Skip to main content

சிலிர்ப்பு மிக்க செயல்திட்டம்... பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 15

Published on 17/05/2019 | Edited on 03/06/2019

கியூபாவுக்கு ஆதரவான லத்தீன் அமெரிக்க மாநாடு முடிவடைந்தவுடன், கவுதமாலாவில் மற்றுமொரு ராணுவ புரட்சி நடந்திருப்பதாக செய்தி வெளியானது. முதல் பார்வையில், இந்த இரண்டு நிகழ்வுகளும் தொடர்பு இல்லை என்பதுபோல தோன்றும். ஆனால், உன்னிப்பாக கவனித்தால், இரண்டுக்கும் இடையில் கண்ணுக்குப் புலப்படாத தொடர்பு இருப்பது தெரியும்.

 

pablo neruda



நிட்டெராயில் நடைபெற்ற மாநாட்டில் லத்தீன் அமெரிக்க நாடுகளின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் ஒரு பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. “கியூபாவின் விவகாரங்களில் எந்த ஒரு தலையீட்டையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்பதே அந்தப் பிரகடனத்தின் சாரம்.


ஆனால், எங்கள் விழிப்புணர்வுபெற்ற கண்டத்தின் உணர்வுகளை சீர்குலைக்கும் விதத்தில் அமெரிக்க அரசியல்வாதிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள்.


அவர்கள், கியூபாவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்ட சிறிய ஆதரவு மாநாட்டை அவமதிக்கும் அளவுக்கு சென்றார்கள். மாநாட்டுக்கு வருவோருக்கு விசா வழங்க மறுத்தார்கள். ஆனால், அவர்கள் நடவடிக்கை தோற்றது. நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் ரியோ டி ஜெனிரோ வந்தடைந்தனர். எனவே அவர்கள் கடைசியாக கார்லோஸ் லாசர்டாவின் நாசகர குணத்தை தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்த முயற்சித்தார்கள்.


பிரேசில் நாட்டு மக்களால் இவரைவிட மிகவும் அதிகமாக வெறுக்கப்பட்ட ஒரு நபரைக் குறிப்பிடுவது கடினம். அந்த நாட்டில் பிச்சையெடுப்பதை முடிவுக்குக் கொண்டு வர ஒரு குரூரமான வழியைக் கண்டுபிடித்தவர் லாசர்டா. அவரது போலீஸ்காரர்கள், பிச்சைக்காரர்களைப் பிடித்து, கைகளையும் கால்களையும் நீளமான வயரால் இறுகக் கட்டினார்கள். பிறகு அவர்களுடைய கழுத்துகளில் கல்லைக்  கட்டினார்கள். அதன்பின்னர் அவர்களை பாலத்திலிருந்து நதியில் தூக்கி வீசினார்கள்.


ஊதிப் பெருத்த அவர்களுடைய உடல்கள் சிதறி நீரில் மிதந்தன. நதிக்கரையில் ஒதுங்கிய ஏழைகளின் சிதறிய உடல்கள், கம்யூனிஸ்ட் எதிர்ப்பை தூக்கிப்பிடித்து கொடியவனுக்கு எதிராக சாட்சியாய் மிதந்தன. லாசர்டாவின் மனிதத் தன்மையற்ற கொடூரங்கள் அம்பலப்படுத்தப்பட்டது. அவரது அரசியல் வாழ்வு அஸ்தமித்துக் கொண்டிருந்தது. பிச்சைக்காரர்களைக் குரூரமாக கொலை செய்த கொடுங்கோலன்தான் கியூபா ஆதரவு மாநாட்டை சீர்குலைக்க முயற்சித்தான். ஆனால், அவனது முயற்சிகள் மாநாட்டின் வீரியத்தை அதிகரிக்கவே உதவியது. லாசர்டா போன்ற கிரிமினல்களால் யாரெல்லாம் ஆதரிக்கப்படுகிறார்,  உண்மையின் பக்கம் யாரெல்லாம் நிற்கிறார் என்பதை மக்களுக்கு இந்த மாநாடு ஒரு முறை வெளிச்சமிட்டுக் காட்டியது.

ராஜதந்திரத்தைப் பற்றி, எனக்கு முற்றிலும் ஏதும் தெரியாது, ஆனால், நடுநிலையான பார்வையாளர் ஒருவரின் பார்வையில்கூட, லத்தீன் அமெரிக்கா தொடர்பான அமெரிக்காவின் கொள்கை ஒன்றன் பின் ஒன்றாக தோற்கடிக்கப்படுகிறது.


அமெரிக்காவின் அந்தக் கொள்கை ஒரு பனிப் பந்தைப் போல, மலை உச்சியிலிருந்து கீழ்நோக்கி படுவேகமாக உருண்டு கொண்டிருக்கிறது. விரைவில் இந்தப் பனிக்கட்டி சுக்லாகச் சிதறும். ஆனால், இப்போதைய சூழலில், எமது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.


வளர்ச்சிக்கான கூட்டணி என்பது அமெரிக்காவின் மூளையில் கருவாகி உருவான குழந்தை. பார்ப்பதற்கு இளமையானதாக தோன்றும். ஆனால், அருகில் சென்றால் அது ஒரு பிணம் என்பது தெரியும். அதன் செயல்பாட்டைப் பற்றி பேசுகிற சுதந்திரமான பார்வையாளர்கள், “அது ஒரு அப்பட்டமான தோல்வி” என்கிறார்கள். வலதுசாரி சக்திகள் கூட, “அது முழுத் தோல்வி” என்று ஒப்புக் கொள்கின்றனர்.


இந்த கூட்டணியின் செயல்பாடுகள் முற்றிலும் நகைச்சுவைக் காட்சிகள் நிரம்பியவை. அவற்றில் ஒன்றைப்பற்றி உங்களுக்குச் சொல்கிறேன். சமீபத்தில், அமெரிக்கா தனது பணபலத்தை செலவழித்து, சிலி பல்கலைக் கழகத்தில் ஒரு பாடத்தை அறிமுகப்படுத்தியது. வளர்ச்சிக்கான கூட்டணியின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார திட்டங்கள் தொடர்பான கோடைக்கால வகுப்பு அது. அமெரிக்கா, தனது அனைத்து கலாச்சார நிபுணர்களும் இந்தப் பாடம் குறித்து விரிவுரை நிகழ்த்த வேண்டும் என்று விரும்பியது. பயிற்சி ஏற்பாட்டாளர்கள், முனோஸ் மரீனை அழைக்கலாம் என நினைத்தார்கள். ஆனால், அவர் வர மறுத்துவிட்டார். அதன் பிறகு, வேறுவழியின்றி, அமெரிக்காவில் உயர் அதிகாரியான டாக்டர் ஜுவான் மரீனை அழைத்து, அவரையே இந்தக் கூட்டத்தின் தலைவராக்கினார்கள்.


