Skip to main content

போலீஸ் ஸ்டேஷனையே வித்த கில்லாடி திருடன் -  ஏசி ராஜாராம் பகிரும் தடயம் : 04

Published on 27/06/2023 | Edited on 27/06/2023

 

Rtrd AC Rajaram - Thadayam 04

 

சுவாரஸ்யமான ஒரு வழக்கு குறித்து மூத்த காவல்துறை அதிகாரி ராஜாராம் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

 

சென்னையில் ஆற்காடு நவாபின் பங்களா இருக்கிறது. அதற்குள் பத்து வீடுகள் இருக்கின்றன. அவற்றில் நவாபின் வாரிசுகள் வசிக்கின்றனர். நவாபின் வாரிசுகளுக்கு அரசாங்கம் சார்பில் நிலம் ஒதுக்கலாம் என்கிற பழைய உத்தரவு ஒன்றை அறிந்துகொண்ட ஒருவர், தாலுகா அலுவலகம் சென்று தான் தான் நவாபின் வாரிசு என்று கூறி, தவறான முறையில் வாரிசு சான்றிதழ் பெற்றார். உண்மையில் அவர் ரேஸ் கோர்ஸில் குதிரை ஓட்டும் ஒரு ஜாக்கி. அந்த வாரிசு சான்றிதழை வைத்துக்கொண்டு தமிழ்நாடு முழுக்க தனக்குச் சொந்தமில்லாத பல இடங்களை அவர் விற்க முயன்றார். 

 

டிரஸ்ட் ஒன்றுக்கு சொந்தமான இடத்தை ராஜபாளையத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்க முயன்றபோது அவர் மாட்டிக்கொண்டார். ஆனாலும் அதை அரசாங்க இடம் என்று தவறாக நினைத்துவிட்டதாகக் கூறி சாதுரியமாக தப்பித்தார். இன்னொரு முறையும் அவ்வாறு மாட்டிக்கொண்டதால் ராஜபாளையத்தைச் சேர்ந்தவரை ஊருக்கு அனுப்பினார். ஆயிரம் விளக்கு பகுதியில் இடிந்த நிலையில் இருந்த காவல்துறைக்கு சொந்தமான ஒரு இடத்தைப் பார்த்த அவர் ராஜபாளையத்தைச் சேர்ந்தவருக்கு தகவல் அனுப்பினார். முக்கியமான பகுதியில் இருந்த இடம் என்பதால் அவரும் அதை வாங்க விரும்பினார். 30 லட்ச ரூபாய் அட்வான்ஸ் பெற்றார். அதன் பிறகு அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 

 

கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில் அவருடைய வண்டவாளங்கள் அனைத்தும் வெளியே வந்தன. ஒரு மாதத்திற்குப் பிறகு சென்னை வந்த அவரைப் போலீசார் பொறிவைத்துப் பிடித்தனர். அவர் கைது செய்யப்பட்டார். மருத்துவ பரிசோதனையின்போது இவருக்கு அனைத்து விதமான நோய்களும் இருக்கின்றன என்று மருத்துவர் மூலம் தவறான சான்றிதழ் பெற்றார். அதனால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கும் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று சான்றிதழ்களைக் காட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில காலத்துக்குப் பிறகு அவர் பொய்யாகச் சொன்ன அனைத்து நோய்களும் நிஜமாகவே அவருக்கு ஏற்பட்டு அவர் காலமானார்.

 

 

Next Story

கணவன் மனைவி பிரச்சனை; கிடைத்த கேப்பில் புகுந்து விளையாடிய பாஸ் - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 34

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
detective-malathis-investigation-34

தான் கையாண்ட துப்பறியும் வழக்குகள் குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மிடையே பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் வெளிநாட்டில் சண்டைபோட்டுக் கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்துவிட்ட தன் மனைவியை கண்காணிக்கச் சொன்ன கணவனைப் பற்றியும், அதில் கிடைத்த அதிர்ச்சியான தகவல்களை பற்றியும் விவரிக்கிறார்.

