Skip to main content

முத்தக்காட்சி வந்தால் சேனலை மாத்தாதீங்க - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :11

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

parenting-counselor-asha-bhagyaraj-advice-11

 

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சில முறைகளையும், பிள்ளைகள் செய்கிற தவறுகளின் தன்மைகளை உணரும் விதங்களையும், அதை சரி செய்வதற்காக எடுக்கிற முயற்சிகளைப் பற்றியும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை நிபுணர் ஆஷா பாக்யராஜ் நம்மிடையே விவரிக்கிறார்.

 

14 வயது பெண் குழந்தை, தன் அம்மாவிடம் வந்து நான் பார்ன் படங்கள் பார்த்ததாக சொல்கிறாள். மேலும் பார்க்க ஆவலாக உள்ளதாகவும் சொல்கிறாள். அவர்களுக்கு மிகவும் ஆச்சரியமாகவும், மகள் எதோ பெரிய தவறு செய்து விட்டது போலவும் நினைத்துக் கொண்டு இதை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை என்றார். முதலில் அந்த அம்மாவிடம் பார்ன் படங்கள் குறித்த புரிதல் இருக்கிறதா என்று கேட்டால் திருமணத்திற்கு முன்பு வரை எதுவுமே தெரியாது, திருமணத்திற்கு பிறகு தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை என்றிருக்கிறார்.

 

அதோடு மகள் தன்னிடம் வந்து பார்ன் படங்கள் பார்த்ததாக சொல்லும் அளவிற்கு அவளுக்கு அம்மாவிடம் மரியாதையும், சுதந்திரமும் இருந்திருக்கிறதே அதை முதலில் பாராட்டினீர்களா? இதை எப்படி கையாள்வது என்று யோசிப்போம் என்று அவளுக்கு தைரியம் சொன்னீர்களா என்றால் இல்லை என்பதே பதிலாக இருந்தது. இந்த கவுன்சிலிங்கிலும் குழந்தைக்கு முன்பு அம்மாவிடம் தான் நிறைய பேச வேண்டி இருந்தது.

 

பெண் உடலில் ஏற்படுகிற மாற்றம் குறித்த கேள்விகளை இளம் வயதில் நீங்கள் யாரிடம் கேட்டு தெரிந்து கொண்டீர்கள் என்றதற்கு யாரிடமும் கேட்டு தெரிந்து கொள்ளவில்லை. கேட்பதற்கு தயக்கமாக இருந்தது என்றார். ஆனால், உங்களுடைய மகளுக்கு அந்த தயக்கம் இல்லை அல்லவா? அதற்கு நீங்கள் முதலாவது பாராட்டு தெரிவித்திருக்க வேண்டும். அப்போது தான் அம்மாவிடம் எது வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற தைரியம் குழந்தைகளுக்கு வரும் என்றேன்.

 

மேலும் தொலைக்காட்சிகளில் முத்தக்காட்சிகள் வந்தால் உடனடியாக டிவியை அமர்த்துவது, சேனல் மாற்றுவது போன்று எதுவும் செய்யாமல் வெளிப்படையாக அது போன்ற சமயங்களில் பேசுங்கள் என்றேன். அதற்கு அந்தம்மாவோ “ஒரு அம்மாவாக நான் எப்படி இதை பேச முடியும்”? என்றார். குழந்தைகள் தைரியமாக பேச ஆரம்பிக்கும் போது பெற்றோரும் பேசத்தான் வேண்டும் என்று இருவரையும் நேரில் வர வைத்து பேச வைத்தோம்.

