Skip to main content

அன்று டீ கிளாஸ் கழுவிய சிறுவன்... இன்று பிரியாணி சாம்ராஜ்யத்தின் தலைவன்! தமிழ்ச்செல்வன் | வென்றோர் சொல் #40

Published on 24/07/2021 | Edited on 24/07/2021

 

salem rr briyani owner

 

தமிழ்ச்செல்வன் எனும் பெயர் கொண்ட அந்தச் சிறுவனுக்கு நான்கு வயது இருக்கும்போது அம்மா இறந்துவிடுகிறார். மனைவியின் மறைவு தந்த துக்கத்திற்குள் மூழ்கிய அவன் அப்பா, இறுதியில் மதுவிற்குள் மூழ்கிவிடுகிறார். பின், தன் அம்மாவின் அக்கா கவனிப்பில் வளர்க்கப்படுகிறான் தமிழ்ச்செல்வன். பெரியம்மா குடும்பத்தின் வறுமைச் சூழல் காரணமாக பள்ளிப்படிப்பை நான்காம் வகுப்பிற்குமேல் தொடர முடியவில்லை. பின், உள்ளூரில் இருந்த ஒரு டீக்கடைக்கு வேலைக்குச் செல்கிறான். டீ கிளாஸ் கழுவும் வேலை செய்து வந்த அந்தச் சிறுவனுக்கு ஒரு கட்டத்தில் தன்னுடைய உறவினர்கள் முன் அந்த வேலையைச் செய்வதற்குக் கூச்சமாக இருந்தது. டீக்கடை இருந்த தெருவில் உறவினர்கள் யாராவது வருவது தெரிந்தால் உடனே ஓடிச்சென்று கடைக்குள் ஒளிந்துகொள்கிறான்.

 

ஒளிந்து ஒளிந்து வேலை பார்த்த அந்தச் சிறுவன், இதற்கு மேலும் இந்த வேலையைச் செய்ய வேண்டாம் என 13 வயதில் தீர்மானமாக முடிவெடுத்து சென்னை நோக்கி கிளம்புகிறான். கூலிக்கு மூட்டை தூக்கி பிழைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் வந்த அந்தச் சிறுவனை 20க்கும் மேற்பட்ட கிளைகளுடன் பிரியாணி ரசிகர்களின் முதன்மைத் தேர்வாக இருக்கும் சேலம் ஆர்.ஆர்.பிரியாணி உணவகத்தின் உரிமையாளராக்கி அழகு பார்த்தது சென்னை. வாழ்வாதாரத்திற்கு வழியில்லை என்று சொந்த ஊரிலிருந்து வெளியேறி வந்த தமிழ்ச்செல்வனுக்கு சரியான களம் ஏற்படுத்திக்கொடுத்தது சென்னையாக இருந்தாலும் அந்தக் களம் அத்தனை எளிதாக இருந்துவிடவில்லை. பல ஆண்டுகால போராட்டம்... நம்பிக்கை கலந்த கடின உழைப்பு... பல வலிகள் ஆகியவற்றிற்குப் பிறகே இந்த வெற்றி தமிழ்ச்செல்வனுக்கு வசப்பட்டது.   

 

