. “தான் நினைப்பதைச் செய்து முடித்தே பழக்கப்பட்டவள் அவள்” என்னும்போது அங்கே தான் என்பது பெண்பாலுக்கும் பொருந்துகிறது.

 

தான் ஓடினால்தான் தப்பிக்க முடியும் என்று அந்த மான் நினைத்தது – இந்தச் சொற்றொடரைப் பாருங்கள். இங்கே தான் என்பது படர்க்கை ஒருமையில் மானைக் குறிக்கிறது.

 

ஆண்பால், பெண்பால் உயர்திணைக்கும் வந்தது. மான் என்னும் ஒன்றன்பாலில் அஃறிணைக்கும் வந்தது. தான் என்னும் அச்சொல் அத்துணை வலிமையானது. எழுதுவோர்க்கும், உரியவாறு விளக்கிப் பேசுவோர்க்கும் தான் என்னும் சொல் நன்கு பயன்படும். தான், தன் போன்ற சொற்களை எழுத்திலும் பேச்சிலும் நன்கு பயன்படுத்துவோரை நான் நல்ல மொழிப்பயிற்சி பெற்றுள்ளவர்களாக மதிப்பேன்.

 

பேச்சு வழக்கிலும் தான் என்பதனைப் பலவாறு பயன்படுத்துவார்கள்.

‘தான் புடிச்ச முயலுக்கு மூனு காலுன்னு நினைக்கறான்’

‘தானே பொண்ணு பார்த்துக் கட்டிக்கிட்டான்’

‘தான் பண்றதை ஒருத்தருமே குறை சொல்லக்கூடாதுன்னு அவளுக்கு நினைப்பு’

 

தான் என்னும் சொல் எல்லாவிடங்களிலும் நன்றாகப் பயன்படுகிறது. தான் தான் என்றே எப்போதும் சொல்ல முடியுமா ? பெயர்ச்சொல் என்று வந்தாலே அது பல்வேறு சொல்லுருபுகளை ஏற்க வேண்டும். ஐ, ஆல், கு, இன், அது, கண் ஆகிய வேற்றுமை உருபுகளை ஏற்க வேண்டும். அப்போதுதான் ஒரு சொற்றொடரில் முழுமையாகப் பொருளுணர்த்தி நிற்க முடியும்.

 

தான் என்ற சொல் ஐ என்ற இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்று ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அது என்னாகும் ?

 

தான்+ஐ அழைக்கும்படி கூறினான்.

தன்னை அழைக்கும்படி கூறினான்.

 

இங்கே தான் என்பது தன் என்று மாறிவிடும். தான் என்னும் படர்க்கை ஒருமைப்பெயர் வேற்றுமை உருபுகள் உள்ளிட்ட ஏதேனும் சொல்லுருபை ஏற்கும்போதோ, அல்லது புதுச்சொல்லாக்கத்திற்கு உடன்படும்போதோ தன் என்று மாறிவிடும்.

 

தான் + ஐ என்பது தானை என்று ஆகாது. தன்னை என்று ஆகும். வேற்றுமை உருபு வரும்போது தான் என்பது தன் என்று மாறிவிடும்.

 

தான் + ஐத் தான் காக்கின் சினங்காக்க. இதனை எப்படி எழுத வேண்டும் ?

தன்னைத் தான் காக்கின் சினங்காக்க என்று எழுத வேண்டும்.

 

தன்னை, தன்னால், தனக்கு, தன்னில், தனது, தன்கண் என்று வேற்றுமை உருபுகள் ஏற்றப்படும். தானை, தானால், தானக்கு என்று எப்போதும் தோன்றுவதில்லை.

 

தான் என்பது எழுவாயாக நிற்கையில் அடுத்து வரும் பயனிலை வினைச்சொல்லுக்குத் தான் என்பது எவ்வித மாற்றமும் பெறாமல் அப்படியே நிற்கும்.

 

தான் அடைந்த செல்வம் என்பதைத் ‘தானடைந்த செல்வம்’ என்று புணர்த்தி எழுதலாம். தான் எழுதிய கட்டுரையை மீண்டும் படித்துப் பார்த்தான் என்பதனையும் புணர்த்தலாம். ‘தானெழுதிய’ என்று எழுதலாம். ‘தானாக’ வந்தான் எனலாம்.

 

தான் என்ற சொல் தன் என்று திரிவதை விளங்கிக்கொண்டால் எண்ணற்ற புதுச் சொற்களை ஆக்கலாம். அப்படித்தான் ஆக்கினார்கள்.

 

சங்க இலக்கியத்தில் தற்கொலை என்ற சொல்லைக் காண முடியுமா ? அன்பும் அறனுமே வாழ்வின் பயனாக வாழ்ந்தோர் நடுவில் கொலை என்பதே கொடுஞ்சொல். அதனினும் கொடிய சொல்லான தற்கொலைக்கு அங்கே என்ன சூழல் இருக்க முடியும் ? தற்கொலை என்பது தற்காலக் கொடுமை.