தொடக்கத்தில் எல்லாம் நல்லபடியாகத்தான் சென்றது. ஆனால், இங்கு பாடம் நடத்தியவர்கள், நான்காம் தரத்தினராக இருந்தார்கள். லத்தீன் அமெரிக்க கல்வியாளர்கள்தான், அந்த வகுப்பில் படித்தவர்களின் உண்மையான ஆசிரியர்களாக இருந்தனர். இங்கு பாடம் படிக்க வந்த அனைவரும் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் என்பதால், மிகவிரைவிலேயே, இதில் குழப்பமும், சுணக்கமும் ஏற்பட்டது. கடைசியில், இந்த பயிற்சி, அழுத்தமாக மூடப்பட்ட பாத்திரத்திற்குள் இருக்கும் தண்ணீரை மிகக் கடுமையாக சூடேற்றினால் வெடித்துச் சிதறுவது போல சிதறிவிட்டது!
 

 

María_Maluenda



சிலி நாட்டின் தேசிய நாடகக் கலையைச் சேர்ந்த பிரபல நடிகை, மரியா மலீண்டா, இந்த வகுப்பில் படித்த மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போதுதான் இநத் வெடிப்பு ஏற்பட்டது. அவர், கலைஞர்களின் வறுமை பற்றியும், கஷ்டமான வாழ்க்கை பற்றியும் பேசினார். நமது கலாச்சாரத்தில் அமெரிக்க தொழிலாளர்களின் தலையீடு பற்றி பேசினார்; இதன் விளைவாக, தேசிய உணர்வு எப்படி மழுங்கடிக்கப்படுகிறது என்பதைப் பற்றியும், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மீது உள்ளூர் பிற்போக்குவாதிகளால் ஏவப்படும் அரசியல் பாகுபாடுகளை பற்றியும் பேசினார். நமது தேசிய மற்றும் இனம் சார்ந்த நாடகக்கலை மீதான நம்பிக்கையை உருவாக்கிய அவர், புரட்சிகர சினிமாவில் நாடகத்தாலும், சினிமாவாலும் ஏற்படுத்தப்பட்டுள்ள மாபெரும் முன்னேற்றத்தை சுட்டிக் காட்டினார்.


அவரது பேச்சு, ஒரு மின்சார அதிர்வை ஏற்படுத்தியது. அந்தப் பெண்மணியை மாணவர் கூட்டம் சூழ்ந்து கொண்டது! கியூபாப் புரட்சி தொடர்பாக நான் எழுதியிருந்த கவிதையை அவர் பாடவேண்டும் என்று விரும்பினார்கள். மேடையில் இருந்து அவர் கீழிறங்க மிக நீண்ட நேரம் ஆனது.


ஆனால் இது நீடிக்கவில்லை. பயிற்சியின் தலைவர், கடைசிக் கட்டத்தை முன்னேற்றத்திற்கான கூட்டணி மற்றும் அமெரிக்க நிதி உதவி ஆகியவற்றின் பெருமிதங்களைப் பற்றிய கூட்டமாக மாற்ற திட்டமிட்டார். இதற்காக, மிகவும் விசுவாசமான பேராசிரியர்கள் அழைக்கப்பட்டனர். ஆனால், முதலில் பேசியவர்களில் ஒருவர், லத்தீன் அமெரிக்க நாவலைப்பற்றி மிகவும் மனம் லயித்துப் பேசினார். அதில் கூறப்பட்டிருப்பதுதான் எங்கும் பிரதானக் கருத்தாக உள்ளது என்றார். மெக்ஸிகோவில் இருந்து, நிகரகுவாவில் இருந்து தெற்கு படகோனியா வரை, மாபெரும் ஜன சமுத்திரமானது ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும், பிற்போக்குவாதிகளின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் இருக்கிறது என்று முழங்கினார். அந்தப் பேராசிரியர், இதே கருத்தை வேறு வார்த்தைகளால் கூறும் லத்தின் அமெரிக்க கவிதையாப் பற்றிப் பேசினார். கடைசியாக வந்த பேச்சாளர், ஒரு பொருளாதார அறிஞர். பொருளாதாரத்தை தேசியமயமாக்க வேண்டும் என்று கூறிய அவர், அதை, டாலர் சங்கிலியிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.


பயிற்சியின் இயக்குநர், ஜுவான் மரீன் எழுந்து, தனது வட அமெரிக்க நண்பர்கள் கூறிய பிரதான  வாக்கியங்களை தொகுத்துக்கூற முயன்றார். அமெரிக்காவில் படிக்க விரும்பும் லத்தீன் அமெரிக்க மாணவர்களுக்கு மிகப்பெரிய நிதி உதவிகள் செய்ய அமெரிக்க வெளியுறவுத் துறை விரும்புவதாக அவர் ஆசைகாட்டினார். இதுதொடர்பான அறிக்கையை  அப்படியே ஒப்புவித்தார். “நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், ஒரு விண்ணப்பப்படிவத்தை நிரப்பி, எனக்கு அனுப்ப வேண்டியதுதான்” என்று அவர் கூறினார்.
 

 

trujillo
ட்ருஜிலோ


மாணவர்களை விலைக்கு வாங்கும் இந்த குரூர முயற்சிக்கு, மாணவர்களின் கல்போன்ற இறுக்கமான மவுனத்தையே அவர் எதிர் கொண்டார். எவரும் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மரண அமைதியான சூழலின் பின்னணியில், அவர்கள் எழுந்து வெளியேறினார்கள். இது ஒரு பெரிய தண்டனையைவிடக் கடுமையானது.


இதற்கு சில தினங்களுக்குப் பின்னர், டாக்டர் மரீன் இறந்து போனார். மாணவர்களின் மவுனம் ஏற்படுத்திய அதிர்ச்சி, அவரை கடுமையாக பாதித்தது. அமெரிக்கா தனது விசுவாசமிக்க சேவகர்களில் ஒருவரை இழந்துவிட்டது.