"நான் சிறுவனாக இருக்கும்போதே அம்மா இறந்துவிட்டார். என்னுடைய பெரியம்மா வீட்டில்தான் வளர்ந்தேன். வறுமையான சூழல்களுக்கு இடையேதான் அவர் எங்களை வளர்த்தார். படிப்பு மீது ஆர்வம் இருந்ததால் நிறைய படிக்க வேண்டும் என ஆசை இருந்தது. நான் நன்றாகவும் படிப்பேன். ஆனால், அதற்கான சூழல் அமையவில்லை. வீட்டில் மண்ணெண்ணெய் குறைவாக இருந்தால் என் பெரியம்மா இரவு சீக்கிரமே விளக்கை அணைத்துவிடுவார். மண்ணெண்ணெய் தீர்ந்துவிட்டால் அதை வாங்குவதற்கு அவரிடம் பணம் இருக்காது. அத்தகைய நாட்களில் தெருவிளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்து படிப்பேன். நான்காம் வகுப்பு படிக்கும்போது என்னிடம் உடைந்த சிலேடுதான் இருந்தது. புது சிலேடு வாங்கச் சொல்லி ஆசிரியர் கூறினார். என்னிடம் பணமில்லாதக் காரணத்தால் புது சிலேடு வாங்கமுடியவில்லை. அதற்காக ஒருநாள் ஆசிரியர் அடித்துவிட்டார். அன்றோடு பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். எங்கள் ஊரில் இருந்த ஒரு டீக்கடையில் டீ கிளாஸ் கழுவும் வேலைக்குச் சேர்ந்தேன். அப்போது எனக்கு 10 வயதுதான் என்பதால் அந்த மேசை எட்டாது. ஆற்றில் இருந்து ஒரு கல்லைத் தூக்கிக்கொண்டு வந்து அது மேல் ஏறி நின்று டீ கிளாஸ் கழுவியது இன்றும் எனக்கு நினைவில் உள்ளது. ஒரு கட்டத்திற்குமேல் சொந்தக்காரர்கள் முன் டீ கிளாஸ் கழுவ எனக்குக் கூச்சமாக இருந்தது. இனி இந்த ஊரில் இருக்கவேண்டாம் என முடிவெடுத்து, சென்னை வந்தேன். சென்னையில் கூலிக்கு மூட்டை தூக்கினேன். அதற்கு கிடைத்த சம்பளத்தை வைத்து என் வயிற்றைக்கூட நிரப்ப முடியவில்லை.

 

ஏதாவது ஓட்டலில் வேலை பார்த்தால் மூன்று வேளை உணவு கிடைக்கும் என நினைக்கையில், ஓட்டலில் தட்டு கழுவும் வேலை கிடைத்தது. அந்தக் காலகட்டத்தை என் வாழ்க்கையில் மறக்கமுடியாது. நாள் முழுக்க பாத்திரம் கழுவிக்கொண்டே இருந்ததால் கையெல்லாம் புண்ணாகி, கையிலிருந்த நகமெல்லாம் கொட்டிவிட்டது; காலில் சேற்றுப்புண் வந்துவிட்டது. கையில் ஏதாவது பேப்பரைச் சுற்றிக்கொண்டுதான் உணவு சாப்பிடவே முடியும். பின், அந்த ஓட்டலில் சர்வரானேன். சர்வராக வேலை பார்த்த நான், சில ஆண்டுகள் கழித்து என் நண்பனுடன் இணைந்து தள்ளுவண்டிக் கடைபோட்டேன். முதன்முதலில் தள்ளுவண்டிக் கடையில் பாசுமதி அரிசி பிரியாணியை நான்தான் அறிமுகம் செய்தேன். எங்கள் சுவை பிடித்து நிறைய பேர் தேடிவர ஆரம்பித்தார்கள். எம்.எல்.ஏ, அரசியல் பிரமுகர்கள் என நிறைய விஐபிக்கள் எங்கள் கடைக்கு வாடிக்கையாளர்கள் ஆனார்கள். ரோட்டில் நின்று கொண்டு சாப்பிட அவர்களுக்கு கூச்சமாக இருப்பதாகக் கூறி அவர்கள்தான் கடைபோடும்படி என்னைத் தொடர்ந்து வற்புறுத்தினார்கள். ஓர் இடத்தில் சீட்டு போட்டு பணத்தைச் சேர்த்து என்னுடைய முதல் கடையைச் சென்னை தாம்பரத்தில் தொடங்கினேன்".

