Skip to main content

பம்பரத் தாத்தா வர்றாருடோய்... - சிறுவர்களைக் கவர்ந்த வைகோ! - கடந்த காலத் தேர்தல் கதைகள் #3

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

வைகோ... இன்று வரை இந்திய நாடாளுமன்றம் கண்டுள்ள  முக்கியமான, சிறந்த உறுப்பினர்களில் ஒருவர். அவரது கூட்டணி மாற்றங்கள், கட்சி செயல்பாடுகளில் விமர்சனம் உள்ளவர்கள் கூட அவரது நாடாளுமன்ற செயல்பாடுகளை பாராட்டுவார்கள். அவர் கடைசியாக நாடாளுமன்றம் சென்று பதினைந்து ஆண்டுகளாகிவிட்டாலும் இன்றும் அவரது செயல்பாடுகள் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் மனதில் இடம் பெற்றிருக்கின்றன. இப்படிப்பட்ட பார்லியமென்டேரியனான வைகோ, இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. திமுக கூட்டணியில் மதிமுக ஈரோட்டில் மட்டுமே போட்டியிடுகிறது. மதிமுகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதியளித்துள்ளது திமுக. வைகோ மீண்டும் நாடாளுமன்றம் செல்லவேண்டும் என்பது மதிமுக தொண்டர்களையும் தாண்டிய பலரின் எதிர்பார்ப்பு. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் வைகோ. தமிழகம் முழுவதும் சென்று கூட்டணிக்கட்சிகளுக்கும் பிரச்சாரம் செய்தார். 2014இல் அவரது பிரச்சாரம் எப்படி இருந்தது... கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

 

vaikoம.தி.மு.க. பொதுச் செயலாளரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான வைகோ, தானே நேரடியாகச் சென்று மக்களைச் சந்தித்து வாக்கு கேட்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார். விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட சில கிராமங்களில் அப்போது அவர் பிரச்சாரம் செய்தபோது உடன் இருந்தோம். குண்டும் குழியுமான சாலைகளிலும் கூட அவரது பிரச்சார வேன் அசராமல் பயணித்தது. ‘ஏழைகளின் கட்சி’ என அவரே சொல்வது போல, அந்த வேனில் படுக்கை வசதியோ, டாய்லெட் வசதியோ எதுவும் இல்லை. இயற்கை உபாதைகளுக்கும் கூட, சாதாரண கிராமவாசி போல  முட்செடிகள் பக்கம்  அவர் ஒதுங்குகினார். 

 

vaikoவைகோ செல்லும் ஒவ்வொரு பிரச்சார ஸ்பாட்டிலும் டிரம்ஸ் அடிக்கிறார்கள். 500 வாலா பட்டாசு வெடிக்கிறார்கள். ஊர்த்தலைவரோ, கூட்டணி கட்சி பொறுப்பாளரோ யாராவது ஓரிருவர் சால்வை அணிவிக்கிறார்கள். மற்றபடி, பெரிய அளவிலெல்லாம் ஆட்களைத் திரட்டவில்லை. "பம்பரத் தாத்தா வர்றாரு டோய்..'' என்று பள்ளிச் சிறுவர்கள் பாசமாக ஓடி வந்தார்கள். யதார்த்தமான சூழலில், மெல்லிய குரலில் வெகு இயல்பாகப் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். கூட்டணி கட்சிகளின் பெயரைச் சொல்லும் போது, 'எனது அருமை சகோதரர் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தே.மு.தி.க. ஆதரவோடு..' என்பதை அழுத்திச் சொல்கிறார். பத்து பேரோ, இருபது பேரோ நிற்கும் இடங்களில் 1 நிமிடத்துக்கும் குறைவாக பேச்சு,  ஐம்பது பேருக்கும் மேல் கூடிவிட்டால், 2 நிமிடங்கள் பேச்சு, எண்ணிக்கை நூறைத் தாண்டிவிட்டால், 8 நிமிடங்கள் வரை பேசினார். 