இதே வழிமுறைகளில்தான், வட அமெரிக்கர்கள், கலாச்சாரத்தின் அனைத்துத் தளங்களிலும் தங்களின் நிலைகளை இழந்தனர். அதனால்தான் அவர்கள் அடிக்கடி வன்முறையை ஏவுகிறார்கள், ராணுவக் கலகங்களை அரங்கேற்றுகிறார்கள்; கியூபாப் புரட்சி மீதான லத்தீன் அமெரிக்க மக்களின் அன்பையும், சமூகமாற்றம் காண்பதற்கான அவர்களது ஆர்வத்தையும் வேரோடு கிள்ளி எறிய பலப்பிரயோகம் செய்கிறார்கள்.


இது ஒரு ஆபத்தான விளையாட்டு. இன்றைக்கு அர்ஜெண்டினாவில் நிலவும் அப்பட்டமான நிலையைப் பாருங்கள். மாண்டிவிடியோவில் நடைபெற்ற மாநாட்டில் அமெரிக்கா நிர்ப்பந்தம் செய்தும்கூட, கியூபாவுடனான ரகசிய உறவுகளைத் துண்டித்துக் கொள்ள அந்த அரசு மறுத்தத்தால், அர்ஜெண்டினாவின் அரசியல் அமைப்புச் சட்டம் தகர்க்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதி அர்ட்டுரோ ஃபுரோன்டிஸி, டிஸ்மிஸ் செய்யப்பட்டு, கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாடுமுழுதும் கலகமும், கலவரங்களும் பரவியுள்ளன. அர்ஜெண்டினாவில் நிலவும் குழப்பத்தை விளக்குவது இயலாத காரியம். பெரு நாட்டின் நிலமை இன்னும் மோசமாக இருக்கிறது.

 

Pérez-Jiménez
பெரேஸ் ஜிமெனெஸ்



அமெரிக்காவின் ஒரே விருப்பம் என்ன தெரியுமா? லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்திலும் கொடுங்கோல் ஆட்சி செய்கிற ஒருவரை, ராணுவ சர்வாதிகாரியை மீண்டும் கொண்டு வந்துவிட வேண்டும் என்ற பழைய உளுத்துப் போன யோசனையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் அமெரிககா உறுதியாக இருக்கிறது. ட்ரூஜில்லோ, பாடிஸ்டா, பெரேஸ் ஜிமெனெஸ் போன்ற அயோக்கியர்கள்,  முழங்கால் அளவிற்கு டாலர் குவியலில் நின்றுகொண்டு, ரத்தக்கறை படிந்த தனது கைகளில் அதிகாரத்தை குவித்து வைத்திருந்தார்கள். அதேசமயம், லத்தீன் அமெரிக்க நாடுகளின் வாழைத் தோட்டங்களையும், எண்ணெய் வயல்களையும் ஏகாதிபத்தியவாதிகளின் கைகளில் ஒப்படைத்திருந்தார்கள். அவர்களைப் போன்ற சர்வாதிகாரிகளை லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம்.


ஆனால், இத்தகைய கொடுங்கோலர்களின் காலம் முடிந்துவிட்டது. லத்தீன் அமெரிக்க பூமி, அத்தகைய கொடுங்கோலர்களின் பிடியில் இருந்து நகர்ந்து விட்டது.


இன்றும் கூட, அமெரிக்காவின் கொள்கையை அமுல்படுத்துகிற பெரும்பான்மையான லத்தீன் அமெரிக்க அரசுகள், கியூபா மீதான தடையை அமல்படுத்தியே வருகிறார்கள். கியூபாவை  தனிமைப்படுத்த வேண்டும் என்பதைத் தீவிரமாக ஆதரிப்பவராக வெனிசூலாவின் ஜனாதிபதி பெதான்கோர்ட் இருக்கிறார். புகையும், லாவா குழம்பும் கக்கிக் கொண்டிருக்கிற எரிமலையைப் போல தகித்துக் கொண்டிருக்கிற நாடு வெனிசூலா. அந்த நாட்டின் அதிபர் கியூபாவுக்கு எதிராக இருக்கிறார். 


ஜனாதிபதி கென்னடி பங்கேற்ற கடைசி செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. கியூபாவுக்குள் நுழைந்து திரும்புவது ஏன் சாத்தியமில்லாமல் இருக்கிறது? அதை ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்? என்பதே அந்தக் கேள்வி. உண்மையில் தனக்கு ஆதரவான இருபது நாடுகளால் கியூபாவை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது. அதாவது கியூபாவை அதன் 20 சகோதர நாடுகளைக் கொண்டே அபகரிக்க முயற்சிக்கிறது. ஆனால், அந்த நாடுகளில் வசிக்கும் 20 கோடி லத்தீன் அமெரிக்கர்கள் எமது கியூபா சகோதரர்களை சந்தித்து, எமது தாய்மொழியான ஸ்பானிய மொழியில் பேசி உரையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறோம்.

 

 

batista
பாடிஸ்டா



வட அமெரிக்க அரசியல்வாதிகள், எங்களது நாடுகளை, தங்களது நுகத்தடியில் கட்டி, லத்தின் அமெரிக்கா மீது காலம் தோறும் அதிகாரம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறார்கள். அமெரிக்க பிரச்சாரப் பீரங்கிகள், லத்தீன் அமெரிக்க நாடுகள் கியூபாவை எதிர்த்து நிற்க வேண்டும் என்று மக்களை திசைதிருப்புவதற்கான பிரச்சாரத்தைச் கட்டவிழ்த்து விட்டுள்ளன. இந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், லத்தீன் அமெரிக்க நாடுகளின் கொள்கையை அமெரிக்கா உருவாக்கித் தருகிறது.


யுபிஐ அல்லது ஏபி போன்ற செய்தி நிறுவனங்கள், உதாரணத்திற்கு சிலியைப் பற்றி குறிப்பிடும் போது, திட்டமிட்டே இந்த வரிகளைச் சேர்க்கின்றன. “கியூபாவுடனான உறவுகளை இன்னும் முறித்துக் கொள்ளாத நாடான சிலி” என்று. ஆனால், வாஷிங்டனின் உத்தரவுகள், எப்போதுமே எழுத்தில் தாங்கி வருவதில்லை உதாரணத்திற்கு, கியூபா ஆதரவு மாநாட்டை சீர்குலைக்கும் திட்டத்தில் அமெரிக்க ராஜதந்திரிகள் தோல்வியடைந்து விட்டார்கள் என்ற தகவல், இவர்கள் வெளியிட முடியாத கடுமையான செய்தி.