 

அந்த குழந்தை முதலாவதாக தன் அம்மாவிடம் மன்னிப்பு கேட்டது. நான் அது போன்ற படங்களை பார்த்திருக்க கூடாது தான். ஆனால் அதை பார்த்து விட்டேன். இப்பொழுதெல்லாம் அதைப் பார்க்க தோன்றுகிறது என்றது. அந்த அம்மாவிற்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை. பிறகு நான் விளக்கினேன். எல்லாவற்றையும் செய்வதற்கும் பார்ப்பதற்கும் ஒரு வயது இருக்கிறது. இந்த வயதில் ஹார்மோன் மாற்றத்தால் விரும்புகிற விசயத்தை பார்க்கிற, அதே சமயத்தில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிற தன்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்றேன். மூன்று மணி நேரம் பேசியதில் அந்த குழந்தைக்கு ஒரு புரிதல் வந்தது.

 

பிறகு பிரண்ட்ஸ் யாரு என்பதிலும், டேஞ்சரானவர்கள் யார் என்பதிலும் நமக்கு ஒரு புரிதல் இருக்கிறது. இதற்கிடையில் டிரிக்கர் பெர்சன் என்று ஒருவர் இருக்கிறார் அவரையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர் தான் நம்மை பெற்றோருக்கு தெரியாமல் ஒரு விசயத்தை செய் என்று தூண்டுபவராக இருக்கிறார். அது போன்ற ஒருவர் தான் முதன் முதலாக இந்த குழந்தைக்கு பார்ன் படங்களை காட்டியிருக்கிறார். இனிமேல் அவரோடு பார்த்து பழக வேண்டும் என்று அறிவுறுத்தினோம்.

 

அத்தோடு ஹார்மோன் மாற்றத்தால் உண்டாகும் உணர்ச்சிகளைத் தெரிந்து கொள்வதற்கும் ஒரு வயது இருக்கிறது. இல்லையென்றால் சிறிய வயதில் கர்ப்பமடைந்து தாயாகும் வாய்ப்பு வந்து விடும் என்று சொல்லி புரிய வைத்ததும், அந்த குழந்தைக்கு பிரச்சனையின் தன்மை புரிந்தது. தன்னை சரி செய்து கொள்வதாகவும் இனிமேல் டிரிக்கர் பெர்சன்களிடம் கவனமாக நடந்து கொள்வதாக சொன்னாள். சிறிய குழந்தைகளுக்கு அதிகபட்சமாக கற்பிப்பதாக திணிக்கவும் கூடாது. நம்மை மீறி இணையத்தில் பல விசயங்களை தெரிந்து கொள்கிறார்கள். அதை நாம் முதலில் புரிந்து கொண்டு, நாம் பலவற்றை தெரிந்து கொண்டு குழந்தைகளை புரிதலுக்கு உட்படுத்த வேண்டும். 

 


 

Next Story

முடிவெடுக்கும் அம்மா, முரட்டுத்தனமாக மாறும் மகள் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :14

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
parenting-counselor-asha-bhagyaraj-advice-13

குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் கொடுக்கப்படும் கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.

அம்மா இல்லத்தரசியாகவும், அப்பா மாதாந்திர சம்பள வேலைக்கு போகிற குடும்பப் பிண்ணனியில் இருக்கிற ஒரு குழந்தைக்கு திடீரென முரட்டுத்தனமான பழக்கவழக்கங்கள் வந்து விடுகிறது. அதாவது கதவை சாத்திக் கொண்டு அறையில் தனித்து இருத்தல், எது கேட்டாலும் பதில் சொல்லாமல் அமைதியாக இருப்பது, இல்லையென்றால் சத்தமாக கத்துவது போன்ற சிக்கலுக்குள் உள்ளாகிறாள். இதைக் கவனித்த பெற்றோர் குறிப்பாக அம்மா என்னைப் பார்க்க வந்தார்.

அவருடன் பேசியதன் வழியாக தெரிந்து கொண்டது, அவர் மிகவும் கண்டிப்பானவராகவும், அப்பா குழந்தைக்கு எல்லா சுதந்திரமும் கொடுப்பவராகவும், கண்டிப்பு இல்லாதவராகவும் இருந்திருக்கிறார். அந்த அம்மாவின் கண்டிப்பு என்பது குழந்தையின் காலை முதல் இரவு வரை அவர் திட்டமிட்டபடியான விசயங்களைத் தான் செய்ய வேண்டும் என்று இருந்திருக்கிறார். குழந்தையின் ஆசைக்கோ, முடிவுக்கோ எதையும் விடுவதில்லை என்றார்.

