Skip to main content

மாபெரும் அரசியல் குழப்பத்தில் சீனா! ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #9

Published on 10/12/2019 | Edited on 06/01/2020


சிலமாதங்களுக்கு முன்புதான் ஒரு வம்சாவளி அரசு தகர்க்கப்படுவதை மாவோ கண்கூடாக பார்த்தார். ஆனால் இப்போது மேட்டுக்குடியினரின் சூழ்ச்சிகள் மீண்டும் ஒரு ஆட்சிமாற்றத்தை கொண்டுவந்தன. புரட்சியின் பயன்கள் சாதாரண மக்களுக்கு கிடைக்கவில்லை. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்த ஆட்சி மாற்றம் நடைபெற்றது. ஹூனான் ஆளுநர் டான் யாங்கெய் விரட்டப்பட்டது மாவோவுக்கு பிடிக்கவில்லை. அவர் நல்ல மாற்றங்களை கொண்டுவந்ததாக மாவோ நினைத்தார். கோமின்டாங் கட்சிக்கு எதிரான சண்டையில் சாங்ஷா நகரில்  இருந்த பெரிய வெடிமருந்து கிடங்கு பயங்கரமாக வெடித்து  சிதறியது. ஹூனானில் உள்ளவர்களுக்கு ஆயுதங்கள் இருக்கக் கூடாது என்பதற்காக குடியரசுத் தலைவரின் ஆதரவாளர்களில் இருவர் கிடங்கிற்கு தீ வைத்தார்கள். கோமின்டாங் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி, மாவோவின் மனதுக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
 

nஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்த ஆண்டுகளில் மாவோ சிறந்த எழுத்தாளராகவும் உருவாகி கொண்டிருந்தார். சாங்ஷாவில் ஜியாங் நதி என்ற நாளிதழைப் படித்து வந்தார். அதில்தான் முதன்முறையாக அவர் சோசலிசம் என்ற வார்த்தையைப் பார்த்தார். சன்யாட் சென் தலைமையில் நடைபெற்ற புரட்சிக்குப் பிறகு சில நாட்கள் கழித்து சீன சோசலிஸ்ட் கட்சியை ஜியாங் காங்கூ என்பவர் நிறுவினார். அந்தக் கட்சியின் கொள்கைகள் மாவோவை கவர்ந்தன. "அரசாங்கம் இல்லை; குடும்பம் இல்லை; மதம் இல்லை; தகுதிக்கேற்ற உழைப்பு; தேவைக்கேற்ற ஊதியம்." இது ஆற்றல் மிகுந்த கருத்து என்று தனது தோழர்களுக்கு மாவோ எழுதினார். அவருடைய கடிதங்களுக்கு சில நண்பர்கள் பதில் எழுதினார்கள்.ஆசிரியர் பயிற்சி பள்ளியில் ஐந்து ஆண்டுகள் மாவோ படித்தார். இந்த ஐந்து ஆண்டுகளில் தனது கவனம் வேறு பக்கம் திரும்பாமல் பார்த்துக் கொண்டார். அங்கு அவருக்கு யுவான் ஜிலியூ, யேங் சாங்ஜி என்ற  இரண்டு பேராசிரியர்கள் உதவி செய்தார்கள். அவர்களில் யுவான், மாவோவின் எழுத்துக்களை கேலி செய்வார். ஒரு பத்திரிக்கையாளனின் எழுத்துக்களைப் போல இருப்பதாக அவர் கிண்டல் செய்வார். இவர், பெர்லின், டோக்கியோ போன்ற வெளிநாட்டு நகரங்களில் படித்து திரும்பியவர். இவருடைய கிண்டல் காரணமாக செவ்வியல் மொழி நடையை மாவோ கற்றுக்கொண்டார்.

யேங் சாங்ஜி மாவோ மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவர் கருத்துமுதல்வாதி. உயர்வான ஒழுக்க நெறிகளை பின்பற்றியவர். நீதிதவறாத, வலிமையுள்ள, நேர்மையான, சமூகத்திற்கு பயன்படக்கூடிய மனிதர்களாக மாணவர்கள் மாறவேண்டும் என்று போதனை செய்வார். 1915 -ஆம் ஆண்டு சீனா மீது ஏகாதிபத்திய அரசுகள் கடுமையான நெருக்கடியை திணித்தன. அந்த நெருக்கடிகளுக்கு சீனா இழிவான விதத்தில் அடிபணிந்து வந்தது. மாவோவின் மனதில் அவநம்பிக்கை தீவிரமடைந்தது. அந்த ஆண்டு மே மாதம் 7ம் தேதி, யுவான் ஷிகெய்யிடம் ஜப்பானின் இறுதி எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டது. 21 கோரிக்கைகள் என்று அது அழைக்கப்பட்டது.

