Skip to main content

அப்பா, அம்மா வேணாம்; அந்த அங்கிள்  மட்டும் வேண்டும் -  ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை : 07

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

 parenting-counselor-asha-bhagyaraj-advice-07

 

டீன் ஏஜ்ஜில் ஏற்படும் காதல் ஈர்ப்புகள் சம்பந்தமாக கொடுக்கப்பட்ட கவுன்சிலிங் குறித்து நம்மோடு குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.

 

பிளஸ் டூ படிக்கும் 17 வயது மாணவிக்கு 40 வயது மதிக்கத்தக்க ஒருவருடன் காதல் ஏற்பட்டு, வீட்டை விட்டு நகை, பணம் முதலியவற்றை எடுத்துக் கொண்டு காணாமல் போயிருக்கிறார். காவல்துறை உதவியுடன் பெற்றோர் தங்களது மகளை கண்டறிந்து வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர். ஆனாலும் அந்த மாணவிக்கு இன்னும் அந்த ஈர்ப்பிலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறார் என்பதை அறிந்து கவுன்சிலிங் அழைத்து வந்தனர்.

 

பல சமயம் குழந்தைகளை சூம் மீட்டிங்கில் பார்த்து பேசிவிடுவேன். இந்த குழந்தையை நேரில் பார்த்தே ஆக வேண்டுமென பார்த்தேன். நேரில் பார்த்த போது ஒரு மணி நேரத்திற்கு மேல் அழுது கொண்டே இருந்தார். எல்லாரும் சமாதானப்படுத்தச் சொன்னார்கள். எதோ ஒரு எமோஷனல் வெளியே வரட்டும் நான் அழட்டும் என்று விட்டுவிட்டேன். அழுது முடித்து பேச ஆரம்பித்த போது, ஏன் வீட்டை விட்டு போனிங்க என்றதற்கு “அப்பாவிடம் கிடைக்காத அரவணைப்பு இன்னொரு ஆணிடம் கிடைத்தது” என்றாள்.

 

வசதியான குடும்பம் தான். பிள்ளைக்கு தேவையான அனைத்தையும் வாங்கியும் தந்திருக்கிறார்கள். ஆனால், பெற்றோர் தங்களுக்குள் எப்போதுமே சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்களாம், இடையே விலகப் போன இவளுக்கு பிரைவேட் பார்ட்களிலெல்லாம் காயம்படும் படி அவர்கள் சண்டையிட்டு இருக்கிறார்கள். இதனால் அவள் மன உளைச்சலில் தான் இருந்திருக்கிறாள். தன்னுடைய சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள உறவுகள் இல்லாமல் தவித்திருக்கிறாள்.

 

அந்த சமயத்தில் தான் பக்கத்து வீட்டிலிருந்தவர் பழக்கமாகியிருக்கிறார். தன்னுடைய சுக துக்கங்களை அவரோடு பகிர்ந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறாள். ஒரு சமயத்தில் அவரோ நான் உன்னைய நல்லா பார்த்துக் கொள்கிறேன். உன்னுடைய வீட்டிலிருந்து நகை, பணம் எடுத்துக் கொண்டு வா என்று சொன்னதால் அதை நம்பி பணம், நகையை எடுத்துக் கொண்டு அவரோடு போயிருக்கிறாள். 

 

அவளோடு பேசிய போது பெற்றோரின் அரவணைப்புக்கு ஏங்கி இன்னொரு ஆணின் மீது ஈர்ப்பு வந்து ஏமாந்தவள் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அந்த குழந்தைக்கு உணர வைக்க ஒரு கேள்வி கேட்டேன். ரொம்ப பிரியமான அங்கிள் அவரோட பணத்தில் தானே உன்னைய பார்த்திருந்திருக்கனும், உன்னைய ஏன் பணம், நகை எடுத்து வரச் சொல்ல வேண்டும் என்ற போது தான் குழந்தை உணர ஆரம்பித்தாள்.

 

பிறகு ஓரளவு புரிதலோடு தன்னை மாற்றிக்கொண்டு, கல்லூரிக்கு சென்று யாருடைய ஆதரவும் தனக்கு தேவையில்லை என்று படிப்பு, விளையாட்டு போன்ற மற்ற விசயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறாள். ஆனால் அவளது பெற்றோர் இன்னும் தங்களை திருத்திக் கொள்ளவே இல்லை.  