 

பிறிதொன்றைக் கொல்வது கொலை என்றால் தானே தன்னைக் கொல்வதை என்னவென்று சொல்வது ? இங்கேதான் தன் என்ற சொல் உதவுகிறது. தன்னைத்தானே செய்யும் கொலை என்னும் பொருளில் ‘தன் + கொலை = தற்கொலை’ என்று புதுச்சொல் படைக்கிறோம். தன் என்பதை முன்னொட்டாகக்கொண்டு நூற்றுக்கணக்கான சொற்களைத் தோற்றுவிக்கலாம்.

 

தன்னைத்தான் காத்துக்கொள்வது தற்காப்பு

தனக்குத்தானே பெருமைப்பட்டுக்கொள்வது தற்பெருமை

எவ்விதத் தூண்டலுமின்றித் தானாக நிகழும் செயல் தற்செயல்

தானாற்றியதால் தன்னை விட்டு நீங்காத வினை தன்வினை (தன்வினை தன்னைச் சுடும்)

தன்னைத் தானே எடுத்துக்கொள்ளும் படம் தற்படம் (செல்பி)

முந்தைய பகுதி:

 

 

ஆயுள் எந்த மொழிச்சொல் தெரியுமா??? கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு - பகுதி 19
 

 

அடுத்த பகுதி:

 

வெசை என்பது என்ன சொல்? -கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 21
 

 

 

 

 

Next Story

“தமிழர்களை இணைக்கும் ஒற்றை அடையாளம் தமிழ்” - முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 CM Stalin's pridly says Tamil is the single identity that unites Tamils


உலக தாய்மொழி தினம் 2000ஆம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 21ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்மொழியின் சிறப்பு, அவசியம், பன்மொழி கலாச்சாரம் ஆகியவற்றை போற்றவும், உணர்த்தும் வகையிலும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 

இந்த நிலையில்  உலகத் தாய்மொழி தினமான இன்று (21-02-24) தமிழ் ஆர்வலர்கள் பலரும் அது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வாழ்த்து பதிவு பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “அனைத்து வேறுபாடுகளையும் அறுத்தெறிந்து உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் பேராற்றல் கொண்ட ஒற்றை அடையாளம் தமிழ்!

"தாழ்ந்திடு நிலையினில் உனை விடுப்பேனோ?
தமிழன்எந் நாளும் தலைகுனி வேனோ?" 
எனப் பாவேந்தர் பாடியபடி தாய்த்தமிழ் காக்கும் மரபில் வந்தவர்கள் நாம்.

பெயர்சூட்டலில், மேடைச் சொற்பொழிவுகளில், திரைப்பட உரையாடல்களில், அரசு ஆவணங்களில் என எல்லாத் தளங்களிலும் தமிழினைப் பிறமொழி ஆதிக்கத்தினின்று மீட்டு அதன் பழம்பெருமையை நிலைநாட்டிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் நாம். அத்தகைய இயக்கத்தின் வழிவந்த நமது அரசின் சார்பில், உலகத் தாய்மொழி நாளான இன்று, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அன்னைத்தமிழை எந்நாளும் காத்து வளர்த்திட அனைத்து உறுப்பினர்களும் உறுதியேற்றோம்” என்று பதிவிட்டு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் உறுதிமொழி ஏற்கும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 

Next Story

தமிழ் ஆய்வியல் நிறைஞர் படிப்பு; விண்ணப்பம் வரவேற்பு

Published on 02/09/2023 | Edited on 02/09/2023

 

mphil Course in Tamil Studies Application welcome

 

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்பு 2023 ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்படவுள்ளது. இதையொட்டி இதற்கான வின்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

இது குறித்து தமிழ் வளர்ச்சி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்மொழி வளர்ச்சிக்கெனத் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் ஆய்வியல் நிறைஞர் (M.Phil), இந்நிறுவனத்தில் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தப்பெற்று வருகின்றன.

 

அந்தவகையில் 2023-24ஆம் கல்வியாண்டிற்கான ஆய்வில் நிறைஞர் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பெறவுள்ளது. இப்பட்டப் படிப்புக்கான கல்விக் கட்டணம் 4 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். விண்ணப்பங்கள் மற்றும் சேர்க்கை தொடர்பான விதிமுறைகள் மற்றும் தகவல்களை www.ulakaththamizh.in என்ற இணையதள முகவரியில் வழங்கப்பட்டுள்ளது. இருபாலருக்கெனத் தனித்தனியே கட்டணமில்லா தங்கும் விடுதி வசதிகள் உள்ளன. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் நேரிலோ, அஞ்சல் வழியாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச்சான்றிதழ் சான்றொப்பமிடப்பட்ட நகலுடன் இணைத்து இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600113 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பத்துடன் வாட்ஸ் அப் எண் குறிப்பிட்டு வந்து சேர வேண்டிய இறுதி நாள் 30.09.2023 ஆகும். மேலும் இது குறித்து தகவல் பெற இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை - 600113 (தொலைபேசி-044-22542992) என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.