 

salem rr briyani

 

அங்கிருந்து தமிழ்ச்செல்வனின் லட்சியப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயம் தொடங்குகிறது. கடைகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து நல்ல பெயரும் புகழும் அவரது கடையை வந்தடைகின்றன. இன்று 20க்கும் மேற்பட்ட கிளைகளுடன் கொடிகட்டிப்பறந்து கொண்டிருக்கும் ஓர் உணவகத்தின் அதிபதியாக உயர்ந்துள்ள தமிழ்ச்செல்வன் தன்னுடைய வெற்றிக்கான காரணம் குறித்து கூறுகையில், "கடவுளுக்கு நான் பயப்பட்டதில்லை; ஆனால், வாடிக்கையாளர்களைப் பார்த்து பயப்படுவேன். நம்முடைய கடை உணவை சாப்பிட்டுவிட்டு உணவு சரியில்லை என்று வாடிக்கையாளர்கள் யாராவது கூறிவிடுவார்களோ என்ற பயம் எனக்கு அதிகம். அதனால், ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்வேன். நான் வாழ்க்கையில் வெற்றிபெற்றேன் என்றால் என் மீது எனக்கு இருந்த நம்பிக்கைதான். என் கடையில் முதலீடுகளை விட என்னுடைய உழைப்பைத்தான் அதிகம் போட்டுள்ளேன். அந்த உழைப்புதான் இந்த இடத்திற்கு என்னை உயர்த்தியுள்ளது" என்றார்.

 

வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற உறுதியான லட்சியமும், ஆயிரம் தடைகள் வந்தாலும் அதைப் புறந்தள்ளிவிட்டு அந்த லட்சியத்தை நோக்கி பயணிப்பதற்கான உறுதியும் இருந்தால் வாழ்க்கையில் எவரும் வெற்றிபெறலாம் என்பதற்கு தமிழ்ச்செல்வனின் வாழ்க்கை உதாரணம்.

 

கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்!

 

தந்தையின் உடலை நடுவீட்டில் வைத்துவிட்டு கிரிக்கெட் ஆட வந்த விராட் கோலி! | வென்றோர் சொல் #39 
 

 

 

 

Next Story

குடிப்பழக்கத்தை நிறுத்த கவுன்சிலிங்கில் புதிய முறை - ஜெய் ஜென்

Published on 05/06/2023 | Edited on 05/06/2023

 

 Manangal Manithargal Kathaikal JayZen Interview

 

கவுன்சிலிங் கொடுக்கும்போது தான் எதிர்கொண்ட விஷயங்கள் குறித்து நம்மோடு ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.

 

கவுன்சிலிங் கொடுப்பதற்காக நிறுவனங்களுக்கு நாம் செல்லும்போது, அங்கு தனி நபர்களும் நம்மிடம் கவுன்சிலிங் பெற வருவார்கள். அப்படி ஒரு மனிதர் என்னிடம் வந்தார். அவருக்கு இரண்டு பிரச்சனைகள். ஒன்று குடி. இன்னொன்று சிகரெட். இரண்டும் தவறு என்று தெரிந்தும் தான் செய்து வருவதாகவும், எப்படி நிறுத்துவது என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதற்காக ஏன் அவர் கவலைப்படுகிறார் என்று கேட்டபோது, இதனால் தனக்கு குற்ற உணர்ச்சி ஏற்படுகிறது என்றும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் கூறினார்.

 

குடியால் வீட்டுக்கு நிதானம் இல்லாமலும் அவர் வந்துள்ளார். ஆனாலும் குடிப்பது தொடர்ந்தே வந்திருக்கிறது. எதார்த்தமாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் பின்பு மனிதர்களை அடிமைப்படுத்துகிறது. இதை ஒரு வாழ்வியலாகவே பலர் மாற்றி வைத்துள்ளனர். ஒரு விஷயத்தை விட வேண்டும் என்று நினைத்தாலும் விட முடியவில்லையே என்பதுதான் தன்னுடைய குற்ற உணர்ச்சி என்று அவர் கூறினார். இதில் நீங்கள் நிச்சயம் தோற்பீர்கள், உங்களால் குடியை நிறுத்த முடியாது என்று அவரை வேண்டுமென்றே உசுப்பேற்றினேன். அவருக்கு கோபம் வந்தது. தன்னால் குடியை நிறுத்த முடியும் என்று அவர் கூறினார். 