 


 

Next Story

குழந்தைக்குக் கொடுத்த பிரஸர்; டிப்ரசனுக்கு போன தாய் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :24

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
parenting counselor asha bhagyaraj advice 24

குழந்தைகள் பற்றியே யோசித்து தன் நிலையை இழந்திருக்கும் பெண்மணிக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி  நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.

என்னிடம் கவுன்சிலிங் வரும் குழந்தைகளுக்கு எவ்வளவு மெண்டல் ஹெல்த் முக்கியமோ அந்த அளவு அவர்களுடைய பெற்றோர்களுடைய மெண்டல் ஹெல்த்தும் முக்கியம். ஏனென்றால், அவர்களது மனவலிமையே குழந்தைகளுக்கு சென்றடையும். என்னிடம் வந்திருந்த அந்த பெற்றோர்க்கு குழந்தையின் படிப்பு, அவர்களது உலகத்தைச் சுற்றியே முழுமையாக இருபத்தி நான்கு மணிநேரமும் யோசித்து யோசித்து இப்போது அவர்களுக்கு தங்கள் குழந்தையைக் கண்டாலே பிடிப்பதில்லை. அவர்கள் அம்மா என்று அழைத்தாலே கோவம் வருகிறது என்றார். நான் இப்படி இருந்ததே இல்லை. அவர்களும் இப்போது என்னிடம் நெருக்கம் முன்பு போல காட்டுவதில்லை. நான் என்ன செய்ய வேண்டும் மேடம் என்று கவலையுடன் என்னைப் பார்க்க வந்திருந்தார்.

குழந்தைகளை இயல்பாக விட்டிருந்தாலே அவர்கள் நன்றாக தான் படிப்பில் நாட்டம் காட்டுகின்றனர். ஆனால், இப்போதுள்ள பெற்றோர்கள் அவர்கள் படிப்பில் சிறக்க ஒவ்வொரு பாடத்திலும் இன்னும் சிறப்பாக பயில நிறைய வகுப்புகளில் சேர்த்து விடுகின்றனர். அது குழந்தைகள் மட்டுமில்லாமல் பெற்றோர்களும் அவர்களது ஸ்ட்ரெஸ்ஸில் பங்கெடுத்து மிகவும் பாதிக்கப்பட்டு விடுகின்றனர். இந்தப் பெற்றோர்க்கு இரண்டுமே பெண் குழந்தைகள் வேறு. அவர்கள் பதின் வயதை அடைவதால் கண்டிப்பாக தன்னுடைய அரவணைப்பு அவர்களுக்கு வேண்டும் என்பது தெரிந்தாலும் தன்னால் முடியவில்லை என்றார். அவர்கள் பள்ளியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வாரம் முழுவதும் தினசரி ஸ்பெஷல் வகுப்புகள் சேர்த்து அதைப் பற்றியே நினைத்து, அவரை பற்றி நினைக்காமல் உடல்நிலையே பாதிக்குமளவிற்குச் சென்றிருக்கிறார்.

அவரது உடல்நிலை கேடே அவரது உள்ளத்தையும் பெரிதளவு பாதித்து இருக்கிறது. சரியாக சாப்பிடுவது, தூங்குவது எல்லாமே மறந்து போய் பிடிக்காமல் இருந்தார். அவர் தன் குழந்தைகள் ஒன்றாவது வகுப்பு படிக்கும்போதே அவர்கள் பத்தாவதில் என்னவெல்லாம் செய்யவேண்டும், தான் வெளிநாட்டில் படிக்க இருந்து ஆனால் முடியாமல் போன இடத்தில் இவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று ஒரு நோட்டில் குறித்து வைத்திருந்திருக்கிறார். பின்னாடி மேலும் பேசியதில் தெரிந்தது, இவரது தந்தையும் இதே போலதான் தன்னைப் படிக்க வைக்கும் நடவடிக்கை இருந்ததாக குறிப்பிட்டார். இதுதான் அவரை அறியாமல் இவருக்கும் வந்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது.