இதையெல்லாம் கேட்ட பிறகு அவரிடம் முதலில் நான் கேட்டது “நீங்க செய்வது சரி என்று உங்களுக்கே தோன்றுகிறதா”? என்றேன். அதற்கு அவரோ சிறுவயதில் நான் எல்லோராலும் நிறையா கிண்டலடிக்கப்படுவேன், அத்தோடு நீண்ட நாட்களான பிறகு தான் பருவம் அடைந்தேன். அதனால் தான் என் மகளுக்கு அப்படியான எந்த சிக்கலும் வந்து விடக்கூடாது என்று ஆரம்பத்திலிருந்தே சரி செய்கிறேன் என்றார்.

தனக்கு நடந்தது தன் மகளுக்கு நடக்கக் கூடாது என்று அம்மாவின் ஆதங்கம் புரிந்து கொள்ள முடிந்தது. அதற்காக அவர் எடுத்துக் கொண்ட முறை தான் தவறானது என்பதை அவருக்கு உணர்த்தினேன். பிறகு உங்களுடைய நல்ல குணாதிசயங்களை வகைப்படுத்தி எழுதுங்கள் என்றேன். பத்து பாயிண்ட் எழுதி என்னிடம் இவ்வளவு பாசிட்டிவ்வான விசயங்கள் இருக்கிறதா என்று அவரே வியந்தார்.

பிறகு, குழந்தையிடம் பேசிய போது எடுத்த உடனேயே அம்மா வேண்டாம் என்றாள், பிறகு குழந்தையிடம் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பேசியதிலிருந்து சின்ன சின்ன விசயங்களுக்கு கூட தன்னுடைய ஆசையை நிறைவேற்றாமல் எல்லாமே அம்மாவின் ஆசை தான் நிறைவேறி இருக்கிறது என்பது புரிய வந்தது. அம்மா தன்னை மாற்றிக் கொள்வதாக சொல்லி இருக்கிறார். அவங்க தன்னை மாற்றிக் கொள்ள கொஞ்சம் நாள் எடுக்கும், காத்திருக்கவும் என்றதும், குழந்தை புரிந்து கொண்டது. இன்னும் கவுன்சிலிங் போய்க்கொண்டு தான் இருக்கிறது.

Next Story

பிள்ளைகளை பாதிக்கும் பெற்றோரின் கருத்து வேறுபாடு - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :13

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
parenting-counselor-asha-bhagyaraj-advice-13

குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் கொடுக்கப்பட்டும் கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் பகிர்கிறார்.

ஒரு நோயால் பாதிக்கப்பட்டு ஆறு மாதமாக ஓய்வில் இருந்த கண்டிப்பான அம்மா, எந்த விதமான கண்டிப்புமே இல்லாமல் சுதந்திரமாக மகளை வளர்த்த அப்பா, இவர்களுக்கு ஒரே மகள். ஒரு சமயத்தில் குழந்தையின் செயல்பாடுகளில் அதிகப்படியான இயல்பு நிலை மாற்றம் தெரிகிறது அதை நோயிலிருந்து மீண்ட அம்மா கண்டறிகிறாள். இதற்கு குழந்தையை ஒழுங்காக பராமரிக்காத கணவர் தான் காரணம் என்று குறை கூறி அது அவர்களிடையே முரணாகி குழந்தை வளர்ப்பு ஆலோசகரான என்னை அணுகினர்.