வெளிநாட்டிலிருந்து எங்களை தொடர்பு கொண்டார் ஒருவர், தன்னுடைய மனைவி தன்னுடன் சண்டையிட்டுக் கொண்டு தமிழ்நாட்டிற்கு அவளுடைய சொந்த ஊருக்கு வந்துவிட்டாள். அங்கே என்ன செய்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். அத்தோடு, தனக்கும் தன் மனைவிக்கும் கல்யாணம் ஆனதிலிருந்து அடிக்கடி சண்டை வரும், அப்போது வெளிநாட்டில் தனக்கு வேலை வழங்கிய பாஸ் தான் தலையிட்டு சரி செய்து விடுவார். அதனால் கொஞ்ச காலம் அமைதியாக இருப்பாள், பிறகு சண்டையை ஆரம்பிப்பாள். இப்பொழுது பெரிதாய் சண்டை போட்டுக் கொண்டு ஊருக்கு வந்துவிட்டாள் என்றார். 

அவரிடம் விவரங்களை வாங்கிக்கொண்டு அந்த பெண்ணை கண்காணிக்க ஆரம்பித்தோம். இங்கே வந்ததிலிருந்து அந்த பெண் ரொம்ப பிசியாக பரபரப்பாகவே இருந்து வந்தாள். ஏனெனில் அவளுடைய சகோதரனின் திருமணம் நடைபெறப்போகிறது, அதற்கான வேலைகளில் இருந்தாள். நாங்களோ இந்த பெண்ணின் மீது எந்த தவறும் இல்லை போல, வெளிநாட்டில் இருக்கும் கணவன் தான் சந்தேகப்படுகிறானோ என்று கூட ஆரம்பத்தில் நினைத்தோம்.

இருந்தாலும் நம்முடைய கிளைண்ட் என்ன கேட்கிறார்களோ அதை செய்து தருவது தான் நம்முடைய வேலை என்பதால், அந்த பெண்ணை அவளுடைய சகோதரனின் திருமணம் வரை ஃபாலோ செய்து விவரங்களைத் தரலாம் என்று முடிவெடுத்து வைத்திருந்தோம்.

அவளுடைய தம்பியின் திருமணத்திற்கு வந்திருந்த ஒருத்தரை அந்த பெண்ணோ விழுந்து விழுந்து கவனித்திருக்கிறார். கிளம்பும் போதும் ரோடு வரை வந்து வழி அனுப்பி வைக்கிறாள். அடுத்த நாளே அந்த நபரை ஒரு ஹோட்டலில் சென்று சந்திக்கிறாள். அவரோடு அந்த இரவு முழுவதும் அந்த ஹோட்டலில் தங்குகிறாள். வெளியே வரவில்லை. மறுநாள் காலையில் வெளியே அவருடன் வந்தவள் சில பகுதிகளுக்கு சென்று சுற்றிவிட்டு மீண்டும் ஹோட்டலில் தங்கிவிட்டு மறுநாள் வீட்டிற்கு போகிறாள்.

இந்த தகவலை வெளிநாட்டிலிருக்கும் அந்த பெண்ணின் கணவரிடம் சொன்னோம். அவரோ அந்த நபரின் புகைப்படத்தை பார்க்க விரும்பினார். அனுப்பி வைத்தோம். அதில் தான் அவர் சொன்னது ஆச்சரியத்தை அளித்தது. அந்த நபர் இவரின் பாஸ், வெளிநாட்டில் கணவன் மனைவியிடையே சண்டை ஏற்பட்டால் யார் அந்த பெண்ணுக்கு கவுன்சிலிங்க் கொடுப்பாரோ, அதே பாஸ் தான் இங்கே இவளோடு இருக்கிறார்.

இவ்வளவுக்கும் அந்த பாஸுக்கு கல்யாணமாகி, கல்லூரிக்கு போகும் வயதில் மகள் இருக்கிறாள் என்கிற தகவல் எல்லாம் பின்னால் தெரிந்து கொண்டோம். நாம் திரட்டிய தகவல், ஆதாரங்களை நமது கிளைண்டிடம் கொடுத்தோம். அதை வைத்து அவர் விவாகரத்து அப்ளை பண்ணி டைவர்ஸ் வாங்கிக் கொண்டார்.

இதன் வழியாக தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கணவன் மனைவிக்குள் சண்டை வரும் பொழுது குடும்ப உறுப்பினர்களைத் தாண்டி மற்றவர்களிடம் கொண்டு செல்லும் போது அது பல்வேறு வகையில் சிக்கலை உருவாக்கும். கவனமுடன் கையாள வேண்டும். 