 

 

jhkஜப்பானின் மிகாடோ தலைமையிலான அரசு, சீனாவை முழுவதும் ஜப்பானின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதாக தெரிவித்தது. அத்துடன் ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்த ஷான்டுங் மாகாணத்தில் ஜப்பானுக்கு தனிப்பட்ட உரிமைகள் இருப்பதாக வலியுறுத்தியது. வேறு வழியில்லாமல் சீன குடியரசுத்தலைவர் இதை ஏற்றுக் கொண்டார். இது ஒரு மிகவும் வெட்ககரமான நாள் என்று மாவோ எழுதினார். சீன அரசாங்கத்தை கண்டனம் செய்யுமாறு தனது சக மாணவர்களை கேட்டுக் கொண்டார். அதே ஆண்டு டிசம்பர் மாதம் யுவான் ஷிகெய் சீனாவின் பேரரசராக தன்னை அறிவித்துக் கொண்டார். தனது அரசுக்கு ஹூங்க்ஸியான் என்று பெயர் வைத்து கொண்டார்.

இதையடுத்து சீனாவின் பல மாகாணங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அவர்களுடைய எதிர்ப்பு காரணமாக புதிய பேரரசர் தனது முடிவை மறு பரிசீலனை செய்யத் தொடங்கினார். மீண்டும் குடியரசுத் தலைவராக மாற முன்வந்தார். ஆனால் அதற்குள் காலம் கடந்து  விட்டது. 1916 ஆம் ஆண்டு மே மாதம் தெற்கில் இருந்து வந்த படைகள் தலைநகரை நெருங்கின. இதையறிந்த ஹூனான் மாநிலத்தின் ஆளுநரான டாங் ஸியாங்மிங் பேரரசரின் ஆதரவாளர் என்ற நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்தார். அதற்கும் அவகாசம் இல்லை. அடுத்த மாதமே அதாவது, ஜூன் மாதம் மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக பேரரசர் யுவான் ஷிகெய் திடீரென்று மரணம் அடைந்தார். ஹூனானில் நிலைமை மோசமடைந்தது. அங்கு பேரரசர் யுவான் ஷிகெய்யின் ஆதரவாளரான டாங் ஸியாங்மிங் விரட்டப்பட்டார். தனது அரண்மையிலிருந்து விவசாயி வேடத்தில் அவர் பின் வாசல் வழியாக தப்பிச் சென்றார். அவர் போகும்போது அரசாங்க கருவூலத்தையும் கொள்ளையடித்து சென்று விட்டார்.
 

Next Story

எதிர்காலம் குறித்த குழப்பங்களின் முடிவில்… ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #8

Published on 07/12/2019 | Edited on 06/01/2020

புரட்சிக்குப் பிறகு ஹூனான் மாநிலம் வேகமாக மாறிவந்தது. சீனாவில் வம்சாவளி ஆட்சி திடீரென்று தூக்கியெறியப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய நம்பிக்கை பிறந்தது. சீனாவில் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற யுவான் ஷிகெய் கொஞ்ச நாட்கள் வரை நல்ல பிள்ளையாக இருந்தார். தலைநகரில் நடப்பவை இன்னமும் மற்ற பகுதிகளுக்கு சென்று சேருவதில் தாமதம் நிலவியது. ஹூனானில் எழுத்து சுதந்திரம் இருந்தது. அந்த மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்த டான் யாங்கெய் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார். அபின் பயிரிடுவதை தடை செய்தார். போதை மருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டது. எழுத்து சுதந்திரத்தை பயன்படுத்தி பத்திரிகைகள் அமெரிக்காவையும் பிரிட்டனையும் கடுமையாக விமர்சனம் செய்தன. கல்விக்கு நிதி ஒதுக்கீடு மூன்று மடங்காக அதிகரிக்கப் பட்டது.  நவீனப் பள்ளிகள் ஏராளமாக உருவாகின. இளம் பெண்களும் இளைஞர்களும் தங்கள் முடிகளை வெட்டிக் கொண்டார்கள். பெண்கள் முக்காடில்லாமல் வெளியிடங்களில் நடமாடினர்.