எழுச்சியே இல்லாத கிராமங்களில்  “தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது; மோடி பிரதமர் ஆவது உறுதி" என்ற சென்ற தேர்தலின் வழக்கமான பிரச்சாரத்தை அவர் மேற்கொள்ளவில்லை. காங்கிரஸ் எதிர்ப்பையும்கூட தீவிரமாகக் காட்டாமல், "நான் அரசியல் கட்சிகளை இப்போது விமர்சிக்க விரும்பவில்லை.." என்று தவிர்த்துவிட்டார். வாக்களிக்கும் வயதினரைக் காட்டிலும் சிறுவர் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களில் "நான் குழந்தைகளை ரொம்ப பிரியமா நினைக்கிறவன்.. பம்பரம் பிள்ளைகள் விளையாடுறதுன்னு தேர்ந்தெடுத்தேன். இளம் பிள்ளைகள் இங்கே ரொம்பப் பேரு இருக்காங்க.. நீங்கதான் அப்பா, அம்மாகிட்ட சொல்லணும்..'' என்றார். எதிர்ப்படும் பெண்களிடம் "நான் தாய்மார்களை தெய்வமா நினைக்கிறவன்.. சாராயக் கடை, மதுக் கடைகளுக்கு எதிரா வெயில்லயும், மழையிலயும் 1500 கி.மீ. நடந்திருக்கேன்.. நீங்க டிவியில பார்த்திருப்பீங்க..'' என்று உணர்வுப்பூர்வமாகப் பேசினார். 

 

vaikoஅப்போது அங்கிருந்த நந்திரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவர் நம்மிடம், "விஜயகாந்தை பாருங்க.. முக்கியமான ஊருல மட்டும் பிரச்சாரம் பண்ணுறாரு.. எம்புட்டு கூட்டம் கூடுது.. டி.வி.ல பார்க்கிறோம்ல.. நறுக்குன்னு நாலு இடத்துல பேசிட்டு போறத விட்டுட்டு.. ஆளுங்க  இல்லாத நேரத்துல..  பட்டிக்காட்டுல வந்து பிரச்சாரம் பண்ணி.. உடம்பை கெடுத்துக்கிட்டு.. டயத்தை வேஸ்ட் பண்ணுறாரு..'' என்றார் வைகோ மீது உண்மையான அக்கறை உள்ளவராக. 

"ஓட்டு யாருக்கு?'’ என்ற நமது கேள்விக்கு மீனாட்சிபுரம் கருத்தம்மா "இவரு பம்பரத்துக்கு போடச் சொல்லுறாரு. இனிமேதான் யோசிக்கணும், யாருக்கு போடறதுன்னு?'' என்று இழுக்க.. அவரது பக்கத்து வீட்டுக்காரரான முத்து மாரியம்மாளோ "என் புள்ளைக்கு மஞ்சள் காமாலை ஊசி போட்டாரு வைகோ.. அவருக்குத்தான் என் ஓட்டு..'' என்றார்.   

சின்னமூப்பன்பட்டி என்ற ஊரில் அந்த இரவு நேரத்திலும் ஓரளவுக்கு மக்கள் கூடியிருந்தார்கள். ஆரத்தி எடுக்க பெண்கள் ஆர்வம் காட்டினார்கள். கூட்டத்தைப் பார்த்து குஷியாகி "இது மாதிரி எந்த ஊருலயும் நான் கூட்டத்தைப் பார்க்கல.. நான் வெளிப்படையா பேசுறவன்.. என்கிட்ட ஒளிவு மறைவு கிடையாது..  மனசுல நினைச்சதை சொல்லுறவன்..'' என்ற வைகோ, "என்னைப் பத்தி நானே சொல்லிக்கிறதா?'' என்று சங்கோஜப்பட்டவாறே சில விஷயங்களை மக்கள் முன் வைத்தார் - "உங்க மனசுல வைகோ ரொம்ப நல்லவன், நம்மள மாதிரி ஏழைபாழைகள் சொன்னா உடனே செய்வான்ங்கிற நம்பிக்கை இருக்கு.. வெளிநாட்டுல யாராச்சும் விபத்துல மாட்டிக்கிட்டா.. ஏய் வைகோ வுக்கு ஒரு போனைப் போடுங்கிறாங்க.. நான் எந்தப் பதவியிலும் இல்லை. ஆனா.. எப்படியாவது பிரதமர்ட்டயோ, யார்ட்டயோ சொல்லி, அவங்கள காப்பாற்ற முயற்சி பண்ணுறேன். உலகத்துல உள்ள எல்லா தமிழர் களும் நமக்கு ஒருத்தன் இருக் கான்னு நினைக்கிறாங்க இல்லியா?"  

