Skip to main content

எதிர்காலம் குறித்த குழப்பங்களின் முடிவில்… ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #8

புரட்சிக்குப் பிறகு ஹூனான் மாநிலம் வேகமாக மாறிவந்தது. சீனாவில் வம்சாவளி ஆட்சி திடீரென்று தூக்கியெறியப்பட்டது. அதைத் தொடர்ந்து புதிய நம்பிக்கை பிறந்தது. சீனாவில் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற யுவான் ஷிகெய் கொஞ்ச நாட்கள் வரை நல்ல பிள்ளையாக இருந்தார். தலைநகரில் நடப்பவை இன்னமும் மற்ற பகுதிகளுக்கு சென்று சேருவதில் தாமதம் நிலவியது. ஹூனானில் எழுத்து சுதந்திரம் இருந்தது. அந்த மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்த டான் யாங்கெய் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தார். அபின் பயிரிடுவதை தடை செய்தார். போதை மருந்து இறக்குமதி நிறுத்தப்பட்டது. எழுத்து சுதந்திரத்தை பயன்படுத்தி பத்திரிகைகள் அமெரிக்காவையும் பிரிட்டனையும் கடுமையாக விமர்சனம் செய்தன. கல்விக்கு நிதி ஒதுக்கீடு மூன்று மடங்காக அதிகரிக்கப் பட்டது.  நவீனப் பள்ளிகள் ஏராளமாக உருவாகின. இளம் பெண்களும் இளைஞர்களும் தங்கள் முடிகளை வெட்டிக் கொண்டார்கள். பெண்கள் முக்காடில்லாமல் வெளியிடங்களில் நடமாடினர்.

 

kராணுவத்திலிருந்து மாவோ விலகியபோது அவருக்கு 18 வயது ஆகியிருந்தது. அவரளவில் இந்த காலக் கட்டம் குழப்பம் மிகுந்ததாக இருந்தது. அடுத்து என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. ஒரே நேரத்தில் பலவிதமான விளம்பரங்கள் அவரைக் கவர்ந்தன. காவல்துறை பயிற்சிப்பள்ளியில் சேருவதற்கு அழைப்பு விடுக்கும் ஒரு விளம்பரத்தைப் பார்த்தார். அதில் சேருவதற்கு பெயரை பதிவு செய்தார். ஆனால் அதற்காக அவரை பரிசோதிப்பதற்கு முன், சோப்புத் தயாரிக்கும் பள்ளியைப் பற்றிய விளம்பரத்தைப் பார்த்தார். அந்தப் பள்ளியில் கல்விப் பயிற்சி எதுவும் அளிக்கப்படவில்லை. ஆனால் உணவுக்கு உத்தரவாதமும் சிறிதளவு சம்பளமும் வழங்கப்படும் என்று அந்த விளம்பரத்தில் உறுதி அளிக்கப்பட்டது.

அது ஒரு கவர்ச்சியான விளம்பரம். சோப் தயாரிப்பதால் ஏற்படும் சமூக நன்மைகளை அந்த விளம்பரம் விரிவாக விளக்கியிருந்தது. காவல்துறை பயிற்சி பள்ளியில் சேரும் முடிவை மாவோ கைவிட்டார். அதற்கு பதிலாக சோப் தயாரிப்பாளராக மாறுவது என்று முடிவு செய்தார். ஒரு டாலர் பணம் கட்டி தனது பெயரை பதிவு செய்து கொண்டார். இந்த சமயத்தில் மாவோவின் நண்பன் ஒருவன் சட்டப்பள்ளியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினான். அந்தப் பள்ளியில் சேரும்படி மாவோவை வற்புறுத்தினான். மூன்று ஆண்டுகளில் எல்லாவிதமான சட்ட நுணுக்கங்களையும் கற்றுத்தருகிறோம். படிப்பு முடிந்தவுடன் மாணவர்கள் வழக்குரைஞர்களாக மாறிவிடலாம் என்று ஒரு விளம்பரம் உறுதி அளித்தது. இந்த விளம்பர விவரங்களை விரிவாக குறிப்பிட்டு தனது செலவுக்கு பணம் அனுப்பும்படி மாவோ கடிதம் எழுதினார். இந்நிலையில் சீனா இப்போது பொருளாதார யுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியமைக்க பொருளாதார நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள் என்று மாவோவின் மற்றொரு நண்பர் யோசனை கூறினார்.

