Skip to main content

திருடு போகும் நகைகளை என்ன செய்வாங்க தெரியுமா? -  ஏசி ராஜாராம் பகிரும் தடயம்: 14

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

 rtrd-ac-rajaram-thadayam-14

 

திருடு போகும் நகைகளை திருடர்கள் என்ன செய்வார்கள். அதை வாங்குவதற்கு யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ராஜாராம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த விளக்கத்தினை காணலாம்.

 

திருட்டு நகைகளை வாங்குவதற்கென்று ஒரு கும்பல் எப்போதும் இருக்கும். தொடர்ச்சியாக திருடுகிறவர்களை அவர்கள் சரியாக அடையாளம் தெரிந்து வைத்திருப்பார்கள். திருட்டு நகையை வாங்கியதுமே அதை உருக்கி தங்க கட்டியாக மாற்றி விடுவார்கள். நகையை உருக்கியதுமே அது 24 கேரட் தங்கமாக மாறிவிடும். அதாவது அதில் சேர்க்கப்பட்ட செம்பு போன்றவை பிரிந்துவிடும். 24 கேரட் தங்கம் என்பது தங்க பிஸ்கட் என்றழைக்கப்படும். அது அப்போதைய மார்கெட் தங்க விலைக்கே விற்பனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

 

தங்க மார்கெட்டில் அந்த தங்க பிஸ்கட்டுகள் போனதும் தங்க நகைக் கடைக்காரர்கள் யார் வேண்டுமானாலும் அதை வாங்கி நகை செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். திருடியவனை பிடித்து எங்கே விற்றானோ அவனிடம் போயி பிடித்தால் அவன் 24 கேரட் தங்கத்தை நமக்கு திருப்பி தரமாட்டான். உருக்கிய நிலையில் செம்பு கலந்த 18 கேரட் தங்கத்தை தருவான். அதையும் சில சமயம் தரமாட்டார்கள். சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்துவார்கள். அவர்களுக்கு என்று இருக்கும் தங்க நகைக் கடைக்காரர்களுக்கான சங்கத்தினர் நம்மோடு வந்து சண்டைக்கு நிற்பார்கள். அவர்களை எல்லாம் சமாளித்து நகையை மீட்டுக் கொண்டு வந்து கொடுப்போம்.

 

ஆனாலும் நகையை பறிகொடுத்தவர்கள் 24 கேரட்டுக்கு பதிலாக 18 கேரட் தங்கத்தை பெற்றுக்கொண்டு மீதியை ஏதோ காவல்துறையே திருடிக்கொண்டதாக நினைத்துக் கொள்வார்கள். என்ன கஷ்டப்பட்டாலும் காவல்துறைக்கு நன்றி செலுத்தமாட்டார்கள் என்று நாங்கள் சொல்லிக் கொள்வதுண்டு. திருடுகிறவனை தேடுதல் என்பது முதற்கட்டமாக கை ரேகையைக் கொண்டு ஏற்கனவே திருடிய பட்டியல்களில் வருகிறானா என்று பார்க்க வேண்டும். புதிய கை ரேகையா இருந்தால் திருடியவனை கண்டுபிடிக்க காலம் எடுக்கும்.

 

சில சமயம் திருடியவனே 15 சவரன் தான் என்று சொல்வான். நகையை பறிகொடுத்தவர்கள் 20 சவரன் என்பார்கள். திருடனே சொல்வதுண்டு “நகையை பறிக்கொடுத்தவனை கூப்டுங்க, நானே கணக்கு சொல்றேன்” என்பதெல்லாம் நடப்பதுண்டு. சில சமயம் நகையை பறிகொடுத்தவர்கள் கூட பொய் சொல்வதுண்டு. சில சமயம் திருடனும் சிக்கி நகையை வாங்கியவரும் சிக்கினால் இருவரின் மீது வழக்கு தொடர்ந்து சிறைக்கு செல்லும்படியாகும். நகையை திரும்ப செலுத்தினாலும் திருட்டு நகையை வாங்கியதற்கான கால அளவு தண்டனையை அனுபவித்துதான் ஆகணும்.