Next Story

திருடு போகும் நகைகளை என்ன செய்வாங்க தெரியுமா? -  ஏசி ராஜாராம் பகிரும் தடயம்: 14

Published on 15/11/2023 | Edited on 15/11/2023

 

 rtrd-ac-rajaram-thadayam-14

 

திருடு போகும் நகைகளை திருடர்கள் என்ன செய்வார்கள். அதை வாங்குவதற்கு யார் இருக்கிறார்கள் என்ற கேள்வியை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ராஜாராம் அவர்களிடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த விளக்கத்தினை காணலாம்.

 

திருட்டு நகைகளை வாங்குவதற்கென்று ஒரு கும்பல் எப்போதும் இருக்கும். தொடர்ச்சியாக திருடுகிறவர்களை அவர்கள் சரியாக அடையாளம் தெரிந்து வைத்திருப்பார்கள். திருட்டு நகையை வாங்கியதுமே அதை உருக்கி தங்க கட்டியாக மாற்றி விடுவார்கள். நகையை உருக்கியதுமே அது 24 கேரட் தங்கமாக மாறிவிடும். அதாவது அதில் சேர்க்கப்பட்ட செம்பு போன்றவை பிரிந்துவிடும். 24 கேரட் தங்கம் என்பது தங்க பிஸ்கட் என்றழைக்கப்படும். அது அப்போதைய மார்கெட் தங்க விலைக்கே விற்பனைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

 

தங்க மார்கெட்டில் அந்த தங்க பிஸ்கட்டுகள் போனதும் தங்க நகைக் கடைக்காரர்கள் யார் வேண்டுமானாலும் அதை வாங்கி நகை செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். திருடியவனை பிடித்து எங்கே விற்றானோ அவனிடம் போயி பிடித்தால் அவன் 24 கேரட் தங்கத்தை நமக்கு திருப்பி தரமாட்டான். உருக்கிய நிலையில் செம்பு கலந்த 18 கேரட் தங்கத்தை தருவான். அதையும் சில சமயம் தரமாட்டார்கள். சாலையில் உட்கார்ந்து போராட்டம் நடத்துவார்கள். அவர்களுக்கு என்று இருக்கும் தங்க நகைக் கடைக்காரர்களுக்கான சங்கத்தினர் நம்மோடு வந்து சண்டைக்கு நிற்பார்கள். அவர்களை எல்லாம் சமாளித்து நகையை மீட்டுக் கொண்டு வந்து கொடுப்போம்.

 

ஆனாலும் நகையை பறிகொடுத்தவர்கள் 24 கேரட்டுக்கு பதிலாக 18 கேரட் தங்கத்தை பெற்றுக்கொண்டு மீதியை ஏதோ காவல்துறையே திருடிக்கொண்டதாக நினைத்துக் கொள்வார்கள். என்ன கஷ்டப்பட்டாலும் காவல்துறைக்கு நன்றி செலுத்தமாட்டார்கள் என்று நாங்கள் சொல்லிக் கொள்வதுண்டு. திருடுகிறவனை தேடுதல் என்பது முதற்கட்டமாக கை ரேகையைக் கொண்டு ஏற்கனவே திருடிய பட்டியல்களில் வருகிறானா என்று பார்க்க வேண்டும். புதிய கை ரேகையா இருந்தால் திருடியவனை கண்டுபிடிக்க காலம் எடுக்கும்.

 

சில சமயம் திருடியவனே 15 சவரன் தான் என்று சொல்வான். நகையை பறிகொடுத்தவர்கள் 20 சவரன் என்பார்கள். திருடனே சொல்வதுண்டு “நகையை பறிக்கொடுத்தவனை கூப்டுங்க, நானே கணக்கு சொல்றேன்” என்பதெல்லாம் நடப்பதுண்டு. சில சமயம் நகையை பறிகொடுத்தவர்கள் கூட பொய் சொல்வதுண்டு. சில சமயம் திருடனும் சிக்கி நகையை வாங்கியவரும் சிக்கினால் இருவரின் மீது வழக்கு தொடர்ந்து சிறைக்கு செல்லும்படியாகும். நகையை திரும்ப செலுத்தினாலும் திருட்டு நகையை வாங்கியதற்கான கால அளவு தண்டனையை அனுபவித்துதான் ஆகணும்.