அதற்கு முந்திய தேர்தல் தோல்வி ஆறாத ரணமாக உள்ளுக்குள் இருந்ததோ என்னவோ?  பிரச்சாரத்தின்போது தனது உள்ளக் குமுறலை அடிக்கடி வெளிப்படுத்தினார் வைகோ - "போன எலக்ஷன்ல நின்னேன்.. வீட்டுக்கு வீடு பணம் கொடுத்தாங்க. பணத்துக்காக ஓட்டு போட்டு போன தடவை என்னை தோற்கடிச்சீங்க. இந்த தேர்தல்ல அதைவிட அதிக பணம் கொடுக்கப் போறாங்க. உங்க ஓட்டை விலைக்கு வாங்கப் போறாங்க. ஒரு ஓட்டுக்கு ஆயிரம், ரெண்டாயிரம்னு கொடுக்கப் போறாங்க. பணம் வீடு வீடா வரப் போகுது. வந்திரும்.. அதை தடுக்க முடியாது. அதனால.. நீங்க நல்லா யோசனை பண்ணி, எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்'' என்று உருக்கமாகப் பேசினார். 

இடையில் ஒரு முறை பிரச்சாரத்துக்காக விருதுநகரிலிருந்து அருப்புக்கோட்டைக்கு வைகோ சென்றபோது, அவருடன் வந்த கட்சியினரின் வாகனத்தை பெரிய வள்ளிக்குளம் என்ற இடத்தில் சோதனை செய்ய முற்பட்டது பறக்கும்படை. வாக்குவாதம் உண்டாகி "காரை விட்டு கீழே இறங்குங்கடா'' என்று போலீஸ்  அக்கட்சியினரிடம் ஒருமையில் பேசும் அளவுக்கானது. போலீசாருக்கும் தொண்டர்களுக்குமிடையே பிரச்சினை வலுத்ததைக் கண்ட வைகோ, வேனிலிருந்து கீழே இறங்கி "எதற்கு அநாகரிகமாக நடந்து கொள்கின்றீர்கள்? மரியாதைக் குறைவாக பேசுகின்றீர்கள்?" என்று போலீஸாரிடம் நியாயம் கேட்க, போலீசாரும் "நாங்க என்ன மரியாதைக் குறைவாக நடந்துகொண்டோம்?'' என்று வைகோவின் முகத்துக்கு நேராகக் கேட்டுவிட்டனர். உஷ்ணமான தொண்டர்கள் "தலைவருக்கே அவமரியாதையா?" என்று குரல் எழுப்ப, வைகோவும் "நாங்க கொண்டு வந்த சூட்கேஸை நல்லா செக் பண்ணிக்கோங்க...'' என்று திறந்து காட்டி, கட்சியினருடன் சாலையில் அமர்ந்துவிட்டார். இந்த மறியலால் விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் அப்போது சுமார் 30 நிமிடங்கள் வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த விவகாரம் நடக்கும் முன்பு ஒருமுறை "எங்களை செக் பண்ணுறீங்கள்ல... முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஹெலிகாப்டரை செக் பண்ணுவீங்களா?" என்று தனது வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது வைகோ பேசியதும், அதற்கு தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் "முதலமைச்சரின் ஹெலிகாப்டர் என்றாலும் சோதனையிடுவோம்'’ என்று சொல்லியதும், அ.தி.மு.க. தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்தே, வைகோவின் பிரச்சார பயணத்தில் போலீஸ் இத்தனை கெடுபிடி காட்டியதாம். இப்போது ஜெயலலிதா இல்லை, அதிமுகவும் ஒன்றாக இல்லை. மதிமுக, திமுகவுடன் நிற்கிறது.