ஏதாவது ஆயுதம் பார்த்தால் தற்கொலை செய்து கொள்ளலாமா என்றெல்லாம் யோசித்திருந்திருக்கிறார். செல்ப் கேர் செய்திருந்தாலே அவர்கள் மனநிலை நன்றாக மாறும். ரொம்ப டிப்ரஷனாக இருந்தார். என்னுடைய காணொளியை மூன்று மாதமாக பார்த்து வந்தாலும், இதனை எப்படி போய் பேசுவது என்று காலம் தள்ளியதாகவும், ஆனால், இனிமேல் தாமதிக்க கூடாது என்று தான் வந்ததாக சொன்னார். அவருமே தன் பள்ளி, கல்லூரி படிப்பிலும், அரசு தேர்விலும் கூட சிறந்து விளங்கி இருந்திருக்கிறார். அதனால்தான் தன்னைப் போலவே தன் பிள்ளைகளும் இருக்க வேண்டும் என்று இப்படி செய்து வந்திருக்கிறார் என்று புரிந்தது. நான் முதலில் அவர் கணவனை அழைத்து பேசினேன். இவர் தற்கொலை எண்ணம் எல்லாம் தன் மனைவிக்கு வந்திருந்தது என்பதை அறியாமல் இருந்திருக்கிறார்.

பொதுவாகப் பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனில் நிறைய மாற்றங்கள் உடலில் ஏற்படும். அதைக் குடும்பத்தில் நிறையப் பேர் புரிந்து கொள்கின்றனர். சில நேரங்களில் உதவி தேவை என்றால் நமது கணவனிடம் நாம்தான் எடுத்து சொல்லவேண்டும். அப்படி சில வருடங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதே இது ஒரு வகை விளைவு என்று சொல்லலாம். இதை உணராத அந்தக் கணவரிடம் அவருடைய மனைவிக்கு என்று ஏதும் செய்து கொடுக்குமாறும், கூட சிறிய நடைப்பயிற்சி, அவருக்கு போக நினைத்த வேலைக்கென்று அனுப்பி வைக்குமாறு சொன்னேன். ஆரம்ப காலங்களில் வேலைக்கு செல்லவேண்டாம் என்று கூறியிருந்த அவர், இப்போது தன் மனைவியின் நிலை அறிந்து வேலைக்கு அனுப்ப ஒத்துக்கொண்டார். அந்தப் பெண்மணிக்கு கல்லூரியில் பேராசரியாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. எனவே அதற்கு ஆதரிப்பதாக சொன்னார்.

இவருக்கு மூன்று செஷனுடன் முடிந்தது. வாரம் ஒருமுறை பாலோ அப் மட்டும் செய்து வருகிறேன். குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கவேண்டும்தான். ஆனால், குழந்தைகளிடம் மட்டுமே நேரம் ஒதுக்க வேண்டும் என்பது தான் தவறு. தன்னால் முடியாத போது அதைக் குழந்தைகளுக்கும் கணவருக்கும் எடுத்து சொல்லலாம். அவர்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள். குழந்தைகள் உலகத்தில் தங்கள் உலகத்தை இழந்து விடாமல் தனக்கென்று சிறிது மீ டைம் எடுத்துக்கொள்ளுதல் பெற்றோர்களுக்கு அவசியம்.

Next Story

பொறாமையால் நண்பன் செய்த செயல்; மன உளைச்சலான மாணவன் - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :23

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
parenting counselor asha bhagtaeraj advice 23

கூடா நட்பினால் மனமுடைந்திருக்கும் மகனுக்கும், பெற்றோருக்கும் கொடுக்கப்பட்ட கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.

என்னை ஒரு பெற்றோர் சந்திக்க வந்திருந்தனர். அவர்களது பதினோராம் வகுப்பு படிக்கும் மகன் ரொம்ப சாதாரணமாக தான் பழகி வந்ததாகவும், கொஞ்ச நாட்கள் முன்பிலிருந்து தனித்து வித்தியாசமான நடவடிக்கை கொண்டு இருப்பதை கவனித்து கவலையுடன் என்னிடம் சொன்னார்கள். மேலும் அவர்களது மகன் சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் செலவழிப்பதாகவும், அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதாகவும், ஒருநாள் எதார்த்தமாக பார்த்தபோது அதில் வயதுக்கு மீறின பேச்சும், ஆபாச வார்த்தைகளுமான பேச்சுவார்த்தை (சேட்டிங்) இருந்ததை பார்த்ததும் அதிர்ந்து, அவனிடம் கடிந்து கேட்டிருக்கின்றனர்.

