Skip to main content

ஒளிமகள் பிறந்தாள்! ஆதனூர் சோழன் எழுதும் வீரமங்கை மலாலா #2

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

பனிபோர்த்திய மலைகள் நிறைந்த சொர்க்க ராஜ்ஜியம் அது. ஸ்வாத் சமவெளி என்று பெயர். இந்தச் சமவெளியை தொடக்கத்தில் தோட்டம் என்றே அழைத்தார்கள். மலர்களும், பசுமை வயல்களும், பழத்தோட்டங்களும், வைரச் சுரங்கங்களும், தெளிந்த நீரோடும் நதிகளும், வெள்ளி அருவிகளும் நிறைந்த பகுதி. கிழக்கின் ஸ்விட்சர்லாந்து என்று இந்த சமவெளியை அழைக்கிறார்கள். இங்குதான் முதல் பனிச்சறுக்கு குடில்கள் அமைக்கப்பட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். பாகிஸ்தானில் உள்ள செல்வந்தர்களின் விடுமுறை கொண்டாட்டங்கள் இங்குதான் நடக்கும். காலப்போக்கில் வெளிநாட்டினரும் இங்கு வரத் தொடங்கினார்கள். 1961ல் பிரிட்டிஷ் மகாராணி எலிஸபெத்தும் இங்கே வந்திருக்கிறார். தாஜ்மகாலைக் கட்டிய அதே பளிங்குக் கற்களைக்  கொண்டு 1940ல் முதல் மன்னர் மியாங்குல் அப்துல் வதுத் கட்டிய வெள்ளை மாளிகையில் அவர் தங்கினார். இந்தச் சமவெளிக்குள் நுழையும் இடத்திலேயே “சொர்க்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம்” என்ற போர்டை பார்க்க முடியும்.

 

fdyஇவ்வளவு செல்வச் சிறப்புவாய்ந்த பகுதியில் மிங்கோரா என்ற நகரத்தில் 1997 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 12 ஆம் தேதி அதிகாலையின் கடைசி நட்சத்திரம் மினுக்கிக் கொண்டிருந்தது. நகரின் ஒரு வீட்டில் பக்கத்து வீட்டுப் பெண் துணையுடன் டார் பெகாய் என்ற பெண்மணி அழகிய பெண் குழந்தையை பெற்றார். அந்தப் பெண்ணின் கணவர் ஜியாவுத்தீன் யூஸஃப்ஸாயிடம் மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் அளவுக்கு பணம் இல்லை. டார் பெகாய்க்கு முதல் குழந்தை பிறக்கும்போதே இறந்துவிட்டது. ஆனால், இரண்டாவது குழந்தையோ உற்சாகமாக இந்த உலகத்தில் குதித்தது. பெண் குழந்தையாய் பிறந்ததால், அந்தச் சந்தோஷத்தை தெருவில் உள்ளவர்கள் கொண்டாடவில்லை. குழந்தையின் தந்தைக்கு யாரும் வாழ்த்துக்கூட சொல்லவில்லை.

அவர்கள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பழங்குடியினருக்கு இடையே பிரிந்த இனத்தைச் சேர்ந்தவர்கள். பாஷ்துன் என்று அழைக்கப்படுகிறவர்கள். ஸன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த இவர்கள் பெண் குழந்தையை விரும்புவதில்லை. ஆண் குழந்தை பிறந்தால் துப்பாக்கிக் குண்டுகளை வெடித்து உற்சாகமாக கொண்டாடுவார்கள். உணவு சமைக்கவும், குழந்தை பெற்றுத்தரவும் மட்டுமே பெண்கள் என்று கருதினார்கள். பெண் குழந்தை பிறந்தால் பெரும்பாலோர் துக்க நாளாகவே நினைப்பார்கள். ஆனால், அந்தக் குழந்தையின் தந்தையின் உறவினரான ஜெஹான் ஷெர் கான் யூஸஃப்ஸை உள்ளிட்ட சிலர் மட்டும் உற்சாகமாக கொண்டாடினார்கள். குழந்தையின் தொட்டிலில் பணத்தை கொட்டி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார். தனக்கு மகள் பிறந்ததை ஜியாவுதீன் உற்சாகமாக கொண்டாடினார். தனது மகளுக்கு மலாலா என்று பெயர் சூட்டினார்.
 

 

jஆப்கானிஸ்தானின் வீரமங்கையான மலாலாய் ஆஃப் மய்வாண்ட் நினைவாக இந்தப் பெயரை அவர் சூட்டினார். பாஷ்துன்கள் மானத்துக்காகவே வாழ்கிறவர்கள். மானம் போனால் உயிரை மாய்த்துக்கொள்வார்கள். அவர்கள் தங்களுக்குள் அடித்துக் கொள்வார்கள். அதேசமயம், வெளியாட்கள் படையெடுத்தால் ஒன்றுசேர்ந்து தாக்குவார்கள்.பாஷ்துன் இன குழந்தைகள் அனைவருக்கும் மலாலாய் கதை தெரிந்திருக்கும். இந்தக் கதையைச் சொல்லியே பெற்றோர்கள் அவர்களை வளர்ப்பார்கள். யார் இந்த மலாலாய்? 1880களில் நடைபெற்ற இரண்டாவது ஆங்கிலோ-ஆப்கானிய போர்களில் பிரிட்டனை ஆப்கன் ராணுவம் தோற்கடித்தது. அதற்கு காரணமானவளாக மலாலாய் இருந்தாள். காந்தகாரில் மய்வாண்ட் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவள் மலாலாய். ஆடு மேய்ப்பவரின் மகளாக பிறந்தாள். அவளுடைய டீன் ஏஜ் பருவத்தில் அவளுடைய தந்தையும், அவளை திருமணம் செய்துகொள்ளப் போகிறவரும் மற்றவர்களும் பிரிட்டிஷ் ராணுவத்தின் ஆக்கிரமிப்பை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சண்டையில் காயம் அடைந்தவர்களுக்கு உதவவும், அவர்களுக்கு தண்ணீர் மற்றும் உணவுகளைக் கொடுக்கவும் மற்ற பெண்களுடன் மலாலாயும் சென்றாள்.