 

kராணுவத்திலிருந்து மாவோ விலகியபோது அவருக்கு 18 வயது ஆகியிருந்தது. அவரளவில் இந்த காலக் கட்டம் குழப்பம் மிகுந்ததாக இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. ஒரே நேரத்தில் பலவிதமான விளம்பரங்கள் அவரைக் கவர்ந்தன. காவல்துறை பயிற்சிப்பள்ளியில் சேருவதற்கு அழைப்பு விடுக்கும் ஒரு விளம்பரத்தைப் பார்த்தார். அதில் சேருவதற்கு பெயரை பதிவு செய்தார். ஆனால் அதற்காக அவரை பரிசோதிப்பதற்கு முன், சோப்புத் தயாரிக்கும் பள்ளியைப் பற்றிய விளம்பரத்தைப் பார்த்தார். அந்தப் பள்ளியில் கல்விப் பயிற்சி எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால் உணவுக்கு உத்தரவாதமும் சிறிதளவு சம்பளமும் வழங்கப்படும் என்று அந்த விளம்பரத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

அது ஒரு கவர்ச்சியான விளம்பரம். சோப் தயாரிப்பதால் ஏற்படும் சமூக நன்மைகளை அந்த விளம்பரம் விரிவாக விளக்கியிருந்தது. காவல்துறை பயிற்சி பள்ளியில் சேரும் முடிவை மாவோ கைவிட்டார். அதற்கு பதிலாக சோப் தயாரிப்பாளராக மாறுவது என்று முடிவு செய்தார். ஒரு டாலர் பணம் கட்டி தனது பெயரை பதிவு செய்து கொண்டார். இந்த சமயத்தில் மாவோவின் நண்பன் ஒருவன் சட்டப்பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினான். அந்தப் பள்ளியில் சேரும்படி மாவோவை வற்புறுத்தினான். மூன்று ஆண்டுகளில் எல்லாவிதமான சட்ட நுணுக்கங்களையும் கற்றுத்தருகிறோம். படிப்பு முடிந்தவுடன் மாணவர்கள் வழக்குரைஞர்களாக மாறிவிடலாம் என்று ஒரு விளம்பரம் உறுதி அளித்தது. இந்த விளம்பர விவரங்களை விரிவாக குறிப்பிட்டு தனது செலவுக்கு பணம் அனுப்பும்படி மாவோ கடிதம் எழுதினார். இந்நிலையில் சீனா இப்போது பொருளாதார யுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியமைக்க பொருளாதார நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள் என்று மாவோவின் மற்றொரு நண்பர் யோசனை கூறினார்.

 

iஅதை தொடர்ந்து ஒரு வணிகவியல் நடுநிலைப்பள்ளியில் இன்னொரு டாலர் செலவு செய்து தனது பெயரை பதிவு செய்தார். அங்கு அவர் ஒரு மாணவனாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். ஆனால் இன்னொரு விளம்பரம் மறுபடியும் அவரை குழப்பியது. உண்மையில் உயர்நிலை வணிகவியல் பொதுப் பள்ளியில் படிப்பதுதான் நல்லது என்று அந்த விளம்பரம் தெரிவித்தது. இதையடுத்து அங்கும் ஒரு டாலர் கொடுத்து தனது பெயரை பதிவு செய்தார். தனது மகன் லாபகரமான தொழிலில் ஈடுபடப் போவதாக நம்பிய மாவோவின் தந்தை கல்விக் கட்டணத்துக்கான தொகையை அனுப்பி வைத்தார். உயர்நிலை வணிகவியல் பள்ளியில் மாணவனாக சேர்ந்து படிக்கத் தொடங்கினார் மாவோ. ஆனால் அங்கு பெரும்பாலான வகுப்புகள் ஆங்கில மொழிகளில் நடைபெற்றன. அரிச்சுவடியைக் காட்டிலும் சற்று கூடுதலாக மட்டுமே மாவோவுக்கு ஆங்கிலம் தெரியும். எனவே வெறுப்படைந்து அந்தப் பள்ளியிலிருந்து விலகினார்.

