Skip to main content

சீனா ஒரு ஃபிளாஷ்பேக்! ஆதனூர் சோழன் எழுதும் மக்கள் தலைவன் மாவோ #3

மாவோ பிறப்பதற்கு முன்னரே, சீனாவில் பழைய வாழ்க்கை முறைகள் தகர்ந்து கொண்டிருந்தன. உள்நாட்டில் படுமோசமான சீரழிவுகள். வெளிநாடுகள் கொடுத்த கடுமையான நெருக்கடிகள் என்று சீனா தத்தளித்துக் கொண்டிருந்தது. இதற்கு காரணம் ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழில்புரட்சி. 18 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொழில்புரட்சி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, 19 ஆம் நூற்றாண்டில் அதுவரை கனவிலும் கண்டிராத அதிகாரத்தையும், விரிவாக்கத்திற்கான ஆற்றலையும் ஐரோப்பா வளர்த்துக் கொண்டிருந்தது. "வர்த்தக உறவுகளை ஏற்படுத்தலாம்" என்று பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் ஜார்ஜ் சீனாவின் பேரரசருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
 

d"வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் காட்டுமிராண்டிகள். அவர்களுடைய தயவு சீனாவுக்குத் தேவையில்லை" என்று பேரரசர் சியான்லுங் மறுத்துவிட்டார். ஆனால், அதன்பிறகு வந்த ஒன்றரை நூற்றாண்டுகள் சீனாவின் வாழ்க்கை நிலை மோசமான அளவுக்குத் தேங்கியது. உள்நாட்டுக் கொந்தளிப்புகளிலும் ரத்தம் சிந்திய கலகங்களிலும் சீனாவின் வளங்கள் வீணாகின. அதாவது 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கி 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை சீனா பல்வேறு யுத்தங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. ஐரோப்பாவுக்கு தனது உற்பத்தி பொருட்களை விற்பதற்கு மிக விரிவான சந்தை தேவைப்பட்டது.

1839 ஆம் ஆண்டு முதலாவது அபினிப் போர் ஏற்பட்டது. இது பிரிட்டனுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்றது. சீனாவிலிருந்து தேயிலையை வாங்குவதற்காக பிரிட்டன் அபின் என்ற போதைப் பொருளை சட்டவிரோதமாக கடத்தி வந்து விற்றது. இது சீன குடிமக்களை போதைக்கு அடிமையாக்கியது. பிரிட்டனின் இந்த சட்டவிரோத வியாபாரத்தை தடை செய்ய லின் ஸியூ என்ற சீன கவர்னர் முடிவெடுத்தார். ஹூனான் மற்றும் ஹுபேய் மாகாணங்களை இவர் நிர்வகித்தார். அந்த மாகாணங்களில் சுமார் ஆயிரத்து 700 அபின் வியாபாரிகளை அவர் கைது செய்தார். அவர்களிடம் கைப்பற்றப்பட்ட 26 லட்சம் பவுண்ட் எடையுள்ள அபினை தீவைத்து அழித்தார்.

இதையடுத்து, பிரிட்டன் தனது கப்பல் படை கொண்டு சீனாவின் முக்கியமான துறைமுகங்களை தாக்கியது. தங்களுடைய வர்த்தகத்தை தடைசெய்ய முயற்சிக்கும் சீன அரசுக்கு பாடம் புகட்ட இந்த தாக்குதலை நடத்தியது. பீரங்கி பொருத்தப்பட்ட கப்பல்களின் தாக்குதலை சீனாவின் பழமையான ராணுவத்தால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து 1942 ஆம் ஆண்டு பிரிட்டனுடன் சீனா நான்ஜிங் நகரில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் அடிப்படையில் குவாங்ஸோவ், ஜின்மென், ஃபுஸோவ், நிங்போ, ஷாங்காய் ஆகிய முக்கிய துறைமுகங்களில் பிரிட்டனுக்கு வர்த்தக உரிமை வழங்கப்பட்டது. பிரிட்டனின் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த கவர்னருக்கு பேரரரசர் தண்டனை வழங்கினார்.
 

ghபிரிட்டனுக்கு வர்த்தக உரிமை வழங்கப்பட்ட துறைமுக நகரங்களில் ஆங்கிலேயர்கள் வர்த்தக நிறுவனங்களையும், குடியிருப்புகளையும் கட்டினார்கள். விரைவில் ஹாங்காங்கை பிரிட்டன் தனது வசமாக்கியது. பிரிட்டனுக்கு உரிமை அளித்ததைப் போல, மற்ற மேற்கத்திய நாடுகளுக்கும் சீன அரசு வர்த்தக உரிமைகளை வாரி வழங்கியது. அவையும் தங்கள் பங்கிற்கு வர்த்தகம் மற்றும் குடியிருப்புகளை தொடங்கின. சீன துறைமுகங்களில் மேற்கத்திய ஆக்கிரமிப்பு அதிகரித்தது. 1856 ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு சொந்தமான கப்பலை சீன அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதனால் ஆத்திரமடைந்த பிரிட்டன், பிரான்சுடன் சேர்ந்து சீனா மீது தாக்குதல் நடத்தியது. இந்த இருநாடுகளுடன் ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளும் இணைந்தன. மேலும் 11 துறைமுகங்களை வர்த்தகத்திற்கு திறந்துவிட சீனா ஒப்புக் கொண்டது.