கேட்டதற்கு அதுபோல தான் பேசவில்லை. அது தன் நண்பன் என சொல்லியிருக்கிறான். அந்த இன்னொரு பையனை பெற்றோர்க்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களால் நம்பமுடியவில்லை. தன்னுடைய அக்கவுண்ட் தகவல் நண்பனுக்கு தெரியும் என்பதால் தன்னுடைய பெயரை இப்படி தவறாக உபயோகித்து உள்ளான் என்று சொல்ல, அதை அந்த பையனின் பெற்றோரிடம் சொல்லிவிட்டனர். பிறகு தான், இவன் மீது இருக்கும் பொறாமையால் அப்படி செய்திருக்கிறான் என்று தெரியவந்தது. அதை இந்த பையனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிக நெருங்கிய நண்பனே இப்படி செய்ததால் அவனால் சரியாக தூங்க முடியாமல், படிப்பும் பாதிக்கப்பட்டு இருப்பதாக கவலைப்பட்டு அழைத்து வந்திருந்தனர். அவன், அடுத்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு கூடவே நீட் தேர்வு எழுத இருப்பதாலும் மிகவும் வருத்தப்பட்டனர்.

நான் அவனிடம் முதல்படியாக அவனது சமூக வலைத்தள முகவரியை மூடச் சொல்லி அவனது நண்பனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், நினைவுகள் அனைத்தையும் அழித்து விட சொன்னேன். பிடிக்காத விஷயத்திலிருந்து முதலில் வெளி வருமாறு சொல்லி, பிடித்த ஐந்து விஷயங்களை பற்றியும், கனவுகள் பற்றியும் எழுதச் சொன்னேன். அதிலும் தன் நண்பனை சேர்த்து தான் குறிப்பிட்டிருந்தான். எல்லா நினைவுகளும் விளையாட்டு முதல் சேர்ந்து சென்ற இடங்கள் வரை தன் நண்பனை சேர்த்து தான் பேசினான். அந்த அளவு பாதித்திருக்கிறான் என்று புரிந்து கொள்ள முடிந்தது. மேலும் இனிமேல் தான் எப்படி நல்ல நண்பனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கேட்டான். இப்போது அவனை பற்றி மட்டும் குறித்து யோசிக்க வேண்டும் என்றும் செல்ப் லவ் பற்றி எடுத்து சொன்னேன். இப்போது அவன் பள்ளியையும் மாற்றி விட்டார்கள்.

எனினும் கடந்த காலம் மொத்தமாக அவனிடமிருந்து அழிக்க வேண்டும் என்பதால் சிறிது காலம் எடுக்கத் தான் செய்யும். ஆனால் படிப்பை பொறுத்தவரை அவன் சீக்கிரமாக எல்லாமே கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற கட்டாய நிலையில் இருக்கிறான். பொதுவாக கவுன்சிலிங் வரும் குழந்தைகளை நான் பார்த்தவரை, குறிப்பாக பத்து, பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவர்களை, அவர்களது பெற்றோர்கள் ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டியை முழுமையாக நிறுத்தி விடுகின்றனர். அதற்கேற்றாற் போல அவர்களது படிப்பின் நேரமுறைகளும் அப்படிதான் இருக்கிறது. எனவே ஹாப்பி ஹார்மோன்ஸ் சுரக்கவே வாய்ப்பில்லை. அந்த பெற்றோரிடம் பையனுக்கு பிடித்த ஸ்போர்ட்ஸில் சேர்த்து விடுமாறு சொல்லி அனுப்பினேன். அதுவே அவனை கண்டிப்பாக பழைய இயல்பான நிலைக்கு மாற்றி, ஸ்ட்ரெஸ் பிரீயாக கொண்டுவர முடியும். பெற்றோர்கள் கண்டிப்பாக தங்கள் பிள்ளைகளின் நண்பர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல் அவசியம். அந்த வயதில் அவர்களுக்கு தப்பான நட்பு கண்டுபிடிக்க தெரியாமல் போனாலும், பெற்றோர்களால் கண்டிப்பாக அதை கண்டுபிடித்து தவறான பாதையிலிருந்து காப்பாற்ற முடியும்.