அதன்பிறகு மாவோவின் அடுத்தக் கட்ட சாகசம் தொடங்கியது. சாங்ஷா நகரில் இருந்த முதல் மாகாண நடுநிலைப்பள்ளியில் சேர்ந்தார். மிகவும் மதிப்பு வாய்ந்த அந்தப் பள்ளியில் சீன இலக்கியத்திற்கு வரலாற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்தப் பள்ளியின் நுழைவுத் தேர்வில் மாவோ முதல் மாணவனாக தேறினார். தான் தேடியது கிடைத்து விட்டது என்று நினைத்தார். சில மாதங்கள் மட்டுமே அங்கும் அவரால் தாக்கு பிடிக்க முடிந்தது. சில வரம்புகளுக்கு உட்பட்டு அங்கு பாடம் நடத்தப்பட்டது. பள்ளியின் விதிமுறைகளும் மாவோவால் ஏற்க முடியாதவையாக இருந்தன. எனவே அங்கிருந்தும் அவர் வெளியேறினார். அதன்பிறகு சாங்ஷாவில் புதிதாக திறக்கப்பட்ட பொது நூலகம் அவரை கவர்ந்து இழுத்தது. அங்கேயே தனது நேரத்தின் பெரும்பகுதியை செலவிடத் தொடங்கினார்.

 

iநூலகம் திறந்தவுடன் உள்ளே நுழையும் முதல் வாசகராக மாறினார். எடுக்கும் நூல்களை மிக கவனமாக வாசிப்பார். மதிய உணவை வாங்குவதில் கூட காலம் தாழ்த்துவார். நூலகம் மூடப்படும் வரை அங்கேயே இருப்பார். இந்த நாட்கள் மாவோவின் வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக இருந்தன. ஆனால் தனது மகன் வீணாக நாட்களை கழிப்பதாக மாவோவின் தந்தை கருதினார். எனவே அவருடைய மாதாந்திர செலவுகளுக்கு பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். பணம் இல்லாதபோது நமது மனம் ஒருமுகப்படுகிறது. மாவோவுக்கும் அதுமாதிரியான சந்தர்ப்பம் வாய்த்தது. எல்லா இளைஞர்களையும் போல தனது வாழ்க்கைக்கு உதவும் தொழில் குறித்து அவர் சிந்தித்தார்.

ஆசிரியராக மாறுவது என்று முடிவு செய்தார். 1913-ஆம் ஆண்டு ஹூனான் மாகாண நான்காவது ஆசிரியர் பயிற்சிப் பள்ளி வெளியிட்ட விளம்பரத்தைப் பார்த்தார். அங்கு சேருவதற்கு கல்விக் கட்டணம் தேவையில்லை என்ற விஷயம் மாவோவுக்கு ஆறுதலாக இருந்தது. நண்பர்களும் அங்கு சேரும்படி மாவோவை வற்புறுத்தினார்கள். தங்கும் இடத்திற்கும் உணவுக்கும் சிறு தொகை இருந்தால் போதும் என்பதால் மாவோ அங்கு சேரத் தயாரானார். தனது விருப்பத்தை தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் தெரிவித்து கடிதம் எழுதினார். அவர்களும் ஒப்புதல் அளித்தார்கள். பள்ளியில் சேருவதற்காக மாவோ ஒரு கட்டுரையை தயாரித்தார். அவருடைய நண்பர்கள் இருவரும் தங்களுக்கும் சேர்த்து கட்டுரைகள் தயாரிக்கும்படி மாவோவை கெஞ்சினார்கள்.

 

lkமொத்தம் மூன்று கட்டுரைகளை மாவோ தயாரித்தார். அந்த மூன்று கட்டுரைகளும் பள்ளியில் ஏற்கப்பட்டன. மூவருக்கும் இடம் கிடைத்தது. உண்மையில் மாவோ மூன்று முறை அங்கு சேர தகுதி பெற்றார். இந்தப் பள்ளியில் சேர்ந்த சமயம் சீனாவின் அரசியல் திசை மாறிக்கொண்டிருந்தது. சன்யாட் சென் தலைமையில் நடைபெற்ற புரட்சி பெரிய மாற்றங்களை கொண்டு வர தவறிவிட்டது. மஞ்சுக்களின் ஆட்சி ஒழிக்கப்பட்டது தவிர வேறு எதுவும் புதிதாக உருவாகவில்லை. சீனாவின் குடியரசுத்தலைவராக பொறுப்பு வகித்த யுவான் ஷிகெய் பழைய சர்வாதிகார அரசில் பணியாற்றியவர். அந்த அரசாங்கத்தைப் போலத்தான் அவருடைய அரசாங்கமும் செயல்பட்டது.

