Skip to main content

"என் குளியலறைத் தொட்டியில் இளம் சூடான வெந்நீரோடு என் இரையின் ரத்தத்தையும் சேர்த்து .." - லதா சரவணன் எழுதும்' அந்த மைக்ரோ நொடிகள்' #3

 

x

 

இருட்டு முழு இருட்டு அதன் அடர்த்தியை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? முழுநீள கண்ணாடிக் குவளையில் திரவமாய் அதை பருகியிருக்கிறீர்களா? இருளின் வாய் திறந்து வெளிச்சப்புற்களை நனைத்து அன்னையின் கருப்பை வாயை சிதைத்த போதே அவள் என்னை கொன்றிருந்தால் இந்த இருளின் ஆசை ஒருவேளை அடங்கியிருக்குமோ என்னவோ? மீண்டும், மீண்டும் அந்த இருள் படுக்கையின் ரத்தச் சேற்றில் புதைந்து கொள்ளவே, நான் வாழ ஆசைப்படுகிறேன். பொன்னிறமாய் வறுக்கப்பட்ட கோதுமை ரொட்டியின் மேல் வெண்ணையும் ஜாமையும் இணைத்து உரசிக்கொண்டு இருக்கும் இதே கத்திதான் பக்கத்து அறையிருட்டில் ரோஜா நிற ஈறுகளுக்குள் புதைந்திருந்த அவளின் வெண்ணிற பற்களை மோடாவின் மேல் உள்ள கிண்ணத்தில் அடுக்கிவைக்க உதவியது.

 

சிவப்பு போதாத ரொட்டி சற்றுமுன்பு கிழித்த உதடுகளின் சாயம் போல வெளுத்திருக்க, அதை நான் அரைநிர்வாணத்தில் கமீஸின் மேற்பகுதியில் கைகளை பிணைத்திருந்த அவளின் உறைந்து கருப்படித்துப் போயிருந்த ரத்தத்தில் முக்கித் துடைத்தேன். இருட்டில் நசநசத்த வியர்வையோடு அவளின் முகம் முழுவதும் உறை ரத்தத்தின் கருநீலக்கோடுகள். நேற்றைய கோர சிரிப்பில் இருந்து நான் அவளைக் காத்திருக்கிறேன். இருளிலகில் அவளுக்கான இடத்தை கர்சீப் போடாமலேயே பிடித்துக் கொடுத்து இருக்கிறேன். இவள் யார்? என்ற கேள்வி முளைத்திருக்கும் உங்களில்... இதே அரையிருட்டில் அக்கறையாய் உடல் வெப்பம் அளக்க வந்தவள், அத்தோடு அவள் சென்றிருக்கலாம் கனத்த பர்ஸின் கரன்ஸிகளை மட்டும் களவாடியிருக்கலாம். ஆனால் காமம் சுழற்றிய கண்களோடு கூடவே சிரித்து தொலைத்துவிட்டாள்.

 

ஏனோ மற்ற ஜீவராசிகளுக்கு மறுக்கப்பட்டு மனிதனுக்கு மட்டும் கிட்டிய அந்த சிரிப்பு எனக்கு பிடிப்பதில்லை, மீண்டும் ஒருமுறை சிரிக்கச்சொல்லி அதை அழிக்கும்போது ஜிவ்வென்று பாதத்தில் இருந்து ரத்தம் சூடேறும் பாருங்கள் அந்த ஏற்றம் மதுவிலும், மாதுவிலும் கூட இல்லை. லீனாவைப் போல் இவள் அத்தனை சுவைக்கவில்லை, ஒரு இருள் கவிழ்ந்த நேரத்தில் கலவையான மணத்தை சுமந்த சப்வேயைக் கடக்கும்போது, கடவாய்ப்பற்கள் தெரியும் அளவிற்கு வெற்றிலைத் துப்பிய சுவற்றின் அழுக்கையும் பொருட்படுத்தாமல் அரைக்கண் மயக்கத்தில் அவனுடன் உரசிக்கொண்டு இருந்தாளே அந்த லீனா அவன் அப்படித்தான் அழைத்தான். 