இந்த மாநாட்டில், ஒரு பிரகடனம் நிறைவேற்றப்பட்டது. “கியூபா மீதான தடைகளுக்கு முடிவு கட்டுவோம். லத்தீன் அமெரிக்காவுக்கான செயல்திட்டத்தை உருவாக்கிய கியூபா மக்களுடன் நமது ஒற்றுமையைக் கட்டி வளர்ப்போம் என்று அந்த பிரகடனம் அழைப்பு விடுத்தது. நமது லத்தீன் அமெரிக்க நாடுகள், சகோதர நாடான கியூபாவுக்கு எதிரான ஏகாதிபத்திய அச்சுறுத்தலை முறியடிக்க. விழிப்புடன் இருக்க வேண்டும். என்றும் அது நமது கடமை என்றும் அந்த பிரகடனம் வலியுறுத்தி உள்ளது.
 

 

(பிராவ்தா, ஏப்ரல் 17, 1963.

 

முந்தைய பகுதி:


மரக்குதிரை! பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி 14

 

அடுத்தபகுதி:

 

கியூபாவின் உண்மையான கதாநாயகன்! ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா 16
 

 

 

 

Next Story

இருளின் ராஜ்ஜியத்தில் ஒரு சூரிய ஒளிக்கீற்று!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 26.

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

குவாயாக்குய்ல் மிகவும் புகழ்பெற்ற இடம் அல்ல. கொளுத்தும் சூரியனுக்குக் கீழே கருப்புக்குடைகளைப் போல, அந்த விரிகுடாவில் மிகப்பெரும் பறவைகள் சுற்றித் திரிகின்றன. துரைமுகத் தொழிலாளர்கள் வேக வேகமாக நடக்கிறார்கள். மிகப்பெரும் வாழைப்பழ லோடுகளுக்கு அடியில் அவர்களது உருவம் தெரிகிறது. குவாயாக்குய்ல், ஈகுவடாரின் மிக முக்கிய செல்வமான வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான முக்கியமான துறைமுகம் ஆகும்.

pablo thodarkal


|இந்த வாழைப்பழ நகரத்தில் இரண்டு விஷயங்கள் எனது கண்களில் பட்டன. இரண்டுமே அடிப்படையில் குறிப்பிடத்தக்க விஷயங்கள் அல்ல. ஒன்று, சாவைப் பற்றியது. குவாயாக்குய்ல் நகரின் கல்லறை உயரமான வளர்ந்த மரங்களுக்கும் மலர்களுக்கும் இடையே மிகப்பெரிய அளவில் காட்சியளிக்கும். உண்மையில் ஈகுவடாரின் இதர பிரதேசங்களை ஒப்பிடும் போது குவாயாக்குய்ல் நகரத்தில் வாழ்வதை விட சாவதே நல்ல விஷயம்.


மற்றொன்று என்னை ஈர்த்தது, எனது நண்பரின் சிரிப்பு. வாழ்க்கையின் அற்புதமான அறிவிப்பு சிரிப்பு. அவரது பெயர் என்ட்ரிக் கில் கில்பர்ட். எவ்வளவு சத்தமாகவும், ஈர்ப்புமிக்கதாகவும் அவர் சிரிக்கிறார்! தெருவில், வாழை மரங்களின் அடியில், தூய்மையான வானத்தின் அடியில் நின்று கொண்டு மிகப்பெரும் கருப்பு பறவைகள் சூழ்ந்து நிற்க அவரது அட்டகாசமான சிரிப்பு ஒரு புயலைப் போன்றது அல்லது வீடுகள் கட்ட பயன்படுத்தப்படும் கிரானைட் கற்களைப் போல பளபளப்பானது. குவாயாக்குய்ல் நகர மக்கள் கில் கில்பர்ட்டின் சிரிப்பை நல்லதை அறிவிக்கும் ஓசையாக கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

pablo neruda

ஆனால் அவர்கள் இப்போது அந்த சிரிப்பை அடிக்கடி கேட்க முடிவதில்லை. எனது நண்பர் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்பட்டிருக்கிறார். லத்தீன் அமெரிக்காவின் பல மகன்கள், பெட்ரோசாட், லூயிஸ் வால்டிவிசோ மோரன், ஜீசஸ் பரியா மற்றும் இதர பலரும் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் இருக்கிறார்கள். அல்லது மரண தண்டனை கூடங்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பிரேசிலியர்கள் தொலைதூரங்களில் உள்ள தீவுகளுக்கு நாடு கடத்தப்பட்டு விட்டார்கள். அல்லது சிறைக் கொட்டடிகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.


லத்தீன் அமெரிக்காவின் பிற்போக்கு சக்திகள் ஜீசஸ் பரியாவின் உன்னதத்தை, பெட்ரோசாட் மற்றும் லூயிஸ் மோரனின் உறுதியை, கில் கில்பர்ட்டின் நம்பிக்கைமிக்க கதைகளை பார்த்து பயந்து போயிருக்கின்றன. எங்களது மாபெரும் கண்டத்தின் மக்களது நினைவுகளும் உணர்வுகளும் இந்த அமைதியான நண்பர்களுடனே இருக்கின்றன. அவர்கள் இருளின் ராஜ்ஜியத்தில் சூரிய ஒளிக்கீற்றைப் போல அறியாமையும் வன்முறையும் நிறைந்த இடத்தில் ஒரு வெளிச்சக் கீற்றைப் போல இருக்கிறார்கள்.


|இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் இறுதியில் இருள் தோற்கடிக்கப்படும் என்பது தெளிவு. இது மரணத்தின் போராட்டம். இது இருட்டுச் சக்திகளின் கடைசி போராட்டம். அவற்றின் கடைசி ஆயுதம் வன்முறையும் சித்ரவதையும்தான்.
 