1912 -ஆம் ஆண்டு சன்யாட் சென் கோமின்டாங் என்று அழைக்கப்பட்ட தேசிய கட்சியை தொடங்கினார். அந்தக் கட்சியை ஹூனான் மாகாண அரசு ஆதரித்தது. புரட்சி முடிந்து இரண்டு ஆண்டுகள் வரை யுவான் ஷிகெய் எந்தவிதமான கொள்கையும் இல்லாமல் ஆட்சி நடத்தினார். அவருடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சன்யாட் சென் போர்ப் பயணத்தை தொடங்கினார். இந்தப் போர்ப் பயணத்திற்கு சீனாவின் தெற்குப் பகுதியில் இருந்த ஐந்து மாகாணங்களும் ஜியெங்ஸீ மாகாணமும் தங்களுடைய ஆதரவை தெரிவித்தன. ஆனால் இந்த இரண்டாவது புரட்சி பெரிய அளவில் தீவிரமாக நடைபெறவில்லை. தெற்கு நோக்கி சென்ற புரட்சி படைகள் 1913-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படுதோல்வி அடைந்தன. மாவோ வசித்த ஹூனான் மாநிலத்தின் ஆளுநர் டான் யாங்கெய் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். அங்கு டாங் ஸியாங்மிங்  என்பவர் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  இந்தப் புரட்சி தோல்வி அடைந்த சில நாட்களில் கோமின்டாங் கட்சிக்கு சீனா முழுவதும் தடை விதிக்கப் பட்டது.

 

Next Story

மாவோ சந்தித்த முதல் வெற்றி! ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #7

Published on 07/12/2019 | Edited on 06/01/2020


இந்தப் புரட்சி நடைபெற்ற சமயத்தில் சீனாவின் பேரரசராக இருந்தவருக்கு வயது ஆறு. ஆம். அவர் பெயர் பூ யி. சீனாவின் பேரரசராக இருந்த குவாங்ஸு 1908 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து பேரரசி சிஸி சீனாவின் பேரரசர் பதவிக்கு இரண்டு வயது 10 மாதங்கள் நிரம்பிய பூ யி யைத் தேர்வு செய்தார். அப்போது சிஸியும் மரணப்படுக்கையில் இருந்தார். சாங்ஷாவிலும் யாங்ஸே பள்ளத்தாக்கிலும் நிலைமை படுமோசமாக இருந்தது. தலைநகர் பெய்ஜிங்கைப் பற்றியும் சீனாவின் மற்ற மாகாணங்களைப் பற்றியும் பல்வேறு வதந்திகள் பரவின. பெய்ஜிங் புரட்சியாளர்களிடம் வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், பேரரசரின் குடும்பம் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதாகவும் வதந்திகள் பரவின. மொத்தத்தில் நான்கு மாகாணங்களின் தலைநகரங்கள் மட்டுமே புரட்சியாளர்களின் வசம் இருந்தன. புரட்சியாளர்களுக்கு எதிராக சீன ராணுவம் போராடும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்டன. சீன ராணுவத்தின் சக்திவாய்ந்த தளபதிகளுள் ஒருவரான ஸாங் ஸுன் நான்ஜிங் மாகாணத்தை முற்றுகையிட்டார். அங்கு புரட்சிப்படைகளுக்கு எதிராக கடுமையான தாக்குதல் நடைபெற்றது. ஜெர்மனியிடம் இருந்து பெற்ற நெருப்புக் குண்டுகளை வீசி தலைநகர் ஹென்காவை சீன ராணுவம் நாசப்படுத்தியது.
 