 

இரண்டு வாரம் கழித்து அவரிடமிருந்து ஃபோன் வந்தது. கடந்த 14 நாட்களில் 4 நாட்கள் தான் குடிக்கவில்லை என்று கூறினார். மீதி 10 நாட்கள் குடித்தீர்களே என்று மீண்டும் அவரை உசுப்பேற்றினேன். குடும்பத்தில், தொழிலில் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்று இயல்பாகவே அவர் விரும்பினார். மூன்று மாதம் கழித்து அவர் மீண்டும் பேசினார். அப்போதும் அவர் குடியை முழுமையாக நிறுத்தவில்லை. 7 வருடங்கள் கழித்து சமீபத்தில் அவரை சந்தித்தேன். இப்போது அவர் குடியை சுத்தமாக நிறுத்திவிட்டார். என்னுடைய டெக்னிக் பலித்தது. குடியை நிறுத்திய பிறகு குடும்பம் எவ்வளவு அழகானது என்பது புரிந்தது என்று கூறினார். குடும்பத்தின் மகிழ்ச்சியும் ஒரு போதை தான் என்பதை அவர் உணர்ந்தார்.

 

இது அவருக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்தது. இதுபோன்று பலர் மாறியிருக்கின்றனர். குடியால் பலருடைய பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. பெயர் கெட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் மீள வேண்டும்.

 

 

Next Story

உலகம் முழுக்க சைக்கிளில் சுற்றி வந்த சாதனை இளைஞன் அருண் ராகேஷ் 

Published on 25/02/2023 | Edited on 25/02/2023

 

Arun Rakesh is the young man who cycled around the world

 

நடந்தே லடாக் வரை சென்றார், பைக்கில் இந்தியா முழுக்க சுற்றினார் போன்ற செய்திகளை சமீபகாலங்களில் நாம் அதிகம் பார்த்திருப்போம். ஆனால் சைக்கிளை எடுத்துக்கொண்டே தன்னால் உலகம் முழுக்க சுற்ற முடியும் என்று நம்பி, 11 நாடுகள் சுற்றி முடித்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கும் இளம் சாதனையாளர் அருண் ராகேஷ். பல கிலோமீட்டர்கள் பயணம் செய்த அவரிடமும் அவருடைய சைக்கிளிடமும் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள் பல இருக்கின்றன. 

 

சைக்கிளிலேயே உலகம் முழுக்க பயணம் செய்யலாம் என்கிற எண்ணம் உங்களுக்கு முதலில் எப்போது வந்தது?

சைக்கிளில் செல்ல வேண்டும் என்பதை விட பயணம் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். ஐடி துறையில் பணிபுரியும் நான், மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகவே பயணங்கள் செய்யத் தொடங்கினேன். பொதுவாகவே எங்கு சென்றாலும் டூரிஸ்ட் ஸ்பாட்டுகளைத் தேடித்தான் நாம் முதலில் செல்வோம். ஆனால், அந்த இடங்களில் எளிய மக்களோடு நாம் பழக முடியாது. பள்ளியில் நான் படித்துக் கொண்டிருக்கும்போது வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் சைக்கிளிலேயே இந்தியாவுக்கு வந்தார். "இப்படி எல்லாம் செய்ய முடியுமா?" என்கிற எண்ணம் அவரைப் பார்த்து எனக்கு ஏற்பட்டது. அதுதான் இந்த சைக்கிள் பயணத்திற்கான முதல் உந்துசக்தி என்று சொல்லலாம். 