pablo neruda


வன்முறை சற்று குறைவாக இருந்த நாடான சிலியில் இந்தப் போராட்டத்தின் உத்தி வேறுவிதமாக இருந்தது. இந்த நாட்களில் தீவிர வலதுசாரி மதகுருமார்களும், தொழிலதிபர்களும் கைகோர்த்துக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை ஆதரித்தார்கள். அவர்கள் தங்களது நம்பிக்கையை கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் மீது வைத்தார்கள். அவர்களது வேட்பாளர் பிரெய், இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் வெற்றி பெறுவதற்காக புரட்சிகர பாதையிலிருந்து தன்னைத்தானே விலக்கிக் கொண்டவர். இரண்டு நாட்களுக்கு முன்பு பழைய கட்சிகள், நில உடமையாளர்கள் மற்றும் வட்டிக்கு கொடுத்து வாங்கும் நிதியாளர்கள் ஆகியோரின் கட்சிகளும் அவரை ஆதரித்தன. தற்போது அவரை வானத்திற்கும் மேலாக புகழ்ந்து பேசுகிறார்கள். சாத்தியமான அனைத்து வழிகளிலும் அவரை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்கள்.
 

இதர லத்தீன் அமெரிக்க நாடுகளை விட இங்குள்ள நிலைமை சற்று பரவாயில்லை. எனினும் இதுவும் மோசமே. அமெரிக்க ஐக்கிய நாடு, இங்கு தாமிரச் சுரங்கங்களை தேசவுடைமையாக்குவதை தடுக்க முயற்சிக்கிறது. ஒரு விவசாய சீர்திருத்தம் நடப்பதை தவிர்க்க பணக்கார நிலவுடமையாளர்கள் முயற்சிக்கிறார்கள். அரசியலில் இருந்து மக்களை ஒதுக்கியே வைத்திருக்க ஆளும் வர்க்கம் அனைத்துக் காரியங்களையும் செய்கிறது. ராணுவக் கலகம் எதையும் நடத்தாமலே இதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி நடவடிக்கை மேற்கொள்கிறார்கள்.
 

இந்த தருணத்தில் மக்களின் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் தருகின்றன. மூன்று நாட்களுக்கு முன்பு ஜனாதிபதி பதவிக்கான மக்கள் வேட்பாளர் டாக்டர் சால்வடார் அலண்டேயை சந்திக்க மிகப்பெரும் கூட்டம் கூடியது. அந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் நானும்கூட பேசினேன். சில நகைச்சுவை மிக்க கவிதைகளையும் வாசித்தேன். அந்த மாபெரும் மக்கள் கூட்டத்தைப் பார்த்து இவர்கள் மொத்தம் எத்தனை பேர் என்று வியந்து போனேன். இன்னும் கூட நாங்கள் மிகச் சரியான எண்ணிக்கையை கணிக்க முடியவில்லை. ஆனால், அந்தக் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இருக்கக் கூடும். இன்னும் 3 லட்சத்து 50 ஆயிரம் பேராகக் கூட இருக்கக் கூடும் என்று தகவல்கள் வந்துள்ளன. இந்த மாபெரும் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதிநிதிகள் மட்டுமின்றி எல்லோரும் பங்கேற்றார்கள். முன்னெப்போதும் எனது நாடு இத்தகைய மிகப்பெரும் பொதுக்கூட்டத்தை பார்த்ததில்லை. சிலி தேசத்தின் மக்கள் இன்றைக்கு தங்களது விடுதலையையும் அனைத்து லத்தீன் அமெரிக்க மக்களின் கவுரவத்தையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள்.
 

இது போன்ற ஒரு உணர்ச்சிமிக்க தருணத்தில் நான் இத்தகைய சில வரிகளை எழுத சில நிமிட நேரங்கள் கிடைத்தது. பல நிர்ப்பந்தங்கள் இருந்தாலும், ஷேக்ஸ்பியரின் தினத்தையொட்டி ரோமியோ - ஜூலியட்டை மொழி பெயர்க்க நியமிக்கப்பட்டேன். இந்த அற்புதமான கவிதையை வாசிக்கும் போது நான் ஏராளமாக கற்றுக் கொண்டேன். அது மிகவும் அன்பைப் பொழிந்த, அதை எழுதிய ஆசிரியரின் இதயத்தை உணர்த்துகிற, நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து மறைந்து மண்ணோடு மண்ணாகிப் போன அந்த கவிஞனின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிற காவியம். ஒரு துயர காதல் கதையான ரோமியோ - ஜூலியட் மக்களிடையே அமைதியை வலியுறுத்துகிற ஒரு மாபெரும் இலக்கியம். வன்முறைக்கும் போருக்கும் எதிராக மிகக் கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்துகிற படைப்பாகவே அதை நான் கருதுகிறேன்.
 

எனது உணர்வுகள் கொந்தளிக்கின்றன. நான் எனது கண்களை ஜூலியட் நடைபயின்ற தோட்டத்திற்குள் செலுத்துகிறேன். ரோமியோவுக்கு எனது இறுதி அஞ்சலியை செலுத்துகிறேன். எனது சொந்த நாட்டின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடச் செல்வதற்கு முன்னர் வீதிகளிலும் வயல்வெளிகளிலும் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பதற்கு முன்னர் இதெல்லாம் நடக்கிறது. நாளை டாக்டர் அலண்டேயும் நானும் சிலி தேசத்தின் தெற்குப் பகுதிக்கு பயணிக்கிறோம். அது ஒரு மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கப் பகுதி. தலைநகரிலிருந்து தொலைதூரத்தில் இருக்கிறது.
 

மத்தியப் பள்ளத்தாக்கில் வருவதற்கு முன்பாகவே அங்கு குளிர் வந்து விடும். அத்துடன் இதமான தட்பவெப்ப நிலையும், திராட்சை தோட்டங்களின் மணமும் வீசும்.
 

எனது குழந்தை பருத்தின் மழைத்துளிகள் தெற்கில்தான் நனைத்திருக்கின்றன. மழையின் வெள்ளிக் கம்பிகள் தரையை தொடும் போது எங்களது போராட்டத்தையும் முன்னேற்றத்தையும் பற்றி நான் உங்களுக்குச் சொல்லுவேன். அங்கே என்ன பார்த்தேன் என்பதைப் பற்றி அடுத்த முறை உங்களுக்கு எழுதுகிறேன்.
 