jhகடைசியில் நான்ஜிங் மாகாணம் சீன ராணுவத்திடம் வீழ்ந்தது. புரட்சியாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். சடைகளைக் கத்தரித்துக் கொண்டிருந்த சீனர்கள் கண்டவுடன் கொல்லப்பட்டனர். மாவோவும், அவரைப்போல முடியை கத்தரித்துக் கொண்டிருந்த மற்ற இளைஞர்களும் ராணுவத்துக்கு அஞ்சி ஒளிய வேண்டிய நிலை ஏற்பட்டது. இத்தகைய நிலையில் மாவோ துணிச்சலான ஒரு முடிவை எடுத்தார். புரட்சிப் படையில் சேருவது என்ற தனது திட்டத்துக்கு மீண்டும் உயிரூட்டினார். ஒரு மாணவர் படை உருவாக்கப்பட்டது. ஆனால் அந்தப் படையின் பங்களிப்பு என்ன என்பது தெளிவாக்கப் படவில்லை. இந்நிலையில் சீன பேரரசரின் ராணுவத்திற்கு எதிராக குடியரசுப்படையில் சேருவது என்று முடிவு செய்தார். அவருடன் அவருடைய நண்பர்களும் குடியரசுப் படையில் சேர்ந்தனர். நான்ஜிங் மாநிலம் சீன ராணுவத்திடம் விழுந்து விட்ட நிலையில் ஹூனான் மாநிலத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
 

fhujஅங்கு புரட்சியின் முதல் வாரங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குடியரசுப் படையில் சேர்ந்தனர். அந்த வீரர்கள் சீன ராணுவத்தின் கையில் விழுந்த நான்ஜிங் மாநிலத்துக்கு அனுப்பப்பட்டனர். அதிலும் சீன ராணுவத்தால் சீரழிக்கப்பட்ட ஹென்கா நகரில் அவர்களுக்கு வேலை இருந்தது. ஹென்கா நகரம் ரத்தக் களறியாக மாறி இருந்தது. சீனப் பேரரசின் உளவாளிகள் என்று சந்தேகிக்கப்பட்ட நபர்கள் குடியரசு ராணுவ வீரர்களால் துண்டுதுண்டாக வெட்டி கொல்லப்பட்டனர். கலகப் படையினர் ஹென்கா நகருக்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக மாவோ இருந்த படைப்பிரிவு அழைக்கப்பட்டிருந்தது. இந்தப் படைபிரிவினர் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் கலகக்காரர்களை எதிர்த்து அழித்தனர்.

இந்த சமயத்தில் சீனாவுக்கு ஒரு பேரரசர் இருக்கிறார் என்பதை நினைவூட்டும் வகையில் அறிக்கை ஒன்று வெளியானது. ஆறுவயதே நிரம்பிய பூ யி பெயரில் அந்த அறிக்கை வெளியானது. நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் அனைத்தும் எனது தவறால் ஏற்பட்டவை. விரைவில் சீர்திருத்தம் செய்வேன் என்று பூ யி தனது அறிக்கையில் உறுதி அளித்திருந்தார். பெய்ஜிங் புரட்சியாளர்களிடம் விழுந்துவிட்டது என்றும், பேரரசரின் குடும்பம் சிறையில் அடைக்கப்பட்டு விட்டது என்றும் பரவிய வதந்தி பொய் என்பதை இந்த அறிக்கை நிரூபித்தது. நான்ஜிங் மாகாணத்தின் முன்னாள் சட்டமன்ற கட்டிடத்தில் இருந்த நீதிமன்றத்தில் மாவோவின் படைப்பிரிவு முகாமிட்டு இருந்தது. மாவோவின் படைப்பிரிவில் இருந்த வீரர்கள் பலருக்கு எழுதப் படிக்க தெரியாது. அவர்கள் அதிகாரிகளுக்கு சிறுசிறு வேலைகளை செய்வதில் காலம் கழித்தார்கள். இந்த வீரர்களுக்காக மாவோ கடிதங்களை எழுதித் தருவார். எனவே அவர்கள் மத்தியில் மாவோ அறிமுகமாகியிருந்தார். முதன்முறையாக தொழிலாளர்களுடன் மாவோவுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர்களில் ஒரு சுரங்கத் தொழிலாளியும், கொல்லரும் முக்கியமானவர்கள். மாணவனாக இருக்கும்பொழுதே ராணுவத்தில் சேர்ந்துவிட்டதால் மற்ற வீரர்களைப் போல அதிகாரிகளுக்கு தண்ணீர் சுமக்க மாவோவின் மனம் ஒப்பவில்லை.