 

iஅதை தொடர்ந்து ஒரு வணிகவியல் நடுநிலைப்பள்ளியில் இன்னொரு டாலர் செலவு செய்து தனது பெயரை பதிவு செய்தார். அங்கு அவர் ஒரு மாணவனாக ஏற்றுக் கொள்ளப்பட்டார். ஆனால் இன்னொரு விளம்பரம் மறுபடியும் அவரை குழப்பியது. உண்மையில் உயர்நிலை வணிகவியல் பொதுப் பள்ளியில் படிப்பதுதான் நல்லது என்று அந்த விளம்பரம் தெரிவித்தது. இதையடுத்து அங்கும் ஒரு டாலர் கொடுத்து தனது பெயரை பதிவு செய்தார். தனது மகன் லாபகரமான தொழிலில் ஈடுபடப் போவதாக நம்பிய மாவோவின் தந்தை கல்விக் கட்டணத்துக்கான தொகையை அனுப்பி வைத்தார். உயர்நிலை வணிகவியல் பள்ளியில் மாணவனாக சேர்ந்து படிக்கத் தொடங்கினார் மாவோ. ஆனால் அங்கு பெரும்பாலான வகுப்புகள் ஆங்கில மொழிகளில் நடைபெற்றன. அரிச்சுவடியைக் காட்டிலும் சற்று கூடுதலாக மட்டுமே மாவோவுக்கு ஆங்கிலம் தெரியும். எனவே வெறுப்படைந்து அந்தப் பள்ளியிலிருந்து விலகினார்.

அதன்பிறகு மாவோவின் அடுத்தக் கட்ட சாகசம் தொடங்கியது. சாங்ஷா நகரில் இருந்த முதல் மாகாண நடுநிலைப்பள்ளியில் சேர்ந்தார். மிகவும் மதிப்பு வாய்ந்த அந்தப் பள்ளியில் சீன இலக்கியத்திற்கு வரலாற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்தப் பள்ளியின் நுழைவுத் தேர்வில் மாவோ முதல் மாணவனாக தேறினார். தான் தேடியது கிடைத்து விட்டது என்று நினைத்தார். சில மாதங்கள் மட்டுமே அங்கும் அவரால் தாக்கு பிடிக்க முடிந்தது. சில வரம்புகளுக்கு உட்பட்டு அங்கு பாடம் நடத்தப்பட்டது. பள்ளியின் விதிமுறைகளும் மாவோவால் ஏற்க முடியாதவையாக இருந்தன. எனவே அங்கிருந்தும் அவர் வெளியேறினார். அதன்பிறகு சாங்ஷாவில் புதிதாக திறக்கப்பட்ட பொது நூலகம் அவரை கவர்ந்து இழுத்தது. அங்கேயே தனது நேரத்தின் பெரும்பகுதியை செலவிடத் தொடங்கினார்.

 

iநூலகம் திறந்தவுடன் உள்ளே நுழையும் முதல் வாசகராக மாறினார். எடுக்கும் நூல்களை மிக கவனமாக வாசிப்பார். மதிய உணவை வாங்குவதில் கூட காலம் தாழ்த்துவார். நூலகம் மூடப்படும் வரை அங்கேயே இருப்பார். இந்த நாட்கள் மாவோவின் வாழ்க்கையில் மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக இருந்தன. ஆனால் தனது மகன் வீணாக நாட்களை கழிப்பதாக மாவோவின் தந்தை கருதினார். எனவே அவருடைய மாதாந்திர செலவுகளுக்கு பணம் அனுப்புவதை நிறுத்திவிட்டார். பணம் இல்லாதபோது நமது மனம் ஒருமுகப்படுகிறது. மாவோவுக்கும் அதுமாதிரியான சந்தர்ப்பம் வாய்த்தது. எல்லா இளைஞர்களையும் போல தனது வாழ்க்கைக்கு உதவும் தொழில் குறித்து அவர் சிந்தித்தார்.