-ஏபிஎன் இண்டர்நேஷனல் நியூஸ் புல்லட்டின்,  மே 26, 1964.

முந்தைய பகுதி:

எதிர்பாராத கண்ணீர்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 25.



 

Next Story

எதிர்பாராத கண்ணீர்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 25.

Published on 27/09/2019 | Edited on 27/09/2019

எனது நூல்கள், கவிதைகள் மற்றும் தொகுப்புகளிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டு விமானத்திலும், காரிலும், நடந்தும் சிலி முழுவதையும் சுற்றி பிரச்சாரம் செய்து வந்தேன். செப்டம்பரில் நாங்கள் ஒரு புதிய ஜனாதிபதியை பெறப் போகிறோம். அத்துடன் பல மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
 

தெருவில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு மிகப்பெரிய முரசொலி எங்களை அழைக்கிறது. உண்மையில் அங்கே முரசுகள் இல்லை. எனினும் ஒவ்வொருவரும் அதைக் கேட்டோம். ஒருவேளை அது முன்பொரு காலத்தில் அரவ்க்கா இன மக்கள் தங்கள் மீது படையெடுத்து வந்தவர்களுக்கு எதிராக ஒலித்த முரசின் ஓசையாக இருக்கலாம். எங்களை போர்க்களத்திற்கு அழைத்தது அவர்களது குரலாக இருக்கலாம்.
 

இன்றைக்கு அந்தப் போராட்டமானது நில உடமையாளர்களுக்கும் ஏகாதிபத்தியவாதிகளுக்கும் இதர அனைத்து பிற்போக்கு சக்திகளுக்கும் எதிராக தொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக எனது தேசத்தின் அரசியல் வாழ்வை சூறையாடி அடிமைப்படுத்தியிருப்பது இவர்கள்தானே?

paththirikaiyalar pablo neruda part 25

நான் எமது வேட்பாளர் டாக்டர் அலண்டேவுடன், மெகல்லன் ஜலசந்தியை நோக்கி பரந்து கொண்டிருக்கிறேன். விமானத்திற்கு கீழே, மிக வேகமாக ஓடி மறையும் பள்ளத்தாக்குகள், அற்புதமாக வளர்ந்து கிடக்கும் கோதுமை வயல்கள், கொத்து கொத்தாய் காய்த்துத் தொங்கும் திராட்சைத் தோட்டங்கள்.  நாங்கள் மிகவும் கடினமான சமவெளிப் பகுதியை, தலை சுற்றும் உயரத்தில் அமர்ந்து கொண்டு கடந்து சென்றோம். வழியில் சக்திமிக்க எரிமலைகளான லைமா, வில்லாரிகா, ஷில்லான் ஆகியவை அகன்ற வாயுடன் உயர்ந்து நின்று புன்னகைத்தன. திடீரென்று பனிமூடிய மலைச்சிகரங்களை கண்ணுற்றோம். ஓசோர்னோ, பண்டியாகுடோ மற்றும் கார்கோவடோ ஆகிய பனிச்சிகரங்களையும்,  கடல் போல விரிந்து கிடக்கும் மலைத்தொடரின் எழிலையும் கண்டோம். தனித்தன்மை வாய்ந்த இந்த இடங்களையெல்லாம் எங்கள் விமானம் கண்மூடித் திறப்பதற்குள் கடந்து சென்றது. கீழே தெரிந்த நூற்றுக்கணக்கான பனிச்சிகரங்கள் வெள்ளி ரிப்பன்களைப் போல காட்சியளித்தன. அமெரிக்கக் கண்டத்தின் தென்கோடி பிரதேசம் மாபெரும் அழகும் வனப்பும் நிறைந்த, அழகின் மர்மங்கள் நிறைந்த பிரதேசமாக காட்சியளிக்கிறது!
 

புத்தம் புதிய நீல வண்ண மலைகளின் மீது வெள்ளை நிற பதாகையாக பனி போர்த்தியிருக்கிறது. எண்ணற்ற தீவுக் கூட்டத்தின் கரைகளில் படிந்துள்ள கடல் நுரைகளில் பட்டு சூரிய ஒளி மின்னுகிறது. மலைகளின் இதய பகுதிகளில் ஆழமாக வெட்டி விட்டது போன்ற கடற்கால்கள்...
 

விரைவிலேயே எங்களது கவனம் படகோனியாவின் கடினமான எதார்த்தத்தை நோக்கித் திரும்பியது. மக்கள் எங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். மாபெரும் மக்கள் கூட்டம் எங்களை வரவேற்ற விமான நிலையத்தில் துவங்கி, எல்லா இடங்களிலும் நாங்கள் பேசினோம். உலகின் தொலைதூர நகரங்களின் இருப்பிடமான மெகல்லன் ஜலசந்தி முழுவதும் வீதிகளில் நடந்தோம். பிறகு நாங்கள் மிகப்பெரும் எஸ்டேட்டுகளுக்கு சென்றோம். இந்த எஸ்ட்டேட்டுகளில் மிகச் சிறியதே சுமார் 3 அல்லது 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு கொண்டது என்றால் மற்றவற்றின் பரப்பை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இங்கு ஆயிரக்கணக்கில் ஏன் லட்சக்கணக்கில் கூட செம்மறி ஆடுகள் மேய்கின்றன. அவை எப்போதும் எண்ணப்படுவது இல்லை. ஒரு எஸ்டேட்டில் முழு வீச்சில் ஆடு வெட்டும் பணி நடந்து கொண்டிருந்த போது நாங்கள் அங்கு சென்றோம். 140 ஆயிரம் ஆடுகள் ஏற்கெனவே வெட்டப்பட்டிருந்தன. ஆனால் அந்த கம்பெனியின் லாபத்தோடு ஒப்பிடும் போது, இந்த எண்ணிக்கை குறைவானதே.

paththirikaiyalar pablo neruda part 25

இந்த நிறுவனம் மெகல்லன் ஜலசந்தி சுரண்டல் கழகம் என்றே பெயர் கொண்டது. இப்பிராந்தியத்தில் பிரபலமானது. கடந்த 50 ஆண்டுகளாக மெகல்லன் ஜலசந்தி மக்களையும், அவர்களுடைய ஆடுகளையும் ஒட்டச் சுரண்டிய இந்த கம்பெனி, தனது பெயரில் இருக்கும் சுரண்டல் என்ற வார்த்தையை திடீரென்று நீக்கிக் கொண்டது. வார்த்தை மட்டும்தான் நீங்கியது. சுரண்டல் அப்படியே தொடர்கிறது.
 