 

சைக்கிளை எடுத்துக்கொண்டு நம்முடைய ஏரியாவுக்குள் உலவுவது வேறு. கடினமான பாதைகளில் செல்லும்போது எப்படி இருந்தது?

சைக்கிள் டியூப் உள்ளிட்ட தேவையான பொருட்கள் அனைத்தையும் நானே கையில் வைத்துக் கொள்வேன். கிட்டத்தட்ட மூன்று, நான்கு நாடுகள் வரை சைக்கிள் பஞ்சராகவே இல்லை. அதன் பிறகுதான் ஆனது. தேவையான பொருட்கள் என்னிடம் இருப்பதால் நானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தேன்.

 

இதுபோன்ற நீண்ட பயணத்தை விரும்புபவர்கள் செய்ய வேண்டியவை என்ன?

தேவைக்கு அதிகமான பொருட்களை எடுத்துச் செல்லத் தேவையில்லை. டூரிஸ்ட் ஸ்பாட்டுகளை மட்டும் குறிவைக்காமல் பல்வேறு இடங்களுக்கும் செல்ல வேண்டும். உதாரணத்திற்கு, தாய்லாந்தில் பீச் போன்ற அனைவரும் செல்லும் பகுதிகளைத் தாண்டி கிராமங்களுக்குள் செல்லும்போது அந்த மக்கள் நம் மீது செலுத்தும் அன்பு பிரமிப்பை ஏற்படுத்தியது. அவர்களுடைய கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. 

 

உங்களை மிகவும் ஈர்த்த நாடு, கலாச்சாரம் எது?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் தனி கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் வெளிநாடுகளில் அந்த நாடுகளுக்கென்று பொது கலாச்சாரங்கள் உள்ளன. மியான்மர் மக்களின் கலாச்சாரமும், அவர்கள் அளித்த வரவேற்பும், அவர்களுடைய வழிபாட்டு முறையும் எனக்கு அதிகம் பழக்கப்பட்ட ஒன்று போல் தோன்றியது. தாய்லாந்து மக்களின் அன்பும் என்னை மிகவும் ஈர்த்தது. கரும்பு ஜூஸ் குடிக்கச் சென்ற எனக்கு இலவசமாக வாட்டர் பாட்டில் கொடுத்து ஊக்கப்படுத்தினார் தாய்லாந்தில் ஒரு மொழி தெரியாத கடைக்காரர். மறக்க முடியாத நினைவு அது.

 

சைக்கிளில் செல்லும்போது கிடைக்கும் பிரத்தியேக அட்வான்டேஜ் என்ன?

பைக்கில் நாம் செல்லும்போது ஒவ்வொரு பகுதியையும் வேகமாகக் கடந்து விடுவோம். ஆனால் சைக்கிளில் மெதுவாகச் செல்லும்போது நின்று நிதானமாக ஒவ்வொரு பகுதியையும் ரசிக்கலாம். 

 

இது போன்ற பயணங்களில் எந்த வழி செல்வது என்பதைக் குறித்த வழிகாட்டுதல்  நிச்சயம் தேவை. அந்த விஷயத்தில் மக்களுடைய ஒத்துழைப்பு எப்படி இருந்தது?

மியான்மரில் ஒருமுறை இரவு நேரத்தில் கூகுள் மேப்பை நம்பி ஏமாந்தபோது, அங்கிருந்த மக்கள் நான் செல்ல வேண்டிய கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர தூரத்தில் இருந்த ஒரு பகுதிக்கு அவர்களே என்னை அழைத்துச் சென்றனர். அவசரமான இந்த உலகத்தில் இவ்வளவு மனிதநேயம் கொண்ட மக்களைப் பார்த்து வியந்தேன். கடவுளே என்னைப் பார்த்துக்கொள்வது போன்ற ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது.

 

இந்தப் பயணத்தில் நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்னென்ன?