ஆசிரியராக மாறுவது என்று முடிவு செய்தார். 1913-ஆம் ஆண்டு ஹூனான் மாகாண நான்காவது ஆசிரியர் பயிற்சிப் பள்ளி வெளியிட்ட விளம்பரத்தைப் பார்த்தார். அங்கு சேருவதற்கு கல்விக் கட்டணம் தேவையில்லை என்ற விஷயம் மாவோவுக்கு ஆறுதலாக இருந்தது. நண்பர்களும் அங்கு சேரும்படி மாவோவை வற்புறுத்தினார்கள். தங்கும் இடத்திற்கும் உணவுக்கும் சிறு தொகை இருந்தால் போதும் என்பதால் மாவோ அங்கு சேரத் தயாரானார். தனது விருப்பத்தை தந்தைக்கும் குடும்பத்தினருக்கும் தெரிவித்து கடிதம் எழுதினார். அவர்களும் ஒப்புதல் அளித்தார்கள். பள்ளியில் சேருவதற்காக மாவோ ஒரு கட்டுரையை தயாரித்தார். அவருடைய நண்பர்கள் இருவரும் தங்களுக்கும் சேர்த்து கட்டுரைகள் தயாரிக்கும்படி மாவோவை கெஞ்சினார்கள்.

 

lkமொத்தம் மூன்று கட்டுரைகளை மாவோ தயாரித்தார். அந்த மூன்று கட்டுரைகளும் பள்ளியில் ஏற்கப்பட்டன. மூவருக்கும் இடம் கிடைத்தது. உண்மையில் மாவோ மூன்று முறை அங்கு சேர தகுதி பெற்றார். இந்தப் பள்ளியில் சேர்ந்த சமயம் சீனாவின் அரசியல் திசை மாறிக்கொண்டிருந்தது. சன்யாட் சென் தலைமையில் நடைபெற்ற புரட்சி பெரிய மாற்றங்களை கொண்டு வர தவறிவிட்டது. மஞ்சுக்களின் ஆட்சி ஒழிக்கப்பட்டது தவிர வேறு எதுவும் புதிதாக உருவாகவில்லை. சீனாவின் குடியரசுத்தலைவராக பொறுப்பு வகித்த யுவான் ஷிகெய் பழைய சர்வாதிகார அரசில் பணியாற்றியவர். அந்த அரசாங்கத்தைப் போலத்தான் அவருடைய அரசாங்கமும் செயல்பட்டது.

1912 -ஆம் ஆண்டு சன்யாட் சென் கோமின்டாங் என்று அழைக்கப்பட்ட தேசிய கட்சியை தொடங்கினார். அந்தக் கட்சியை ஹூனான் மாகாண அரசு ஆதரித்தது. புரட்சி முடிந்து இரண்டு ஆண்டுகள் வரை யுவான் ஷிகெய் எந்தவிதமான கொள்கையும் இல்லாமல் ஆட்சி நடத்தினார். அவருடைய அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சன்யாட் சென் போர்ப் பயணத்தை தொடங்கினார். இந்தப் போர்ப் பயணத்திற்கு சீனாவின் தெற்குப் பகுதியில் இருந்த ஐந்து மாகாணங்களும் ஜியெங்ஸீ மாகாணமும் தங்களுடைய ஆதரவை தெரிவித்தன. ஆனால் இந்த இரண்டாவது புரட்சி பெரிய அளவில் தீவிரமாக நடைபெறவில்லை. தெற்கு நோக்கி சென்ற புரட்சி படைகள் 1913-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் படுதோல்வி அடைந்தன. மாவோ வசித்த ஹூனான் மாநிலத்தின் ஆளுநர் டான் யாங்கெய் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவர் அங்கிருந்து தப்பிவிட்டார். அங்கு டாங் ஸியாங்மிங்  என்பவர் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  இந்தப் புரட்சி தோல்வி அடைந்த சில நாட்களில் கோமின்டாங் கட்சிக்கு சீனா முழுவதும் தடை விதிக்கப் பட்டது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்