பெரும் அளவிலான பேல்கள் ஆட்டுத்தோல் லண்டனில் மார்க்கெட் செய்யப்பட்டது. இறைச்சி பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு கப்பலில் ஏற்றப்பட்டது.  பன்டா அரினாஸ் பகுதியில் செம்மறி ஆட்டுக் குட்டிகளே இல்லாமல் செய்தது இந்தக் கம்பெனி. உள்ளூர் சந்தையிலிருந்து செம்மறி ஆட்டு இறைச்சி முற்றிலும் மறைந்து விட்டது. அப்படியே கிடைத்தாலும் ஏழைகள் வாங்க முடியாத அளவிற்கு இருந்தது.
 

அலெண்டே தனது பிரச்சாரத்தில், இந்த அமைப்பு முறையை மாற்றுவது என்று தீர்க்கமாக உறுதியேற்றார்.
 

நாங்கள் வென்றால் அதன் பின்னர் அமையப் போகும் மக்களின் அரசாங்கம் சிலி தேசத்தின் மக்களுக்கு நிலங்களை விநியோகிக்கும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை அங்கே கூடியிருந்த ஒட்டுமொத்த மக்களிடையேயும், மேற்படி பிரிட்டிஷ் கம்பெனியின் மேலாளர் முன்பும் வெளியிட்டோம். அப்போது அந்த மக்களின் சோகமான கண்களில் ஒரு நம்பிக்கை ஒளி பிறந்ததை உணர்ந்தோம். சிலியின் இந்த மாபெரும் மாகாணத்தின் மக்கள் (இம்மாகாணம் சில ஐரோப்பிய நாடுகளை விட பெரியது) நீண்ட காலமாக ஒடுக்குமுறையின் கீழ் வாழ்கிறார்கள்.

paththirikaiyalar pablo neruda part 25


எங்களது பயணத்தோடு, பெரும்பான்மை மக்கள் செல்வாக்குடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சோசலி்ஸ்டான பன்டா அரினாஸ் மாநகர மேயரும் வந்தார். சாலைகளில் ஆடு மேய்ப்பர்கள் எங்களை கடந்து சென்றார்கள். ஒவ்வொருவரும் ஒரு குதிரையில் சென்றார்கள். கையில் மற்றொரு குதிரையை கட்டி இழுத்துச் சென்றார்கள். இரண்டாவது சென்ற குதிரையில் அந்தத் தொழிலாளர்களின் கருவிகள், பூட்ஸ் செருப்புகள், சமையல் பொருட்கள் போன்றவற்றை கட்டியிருந்தார்கள்.
 

 இந்த பரந்து விரிந்த பள்ளத்தாக்குகளில் நீண்ட காலமாகவே ஆடு மேய்ப்பர்கள் வாழ்கிறார்கள். அவர்களைச் சுற்றி அவர்கள் வளர்க்கும் செம்மறி ஆடுகள் மட்டுமே தெரிகின்றன.
 

மிக நீண்ட குளிர்காலத்தின் போது (உலகிலேயே நீண்ட குளிர் காலம் நிலவும் பகுதி இதுதான்) அவர்கள் அடிக்கடி வெளியே சென்று விடுவது உண்டு. தானும் நீண்ட ஆண்டுகளாக ஒரு ஆடு மேய்ப்பராக இருந்ததாக மேயர் கூறினார். அவர் வேலை செய்த இடத்தில் அவரது மேலதிகாரிகள் இவரை எப்போதும் கடுமையான பணிகளுக்கு உட்படுத்த முயற்சித்தார்கள். ஏனென்றால், இவரது கலக குணத்தை பார்த்து அவர்கள் அஞ்சினார்கள். அவர் தனது செம்மறி ஆடுகளோடு வெளிப்பகுதிகளில் படுத்துத் தூங்குவார். வெப்பநிலை மைனஸ் 30 டிகிரிக்கும் கீழே செல்லும்போது கூட இது போன்று நடக்கும். பல தருணங்களில் அவரது கண் இமைகளில் பனி மூடியிருக்கும். மிகக் கடுமையான சூழல்களில் வாழ்ந்த அவர் முடிவற்ற தனிமையிலும் வாடியவர்.
 

ஆனால் இப்போது ஆடு வெட்டும் காலம் உச்சத்தில் இருக்கிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை சந்திக்க நாங்கள் விரும்பினோம். அமைதியான புரட்சிக்கு ஆதரவு அளிக்கும் வேட்பாளரை அவர்களுக்கு அறிமுகப்படுத்த விழைந்தோம். அலெண்டேவுக்கு வாக்களிப்பதன் மூலம் அவர்களது வாழ்வில் மாற்றம் வரும் என்பதை விளக்க நாங்கள் முயற்சிப்போம். அதன் பின்னர் நான் எனது கவிதைகளைப் பாடுவேன்.
 

நாங்கள் அந்தப் பெரிய கூடாரத்திற்குள் நுழைந்தோம். அங்கே நூற்றுக்கணக்கான ஆடு வெட்டும் தொழிலாளர்கள் இருந்தார்கள். ஒவ்வொருவரும் ஒரு செம்மறி ஆட்டை வைத்திருந்தார்கள். புராணங்களில் வரும் கதாநாயகர்களைப் போல அவர்கள் காணப்பட்டார்கள். செம்மறி ஆட்டின் கழுத்தைச் சுற்றி இடது கையை வைத்துக் கொண்டும், வலது கையால் அந்த ஆட்டின் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி அதன் பின்னர் உயிரிழந்த ஆட்டின் உடலை கீழே போட்டு தோலை உரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். கடைசியில் ஆட்டுக்குட்டி தனது முழுத்தோலையும் இழந்தது. தோல் இல்லாத நிர்வாண உடலாக காட்சியளித்தது.

paththirikaiyalar pablo neruda part 25

இதைப் பார்ப்பது மிகவும் கடினமானது. இந்த வேலை மிக வேகமாகவும் விரைவாகவும் நடக்கும். அந்தத் தொழிலாளரின் வியர்வை துளிகள் தனது கையில் ஏந்தியுள்ள ஆட்டுக்குட்டியின் மீது விழும். என்னுடன் வந்தவர்கள் இமை மூடாமல் அந்தக் காட்சிகளை கண்டார்கள். அவர்களது கண்கள் குளமாயின. முகங்களில் தூசி படிந்தது. ஆடு வெட்டும் அந்தக் கூடத்திற்குள் வீசும் காற்றின் வாடை மிக மோசமானது. ஆட்டுக் குட்டியின் தோலில் இருந்து எழும் நாற்றமும் வியர்வையின் நாற்றமும் அங்கே வியாபித்திருந்தது.