தவிர, தலைநகர் பெய்ஜிங்கில் வெளிநாட்டவர் வந்து போகவும், கிறிஸ்தவ மிஷனரி நடவடிக்கைகளை அனுமதிக்கவும் சீனப் பேரரசர் ஒப்புதல் அளித்தார். அபின் கடத்தலை சட்டபூர்வமாக்கவும் பேரரசர் நிர்ப்பந்திக்கப்பட்டார். இருந்தாலும் 1859 ஆம் ஆண்டுவரை, சீன அரசு, பிரிட்டிஷ் அதிகாரிகள் பெய்ஜிங்கிற்குள் நுழைவதை தொடர்ந்து தடைசெய்தது. இதனால் ஆத்திரமடைந்த பிரிட்டனும் பிரான்ஸும் பெய்ஜிங்கிற்குள் தங்கள் பீரங்கிப் படையை அனுப்பி துவம்சம் செய்தன. பேரரசரின் கோடைக்கால மாளிகையை எரித்து தரைமட்டமாக்கின. இதையடுத்து அந்த நாடுகளுக்கு கூடுதல் சலுகைகளை பேரரசர் வழங்க வேண்டியதாயிற்று. ஓரங்களில் உள்ள முக்கியத் துறைமுகங்களை மட்டுமில்லாமல், தலைநகர் பெய்ஜிங்கிலேயே குடியிருப்பு உரிமைகளை அன்னியர்கள் பெற்றார்கள்.

இது சீனாவின் உள்ளடங்கிய மாகாணங்கள் பலவற்றுக்கு தெரியவே இல்லை. முக்கியமாக ஹூனானில் இதன் பாதிப்பு எதுவுமேயில்லை. அந்த மக்கள் வெளிநாட்டவர்கள் மீது தீவிரமான பகையுணர்வு கொண்டிருந்தனர். அவர்கள் சீனர்களிலேயே தனித்தன்மை மிக்கவர்களாக இருந்தனர். சீனாவின் பிற மாகாணங்களைச் சேர்ந்த மக்களையே அவர்கள் நம்பவில்லை. மாவோவின் தாத்தா காலத்தில் தெய்பிங் கலகம் சீனாவையே உலுக்கியது. இந்தக் கலகத்துக்கு முக்கியமான நபர் ஹுங் ஸியு சுவான். இவர், 1844 ஆம் ஆண்டு சீனாவின் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர். அப்போதிருந்து அவர் சீனாவை ஆண்ட மஞ்ச்சு பேரரசை வெறுத்தார். கடவுளிடமும், மூத்த சகோதரரான யேசு கிறிஸ்துவிடமும் தான் பேசியதாக மக்களிடம் கூறத் தொடங்கினார். அவர்கள் சீனாவில் மஞ்ச்சு பேரரசை தூக்கியெறிந்துவிட்டு, அவர்களுடைய சிலைகளை சீனாவுக்கு வெளியே வீச வேண்டும் என்று தனக்கு உத்தரவிட்டதாக அவர் பிரச்சாரம் செய்தார். மஞ்ச்சு பேரரசுக்குப் பதிலாக தாய்பிங் டியென்க்வோ என்ற புதிய பேரரசை நிறுவப் போவதாக அவர் பேசினார். இதற்கு, பரிசுத்தமான அமைதி நிறைந்த சொர்க்க பேரரசு என்று பொருள்.
 

vbஅவர் தனக்கு ஆதரவாக நான்கு ராணுவ தளபதிகளை சேர்த்துக் கொண்டார். மஞ்ச்சு இன மக்களை கொன்று குவித்தனர். தொடக்கத்தில நான்கிங் மாகாணத்தை அவர்கள் கைப்பற்றினார்கள். அங்கிருந்து சீனாவின் கால் பகுதியை அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். சீனாவின் மொத்த ஜனத் தொகையில் பாதிப்பேர் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் வசித்தனர். எங்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று சீனா சீரழிவின் உச்சத்திற்கு சென்றது. மஞ்ச்சு இன மக்கள் பெரும்பகுதியாக வாழ்ந்த ஹூனான் மாகாணத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். எண்பது நாட்கள் நடைபெற்ற இந்த முற்றுகையை ஹூனான் மாகாண மக்கள் உறுதியுடன் தாக்குப்பிடித்தனர். அந்த மாகாணத்தின் ராணுவ தளபதியாக இருந்த ஸெங் காஃபேன் தாய்பிங் ராணுவத்தை எதிர்த்து முறியடித்தார்.

இந்தக் கலகம் 1851 ஆம் ஆண்டு முதல் 1864 ஆம் ஆண்டுவரை நீடித்தது. தாய்பிங் அமைப்பினரிடம் இருந்த நான்கிங் சீன ராணுவத்தின் வசம் வந்ததும், தாய்பிங் தலைவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதற்கு பிறகுதான் தன்னைத்தானே பலப்படுத்திக் கொள்ளும் இயக்கம் தொடங்கியது. நவீன ஆயுதங்களின் முக்கியத்துவம் உணரப்பட்டது. சீனாவை ஆக்கிரமிக்க முயற்சிப்பவர்களை எதிர்த்து போராடவும், கன்பூசியனிஸ வாழ்க்கை முறையை பாதுகாக்கவும் நவீன ஆயுதங்கள் தேவை என்ற சிந்தனை வளர்ந்தது. ஆனால், 1894 ஆம் ஆண்டு, அதாவது, மாவோ பிறந்த மறு ஆண்டு, குய்ங் பேரரசு மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க வேண்டியிருந்தது.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்