சென்ற தேர்தல் பிரச்சாரத்தில் தனது சாதனைகளை மட்டுமல்ல.. வேதனையையும் முன் வைத்தார் வைகோ! எவ்விதச் சலனமுமின்றி கேட்டு வைத்தார்கள் வாக்காளர்கள். ஆனால், மீண்டும் அவருக்கு தோல்வியையே பரிசளித்தார்கள். இந்தத் தேர்தலில், கடந்த இரண்டு முறையாக தன்னை எதிர்த்து நின்று, அதில் ஒரு முறை வென்றும்விட்ட காங்கிரசின் மாணிக் தாகூருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வைகோ. ஆரம்பத்தில் சொன்னதுதான், அவரது கூட்டணி மாற்றங்களில் குறை காணலாம். ஆனால், இன்று வரை இந்திய நாடாளுமன்றம் கண்டுள்ள  முக்கியமான, சிறந்த உறுப்பினர்களில் ஒருவர்.


-சி.என்.இராமகிருஷ்ணன்

படம் : அசோக்

Next Story

‘பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு உதவித்தொகை; ஆனால் ஒரு கண்டிஷன்’ - சந்திரபாபு நாயுடு வாக்குறுதி

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Chandrababu Naidu's promise Stipend for Backward People at lok sabha election campaign

மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

அதே வேளையில், ஆந்திரப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தலும் நடைபெறவிருக்கிறது. இதனால், அந்த மாநிலங்களிலும் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அதன்படி, நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வருகிற மே 13ஆம் தேதி அன்று மக்களவைத் தேர்தலோடு சட்டசபைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கிறது.

175 சட்டசபை தொகுதிகளும், 25 மக்களவைத் தொகுதிகளையும் கொண்ட ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அனைத்து இடத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதில், பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 6 இடங்களிலும் போட்டியிட உள்ளது. மேலும், வாக்காளர்களைக் கவரும் விதமாக, அங்கு போட்டியிடும் கட்சிகள் வித விதமாக வாக்குறுதிகளை அளித்து வருகின்றன.

இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது குறித்து சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது, “பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக உயிர் துறந்த மகாத்மா ஜோதிராவ் பூலேவின் 197வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். ஜோதிராவ் பூலேவின் கனவுகள் நனவாக, தெலுங்கு தேசக் கட்சி ஆட்சி அமைந்ததும், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவோம். அதில், 50 வயது நிரம்பிய பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் மாதம் தோறும் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும்” என்று கூறினார். 

இவர் ஏற்கனவே, ஆந்திர பிரதேசத்தில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி அமைந்தால், தரமானது மட்டுமன்றி, விலை குறைவாகவும் மதுபானம் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

“இந்தியாவில் மதிக்கப்படும் தலைவராக உயர்ந்திருக்கிறார் திருமாவளவன்”- வைகோ

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Thirumavalavan has risen to become a respected leader in India says Vaiko

அரியலூர் பேருந்து நிலையம் அருகே விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டி  மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பிரச்சாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்  அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயம்கொண்டான் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது பேசிய வைகோ, “வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய தேர்தல். இந்தியா தமிழ்நாடு எந்த திசையில் செல்லும் என்பதை முடிவு செய்யும் தேர்தல். ஜனநாயகத்திற்கும் சர்வாதிகாரத்திற்கும் இடையேயான போர் இந்த தேர்தல். பேசுகின்ற இடங்களில் லட்சக்கணக்கான மக்களை கவர்ந்திழுக்க கூடிய எனது சகோதரருக்கு வாக்கு சேகரிக்க விரும்பி வந்துள்ளேன். தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு வட நாட்டுப்பெயர்களை சூட்டுகின்ற நிலையில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டிய மாவீரர் தான் திருமாவளவன்.