 

அந்தக் கம்பெனி தொழிலாளர்களுக்கு அவர்களது வியர்வை முழுவதும் ஆவியாகும் வரை வேலைவாங்கிக் கொண்டு மிகச் சிறிய அளவு கூலி கொடுத்தது. கடைசியில் அவர்களுக்கு சற்று ஓய்வு கிடைத்தது. அந்தக் கூடத்தின் நடுவில் எங்களைச் சுற்றி நின்றார்கள். இந்த தருணம் என்னைப் பொறுத்தவரை மிகவும் பொறுப்புமிக்க தருணம். இந்த தொலைதூர இடத்தில், ஆட்டுத் தோலின் நாற்றத்திற்குள்ளும் தூசி படிந்த கூடாரத்திற்குள்ளும் வேலை செய்கிற அந்த மக்களுக்காக எனது கவிதையை வாசிக்கும் தருணம். ஒரு வேளை அவர்கள் காட்டுத்தனமானவர்களாக நாகரீகமற்றவர்களாக இருந்தால் என்ன செய்வது? அமைதியாக கூடியிருந்த அந்தக் கூட்டத்தினிடையே கவிதை வாசிப்பது, அவர்களுக்கு என்னை புரிந்து கொள்ள வைக்குமா? எனது எண்ணங்கள் மோதிக் கொண்டிருந்தன.

 

கடைசியில் நான் வாசிக்க ஆரம்பித்தேன். கியூபாவைப் பற்றிய, செவ்விந்தியர்களைப் பற்றிய, உண்மையைப் பற்றிய, மகிழ்ச்சியைப் பற்றிய, காற்றைப் பற்றிய, துயரத்தைப் பற்றிய கவிதைகளை நான் வாசித்தேன். கடினமான உழைப்பால் களைத்துப் போயிருந்த அந்த மக்கள் முன்பு இது நடந்தது.

 

கடைசியில் எனது கவிதைகள் சொந்த தேசத்தைப் பற்றி கூறியது. அப்போது எதிர்பாராத கண்ணீர் துளிகள், ஒட்டிப் போயிருந்த அவர்களது கன்னங்களில் வழிந்ததைக் கண்டேன். படகோனிய பிரதேசத்தின் குளிர் காற்றில் அந்தக் கண்ணீர் பளிச்சென்று தெரிந்தது. சோக கீதங்களோ, கடும் புயலோ கூட இப்படிப்பட்ட கண்ணீரை அந்த மக்களிடமிருந்து வெளிக்கொண்டு வந்திருக்கும் என்று நான் கருதவில்லை. அவர்கள் என்னைப் பாராட்டி கை தட்டினார்கள். என்னை வாரி அணைத்துக் கொண்டார்கள். ஒரு கடினமான தேர்வில் நான் வெற்றி பெற்றதை அப்போதுதான் உணர்ந்தேன்.

 

மீண்டும் சாலைக்கு வந்தோம். எல்லையற்ற நிலப்பகுதியை பார்த்தோம். உலகின் முடிவில் இருக்கின்ற சமவெளிப் பகுதியை, பனி மூடிய மலைகளை தாண்டி திரும்பினோம். மிக மிக நீண்ட கண்ணுக்குத் தெரியாத கம்பிவேலி இருந்தது. அது என்ன? அது எதைப் பாதுகாக்கிறது? விண்வெளியையா? உலகின் செல்வத்தையா?

paththirikaiyalar pablo neruda part 25


 

இந்தப் பிராந்தியத்தில் முதன்முதலில் நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தவர்கள் வேலி போட்டிருந்தார்கள். படகோனியாவின் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களே அவர்கள். பல லட்சக்கணக்கான மக்கள் வாழ போதுமான இந்தப் பிரதேசத்திற்கு அவர்களே இந்தப் பெயரை இட்டார்கள். ஆனால் முதலாளித்துவ சமூகத்தின் கொடூர மனிதர்களால் ஊடுருவப்பட்ட எந்த இடமும் உருப்பட்டதாக சரித்திரமில்லை. அவர்கள் இங்கே புதிய ரகமான வேட்டையை துவக்கினார்கள். வன்முறையும் கொலை பாதகங்களும் தெரியாத இந்த மக்களிடையே, கெய்ன் என்னும் மனிதன் பிறக்காத இந்த பூமியில் அந்த வேட்டை நடந்தது. படகோனிய இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட வேட்டை மிக விரைவிலேயே அந்த இனத்தை துண்டாடியது.
 

இந்த வேட்டையில் அவர்கள் தங்களது காதுகளை இழந்தார்கள். பின்னர் அவர்களது தலைகளை குறி வைத்து ஏராளமான பணம் செலவழிக்கப்பட்டது.
 

இன்றைய நிலைமையில் எந்தவொரு படகோனியனும் இங்கே உயிரோடு இருப்பார்கள் என்று நான் கருதவில்லை. காற்று மட்டும் அதன் துருவப் பாடலை இசைத்துக் கொண்டிருக்கிறது. மரங்களை வளையச் செய்தும் ஒடித்தும் விளையாடுகிறது. செம்மறி ஆட்டு குட்டிகளின் தோலும் இறைச்சியும் வெளிநாடுகளுக்கு கப்பலேற்றப்படுவதை வரலாற்றின் இந்த இருட்டுப் பிரதேசத்திலிருந்து எந்தக் கண்களும் பார்க்க முடியாது.
 

எவராலும் கவனிக்கப்படாத இந்த மக்களுக்காக ஒரு புதிய உணர்வை உருவாக்க நாங்கள் முயற்சிக்கிறோம். அதில் உறுதியாக வெல்வோம்.

-இழ்வெஸ்தியா, பிப்ரவரி 20, 1964.



முந்தைய பகுதி:
இப்போது இங்கே கோடைக்காலம்!- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 24.