கூகுள் டிரான்ஸ்லேட்டர் மூலம் அந்தந்த மக்களின் மொழிக்கு என்னால் அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிந்தது. ஆனாலும் சில சமயங்களில் அது தவறான வார்த்தைகளைக் காட்டிவிடும். என்னை அனைவரும் ஏற இறங்கப் பார்ப்பார்கள். இந்த அனுபவம் எனக்கு மியான்மரில் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட 'முத்து' படத்தில் ரஜினி சாருக்கு ஏற்பட்டது போன்ற அனுபவம் அது.

 

ஏதாவது முக்கியமான ஒரு இடத்தில் 'இதற்கு மேல் முடியாது' என்கிற சோர்வு ஏற்பட்டதுண்டா?

நேபாள நாட்டில் காடுகள் நிறைந்த ஒரு இடத்தில் அந்த எண்ணம் ஏற்பட்டது. இருட்டுவதற்குள் தங்குவதற்கான இடத்தைத் தேர்வு செய்து முடிப்பது சிறந்தது என்பார்கள். அதுபோல நானும் இருட்டுவதற்குள் டென்ட் போடும் பணியை முடித்துவிடுவேன். அதுபோன்ற தருணங்களில் யானைகள் சூழும் ஆபத்தான இடங்களில் கூட தங்க நேர்ந்திருக்கிறது.

 

சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களில் தமிழர்களின் வரவேற்பு எப்படி இருந்தது?

என்னுடைய பயணத்தை நான் தொடங்கியதிலிருந்து வீட்டிற்கு வந்து சேரும் வரை அவர்கள் தான் எனக்கு உதவினர். என்னை அவர்களுடைய உறவினர் போல் பார்த்துக்கொண்டனர். மலேசியாவில் நான் ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். செலவுக்கு எனக்கு அவர்கள் தான் பணம் கொடுத்தனர். அந்த அளவுக்கு அன்பு நிறைந்தவர்கள்.

 

பயணத்தின் போது நீங்கள் உணர்ந்த சிறந்த விஷயம் எது?

ஏன் அனைவரும் பணத்தின் பின் இவ்வளவு வேகமாக ஓடுகிறோம் என்று தோன்றியது. தாய்லாந்தில் மக்கள் அவரவர் வீடுகளுக்கு அருகிலேயே தான் வேலை பார்ப்பார்கள். விவசாயம் மூலம் அறுவடை செய்த பொருட்களை அவர்களுடைய கடையில் விற்பனை செய்வார்கள். அதுதான் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. குடும்பத்தோடு அதிக நேரம் செலவிடுகின்றனர். செல்போனை அவர்கள் பயன்படுத்தி நான் பார்க்கவே இல்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அங்கேயே செட்டிலாகி விடலாமா என்று கூடத் தோன்றியது.

 

உங்களுடைய எதிர்காலத் திட்டம் என்ன?

ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரை பயணம் செய்யவிருக்கிறேன். இது ஒரு உலக சாதனை முயற்சி. இதுவரை யாரும் செய்ததில்லை. இது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் 50000க்கும் அதிகமான கிலோமீட்டர்கள் கடந்து செய்யப்போகும் பயணம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகளில் இந்தப் பயணம் இருக்கும். இது என்னுடைய வாழ்நாள் கனவு. ஒரு பகுதியில் நாம் செய்யும் தவறு இன்னொரு பகுதியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய பயணம் இருக்கும். இரண்டு வருடங்கள் நான் செய்யப்போகும் இந்தப் பயணத்திற்கு தமிழ்நாடு அரசு மற்றும் கார்ப்பரேட்டுகளின் உதவியை நாடுகிறேன். நிச்சயம் தமிழர்கள் பெருமைப்படும் வகையில் என்னுடைய பயணம் அமையும். எங்களுடைய ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ திரு. பிரபாகர் ராஜா அவர்கள் என்னுடைய பயணத்திற்குப் பிறகு என்னை அழைத்து சால்வை அணிவித்து ஊக்குவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.