 

jஎனவே தனக்காக தண்ணீர் சுமப்பதற்கு வேறு ஆட்களை நியமித்துக் கொண்டார். ராணுவத்தில் அவருக்கு 7 டாலர்கள் வழங்கப்பட்டன. இந்தப் பணத்தில் தண்ணீருக்கும் உணவுக்கும் செலவழித்தது போக மீதப் பணத்தை செய்தித்தாள்களை வாங்குவதற்காக செலவழித்தார். நான்ஜிங் மாநிலத்தில் சீனப் பேரரசின் ராணுவ வீரர்கள் விரைவில் தோல்வியை சந்தித்தனர். மஞ்சுக்களின் எதிர்ப்பு முடிவை நெருங்கியது. இந்நிலையில் சாங்ஷா நகரில் சீனர்களின் சடைகளை கத்தரிக்கும் நடவடிக்கை மீண்டும் தொடங்கியது. குடியரசு படைவீரர்கள் இந்த நடவடிக்கைகளில் தீவிரமாக இருந்தார்கள். அப்போது நடந்த நிகழ்வுகள் பரிதாபகரமானதாகவும், நகைச்சுவை உணர்வு மிக்கதாகவும் இருந்தன. வெளியூர்களிலிருந்து சாங்ஷா நகருக்கு வருகிறவர்ளை குடியரசு படையினர்கள் வரவேற்பார்கள். பின்னர் அவர்களுடைய சடைகளை கத்தரிக்கோல் அல்லது வாள்களால் வெட்டுவார்கள். அப்போது அவர்கள் வீரர்களிடம் கெஞ்சுவார்கள்.

சிறுவயதிலிருந்து பராமரிக்கப்பட்டுப் பின்னப்பட்ட சடையை இழப்பது தங்கள் உடல்உறுப்புகளில் ஒன்றை இழப்பது போல கருதினார்கள். பலர் வீரர்களுடன் சண்டையிடவும் தயங்கவில்லை. விரைவிலேயே கிராமத்தினர் உட்பட மக்கள் அனைவரும் மஞ்சுக்களின் அடையாளமாக கருதப்பட்ட தங்களுடைய சடைகளை தாங்களாகவே வெட்டிக் கொண்டார்கள். அதேசமயம் அரசியலில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதை நினைத்து அஞ்சிய பலர் ஒரு போலிச் சடையை தங்களுடைய தலைப்பாகைக்குள் ஒளித்து வைத்து இருந்தனர். மஞ்சுக்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி விடுவார்களோ என்ற அவர்களுடைய அச்சம் நிறைவேறவில்லை. குடியரசு படையினரின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. கட்சியின் தலைவர் சன்யாட் சென் சீனா திரும்ப உதவி செய்தனர். அதே சமயம் எங்கிருந்து நிர்வாகத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்படவில்லை. கடைசியில் 1912ஆம் ஆண்டு அமெரிக்காவில் தங்கியிருந்த சென் நான்ஜிங் மாகாணத்தின் தலைநகர் ஹென்காவில் இருந்து நிர்வாகத்தை நடத்த முடிவு செய்தார்."

 

hjபுத்தாண்டு தினத்தில் சீனாவின் முதல் குடியரசு தலைவராக சன்யாட் சென் பதவியேற்றார். சன்யாட் சென்னின் தலைமையை எல்லோரும் ஏற்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்வதற்காக ஒரு பயண குழுவை அனுப்ப திட்டமிடப்பட்டது. சன்யாட் சென் பதவி ஏற்பதற்கு முன்னர் யுவான் ஷிகெய் என்வரை அரசு தலைவராக பேரரசர் நியமித்திருந்தார். அதேசமயம் பேரரசரும் பதவியில் நீடித்தார். பெய்ஜிங்குடன் சண்டையிடுவதற்கு தயாரிப்பு வேலைகள் நடைபெற்று வந்தன. ஆனால் சன்யாட் சென்னும் யுவான் ஷிகெயும் ஒரு உடன்பாடு ஏற்படுத்தினர். அதன்படி பேரரசர் பதவி விலகினார். இரண்டு நாட்கள் கழித்து யுவான் ஷிகெய்க்கு குடியரசு தலைவர் பதவியை சென் விட்டுக் கொடுத்தார். மாவோ இருந்த புரட்சிப்படையில் வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அவர்களில் ஏராளமானோர் விலக்கப்பட்டார்கள். புரட்சி முடிந்துவிட்டது என்று மாவோ முடிவுக்கு வந்தார். மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த விரும்பினார். ராணுவத்தில் ஆறு மாதங்கள் பணிபுரிந்த திருப்தியுடன் பாடப் புத்தகங்களை நோக்கி திரும்பினார். அவருக்கு புதியதோர் அனுபவம் காத்திருந்தது. அந்த அனுபவம் அவரை ஒரு தலைவராக பக்குவப்படுத்தியது.