Skip to main content

கடற்கரை காதலர்களிடம் கைவரிசை காட்டிய கும்பல் - ஏசி ராஜாராம் பகிரும் தடயம்: 10

Published on 27/09/2023 | Edited on 27/09/2023

 

rtrd-ac-rajaram-thadayam-10

 

தனியாக இருக்கும் காதலர்களுக்கு திருவான்மியூர் கடற்கரையில் நடக்கும் சிக்கல்களைக் குறித்தான சம்பவங்கள் பற்றி ஓய்வு பெற்ற மூத்த காவல்துறை அதிகாரி ராஜாராம் விவரிக்கிறார்.

 

இப்பொதெல்லாம் இந்த சிக்கல் இல்லை. ஆனால் திருவான்மியூர் கடற்கரையில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பெல்லாம் காதலர்களிடம் மிரட்டி நகை, பணம் கொள்ளையடிப்பது தொடர்ச்சியாக நடந்து வந்தது. 1998 கால கட்டத்தில் திருவான்மியூர் பீச்சில் காதலர்கள் சந்திக்கும் பொழுது அவர்களிடம் நகை முதலானவற்றை சில கும்பல் கொள்ளை அடித்து பறித்து வந்துள்ளது. சில  நேரங்களில் அது பாலியல் சீண்டலாகக் கூட மாறியுள்ளது. காதலர்கள் வீட்டிற்குத் தெரியாமல் வருவதால் போலீஸில் புகாரும் அளிக்கவில்லை. எனவே தான் இந்த கும்பல் சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வந்துள்ளது.  

 

அந்த கும்பல், கடற்கரையோரத்தில் உட்காரும் காதலர்களிடம் கைவரிசை காட்டுவதாகவும், மாட்டிக்கொண்டால் எளிதில் தப்பிக்க உடலில் எண்ணெய் தடவியிருப்பார்கள் பிடியில் சிக்காமல் நழுவி சென்று விடுவார்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்தநிலையில், காவலர் நால்வர் கொண்ட குழு ஒன்று அமைத்து இதைக் கண்டறிய திட்டமிடப்பட்டது. நான்கு காவலர்கள் மாறு வேடத்தில் ஒரு நாள் கடற்கரையை நோட்டம் விட சென்றுள்ளனர். அப்போது, காதலர்களிடம் கத்தியை காட்டி ஒருவர் மிரட்டிக் கொண்டிருந்துள்ளார். 

 

பின்னர் எழுந்த கூச்சலைக் கேட்டு அருகில் இருந்த காவலர்கள் விரைந்து அவனைப் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்துள்ளனர். அதில், அவன் பெயர் மற்றும் மற்ற விவரங்கள் தெரிய வந்தது. மற்றும் அவனது இரு நண்பர்களும் இந்த கைவரிசை காட்டுவதற்கு பின்னால் உதவி  இருப்பதும் தெரிய வந்தது. அவர்களையும் அழைத்து வந்து விசாரிக்கையில், கரையில் நிற்கும் வாகனங்களையும், மணலில் இருக்கும் காதலர்களிடம் கொள்ளை அடிப்பதாக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். 

 

காதலர்கள் தங்கள் உடைமைகளை தரமறுத்தால், அவர்கள் தாக்கப்படுவதும் உண்டு. இந்தக் கும்பலின் பாணியே தனியாக இருக்கும் காதலர்களிடம் கொள்ளையடிப்பது தான். தொடர்ந்து இவர்கள் பத்து சம்பவத்தில் சுமார் 25 சவரன் நகைகள் வரை திருடியதாக அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. மேலும், இரு சக்கர வாகனங்களும் காவல்துறையினர் கைப்பற்றினர்.