திராவிட இயக்கத்தை அழிப்பேன் என்று பிரதமர் தனது பதவியின் மதிப்பறியாது பேசுகிறார். பிரதமரே இது திராவிட இயக்க பூமி, அதன் தலைவர்களாலும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் பாடுபட்ட வளர்த்த இயக்கம் தான். மோடி தலைமையில் நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி போகிறது. இந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் நாடாளுமன்ற‌ முறையை மாற்றிவிட்டு ஜனாதிபதி ஆட்சி முறையை கொண்டு வந்து, ஜனாதிபதி ஆகலாம் என்று மனப்பால் குடித்துக்கொண்டு இருக்கிறார். திராவிட இயக்கம் உள்ளவரை அது நடக்காது. நான் திமுக-வில் இருந்து வெளியேறி இருந்தாலும் மீண்டும் குடும்பத்தில் இணைத்துள்ளேன். இன்று இந்தியாவிற்கே வழிகாட்டும் நிலையில் மு‌க‌‌ ஸ்டாலின் விளங்குகிறார்.

டெல்லி மும்பை கூட்டங்களில் அனைத்து தலைவர்களும் ஸ்டாலினுடன் வந்து புகைப்படம் எடுக்குமளவுக்கு புகழ்பெற்றுள்ளார். குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டத்தை கொண்டுவந்தவர் திராவிட மாடலின் முதல்வர். இத்திட்டத்தை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவதைத் தாண்டி‌ கனடா போன்ற  பல நாடுகளும் பின்பற்றுகின்றனர். உலகிற்கு வழிகாட்டும் தகுதியை ஸ்டாலின் பெற்றுள்ளார் என்பதை எண்ணி மகிழ்கிறேன். தாய்க்குலங்களை தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறார் முதல்வர். இந்த திட்டங்களுக்கு பக்கபலமாக இருப்பவர் தொல்.திருமாவளவன்.

அரியலூர் மாவட்டத்தில் தான் மொழிக்காக கீழப்பலூர் சின்னசாமி மரணமடைந்தார். மேலும், மாணவி அனிதா அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வால் மரணமடைந்தார். இந்தியாவில் மதிக்கப்படும் தலைவராக உயர்ந்திருக்கிறார். வட நாட்டு தலைவர்களும் அவரை அடையாளம் கண்டுள்ளனர். அவர் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். திராவிட இயக்கத்தின் பக்கபலமாக இருக்க வேண்டும். மக்களை ஒற்றுமைப்படுத்துபவர் திருமாவளவன். இங்கே வந்து மோடி, நட்டாக்கள் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்கள். இந்தியில் எழுதி வைத்து பாதி திருக்குறளை பேசி எங்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள்.

ஆர்.என்.ரவி என்ற உளறுவாயன் ஆளுநர் உரையில் விஷத்தை கக்கி வருகிறார். அண்ணா, பெரியார், காமராஜர் உள்ளிட்டோர் பெயர்களை வாசிக்க மறுத்துவிட்டார். 5 மாடி ஹோட்டல் போல இருக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை சாவர்க்கர் பிறந்தநாளில் திறந்துவைத்தார் மோடி. கோட்சேயின் கூட்டம் பகிரங்கமாக உலவுகின்றனர் இன்று. நமது மொழிக்கு மோடியின் வடிவில் ஆபத்து வருகிறது. ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் என்று மு.க.ஸ்டாலின் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன். தமிழ்நாடு இந்துத்துவ சக்திகளுக்கு மரண அடி கொடுக்கும்” என்றார்.