 

்xி

 

ஆளில்லா தனிமையில் அவளின் உதட்டு வரிகளுக்குப் போட்டியாய் மிக மெல்லியதாய் எக்ஸ்ட்ரா வரிகளைப்போட நான் மறுநாள் முகம் மழிக்க காத்திருக்கும் துண்டு பிளேடு புண்ணியம் கட்டிக்கொண்டது. பீறிட்டு ஒழுகும் ரத்தத்தின் பாய்ச்சலில் இப்போது கொஞ்சம் அந்த மயக்கச்சிரிப்பை சிரியேன் என்று நான் கெஞ்சியதை அவள் காதில் வாங்கிக்கொள்ளவேயில்லை. அழுதுகொண்டே இருந்தாள்...ச்சீ என்று நகர்ந்து விட்டேன் நான். அந்த இரவே இன்னொரு ருசிபார்க்க இவள்.....! இந்த ருசியின் தீவிரம் எனக்குள் ஒட்டிக் கொண்ட தினங்களை நீங்கள் அறிய வேண்டாமா? பார்க்கும் இரையெல்லாம் விழுங்கும் பசி கொண்டவனில்லை நான், என் இரையின் இதழ்களின் புன்னகை எந்தளவிற்கு விரிகிறதோ அந்த அளவிற்கு என் ஆசையும் பசியும் விளையும். ஐந்து வயதில் பார்க்கின் இரும்பு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த அவள்தான் என் முதல் இரை, அவளின் அடக்கமாட்டா சிரிப்பு என் கண்களுக்குள் ஆசையின் பளபளப்பு. 

 

ஊஞ்சலை கவிழ்த்தேன் முன்புறம் கொட்டப்பட்டிருந்த சரளைக் கற்களுக்குள் அவள் விழுந்ததில் பற்கள் தெறித்து ரத்தம் வழிந்தது. இடைவெளி விட்ட வெள்ளை நிறக்குன்றுகளில் ரத்தப் பொட்டுக்கள். சரளைக்கற்கள் தான் பூசிக்கொண்ட ரத்தத்தில் எனக்கு பங்குதர மறுத்தது. அஜாக்கிரதையான அன்னையின் பின்னால் பதுங்கினாள் அச்சிறுமி. வலியின் வாசனைக்கு ஏங்கியது என் நாசித் துவாரங்கள்.  கட்டங்களைக் கடந்து செல்லும் பரமபத பாம்பினைப் போல வலியென்னும் ஏணியில் ஏற்றி என் இரைகளை ஒவ்வொன்றாய் வீழ்த்தினேன். கபாலத்தின் மத்தியில் ஸ்பீனாய்டு எலும்பின் சிறு பள்ளத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் ஹைப்போபிஸிஸ்க்கு கூட என்னை கட்டுப்படுத்திடத் தெரியாமல் திணறி என் வரையில் மட்டும் ரத்தம் சுவைக்கும் வன்முறைச் செல்களைப் மூளையெங்கும் படரவிட்டது போலும். 

 

மனிதனின் உடலில் மிகவும் ருசியான பாகம் எது என்று என்னைக் கேட்டால் நான் அவர்களின் சிரிப்பை சுமந்து செல்லும் உதடுகள்தான் என்று சொல்வேன். அவைகள்தான் காமம், குரோதம் வன்முறை என அழைப்பு விடுக்கும் அவற்றை ருசிப்பதில் மட்டும் என் ஆர்வம் நீங்கள் நினைத்தால் அது என் தவறில்லை, என் குளியலறைத் தொட்டியில் இளம் சூடான வெந்நீரோடு என் இரையின் ரத்தத்தையும் சேர்த்து மூழ்கி எழும்போதுதான் நான் இறையைப் போல் பரிசுத்தமடைகிறேன். இவர்கள் எல்லாம் எனக்காக படைக்கப்பட்ட படையல்கள் நான் அதை மனமுவந்து ஏற்கிறேன். இதயத்திற்குள் ஒரு இறுமாப்பு அமர்ந்து கொள்கிறது எனக்கு, வெளியில் எனைத் தேடாதீர்கள் நான் அருகிலேயேதான் இருக்கிறேன். உதட்டு எச்சிலின் ஈரத்தில் பளபளக்கும் புன்னகைக்காக காத்திருக்கிறேன். அங்கே யாராவது சிரிக்கிறீர்களா சப்தம் கேட்கிறதே....!

 

முந்தைய பகுதியை படிக்க...

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்