கண்டிப்பான அம்மா சரியா? எதையுமே கண்டுகொள்ளாமல் மகளை சுதந்திரமாக விட்ட அப்பா சரியா? என்று என்னிடம் கேட்ட போது இரண்டுமே தவறு என்று அவர்களுக்கு சொன்னேன். எப்போதுமே குழந்தை அம்மாவின் பேச்சை கேட்க வேண்டும், அவர்கள் சொல்லும் படி தான் நடக்க, சாப்பிட, உடை உடுத்த செய்ய வேண்டும் என்று நினைப்பதை குழந்தை வளர்ப்பு உளவியலில் ஹெலிகாப்டர் பேரண்டிங் என்கிறோம். பின்னாடியே துரத்தி, துரத்தி அதை செய், இதை செய்யாதே என்று அவர்களை வழிநடத்துவது தவறு. அவர்களை நடக்க விட்டு வழிகாட்டுதல் வேண்டும், அவர்கள் நடந்து கொள்வார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள் என்று அந்த அம்மாவிற்கு சொன்னேன்.

ஜங்க் புட் சாப்பிடலாம், நள்ளிரவு நண்பர்களோடு பிறந்தநாள் விழா கொண்டாட போகலாம், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை குடிக்கலாம், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் போன் பயன்படுத்தலாம், போன்ற எல்லாவற்றையுமே கண்டிக்காமல் விடுவதும் தவறு தான். சில விசயங்களில் கண்டிப்போடு இருக்க வேண்டும் என்று அந்த அப்பாவிற்கு சொன்னேன்.

உங்கள் குழந்தையிடம் என்ன பிடிக்கிறது? என்ன பிடிக்கவில்லை? எதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அந்த பெற்றோரிடம் எழுதி கொண்டு வரச் சொன்னேன். இருவரின் ஒரு பாயிண்ட் கூட ஒத்துப்போகவில்லை. மேற்கொண்டு பேசும் போது எதிர்த்து எதிர்த்து பேசுகிறாள் என்றார்கள்.

இதற்கு தூக்கமின்மையும் காரணமாக இருக்கலாம். நீங்கள் எப்படி தூங்க வைப்பீர்கள் என்று அம்மாவிடம் கேட்டபோது, கண்டிப்பாக இரவில் குளிக்க வேண்டும், சாமி கும்பிட வேண்டும், தூங்குவதற்கென்று தனி உடை உடுத்த வேண்டும் என்றார். அப்பாவோ எப்ப தூக்கம் வருதோ, குழந்தை அப்ப தூங்கட்டும் என்றார். 

இப்ப குழந்தையிடம் கேட்ட போது எனக்கு தூங்குவதற்கென்று தனியாக கவனம் செலுத்த பிடிக்கவில்லை என்றது. எனவே அதனை நெறிப்படுத்தி சரி செய்தேன். அது அந்த குழந்தைக்கு நிறைய மாற்றங்களைத் தந்தது. அதை பெற்றோர்களும் உணர்ந்தார்கள்.

இறுதியாக பெற்றோர்கள் தங்களுக்குள் மரியாதையாக பேசி பழகுங்கள். அது உங்கள் மகள் உங்களை மரியாதையாக நடத்த உதவும் என்று பெற்றோருக்கு சொன்னேன். ஒரே சிட்டிங்கில் இது சரியாகவில்லை, மாதக் கணக்கில் எடுத்துக் கொண்டது.

ஆனால், சொன்னதை எல்லாம் ஏற்று பெற்றோர்கள் நடந்ததால், குழந்தையிடம் நல்ல மாற்றம் தெரிவதை உணர்ந்து என்னிடம் சொன்னார்கள். பிறகு குழந்தையை எப்பவுமே எப்படி எங்கேஜ்டாக வைத்துக் கொள்வது என்றும், அதிக நேரம் போன் பயன்படுத்துவதால் வரும் சிக்கல்களை எடுத்துச் சொன்னதும் புரிந்து கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் அடைந்தாள்.

எல்லா பெற்றோர்களுக்குள்ளும், கணவன் - மனைவி இடையே ஏற்படுகிற மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கால் குழந்தைகளும் பாதிப்பு அடைவார்கள். அதை மனதில் வைத்து இணக்கமான உறவை கையாள வேண்டும்.