அந்தச் சண்டையில் கொடியுடன் அணிவகுத்துச் சென்றவர் கொல்லப்பட்டு வீழ்ந்தார். அதைக்கண்ட மலாலாய், தனது வெள்ளை நிற துப்பட்டாவை கொடிபோல உயர்த்தி, ஆவேசமாக முழக்கமிட்டாள். இந்தப் போரில் வெற்றி பெற்றால்தான் அவமானத்திலிருந்து மீள முடியும் என்று உரக்க கத்தியபடி முன்னே சென்றாள். அவள் பிரிட்டிஷ் ராணுவத்தின் குண்டுகளுக்கு பலியானாள். ஆனால், அவள் ஏற்படுத்திய உத்வேகம் பாஷ்துன்களுக்கு வெறியை ஏற்படுத்தியது. அவர்கள் பிரிட்டிஷ் படைகளை ஆவேசத்துடன் தாக்கினார்கள். இதையடுத்து பிரிட்டிஷ் ராணுவம் வரலாற்றில் முக்கியமான ஒரு தோல்வியைச் சந்தித்தது. ஆப்கானியர்கள் பெருமையுடன் வெற்றியைக் கொண்டாடினார்கள். ஆப்கன் மன்னர், இந்த வெற்றியின் நினைவாக, காபூல் நகரின் மையத்தில் மலாலாய்க்கு நினைவுச்சின்னம் அமைத்தார். ஆப்கன் பெண்களுக்கு மலாலாயின் நினைவாக பெயர்சூட்டுவது வாடிக்கையானது.

 

ghjkஆனால், மலாலாவின் தாத்தாவுக்கு இது பிடிக்கவில்லை. இந்தப் பெயர் துயரத்தின் அடையாளம் என்று அவர் கூறினார். மலாலா சிறு குழந்தையாய் இருக்கும்போது, பெஷாவரைச் சேர்ந்த ரஹமத் ஷா சயேல் எழுதிய ஒரு பாடலை பாடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன் கடைசி வரிகள் இப்படி இருக்கும்…

ஓ மய்வாண்டின் மலாலாய்…

கவுரவத்தின் பாடலை பாஷ்துன்கள் புரிந்துகொள்ள வசதியாக மீண்டும் ஒருமுறை எழு…

உனது கவித்துவமான வார்த்தைகள் சுற்றியுள்ள உலகை மாற்றட்டும்…

உன்னை மண்டியிட்டு வேண்டுகிறேன், மீண்டும் எழு…

 

ikமலாலாயின் கதையை வீட்டுக்கு வருவோர் எல்லோரிடமும் சொல்வார் மலாலாவின் தந்தை. அந்தக் கதையையும் அவர் பாடும் பாடலையும் மலாலாவுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அது அவளுடைய இதயத்தில் படிந்துவிட்டது. தன்னை யாரேனும் மலாலா என்று அழைத்தாலே, இந்தக் கதையும் பாடலும் காற்றில் கலந்து காதில் நுழைவதாய் உணர்வாள்.

ஸ்வாத் சமவெளியை இன்றைக்கு பாகிஸ்தானின் கைபெர் பக்துன்க்வா மாநிலத்தின் பகுதி என்று கூறுகிறார்கள். ஆனால், ஒரு காலத்தில் பாகிஸ்தானுக்கும் ஸ்வாத் சமவெளிக்கும் சம்பந்தமேயில்லை. சித்ரல், டிர் ஆகிய பகுதிகள் இணைந்த சமஸ்தானமாக இருந்தது. பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு காலத்தில், பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஸ்வாத் மன்னர்கள் இணக்கமாக இருந்தார்கள். இந்தியாவுக்கு பிரிட்டிஷார் விடுதலை கொடுத்த சமயத்தில், பாகிஸ்தானை பிரித்தார்கள். அப்போது, ஸ்வாத் சமஸ்தானம் பாகிஸ்தானுடன் இணைந்தது. பாகிஸ்தான் பணத்தை பயன்படுத்தினாலும் சுயாட்சி பெற்ற பகுதியாக இருந்தது. உள்கட்டமைப்பு வசதிகளை பாகிஸ்தான் அரசு செய்துகொடுத்தது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து ஸ்வாத் 100 மைல் தூரத்தில் இருக்கிறது. மலாகாண்ட் கணவாய் வழியாக 5 மணிநேரம் சாலைவழியாக பயணித்தால் ஸ்வாத் சென்றுவிடலாம். ஆனால், ஸ்வாத் சமவெளியிலிருந்து இஸ்லாமாபாத் போனவர்கள் மிகவும் சிலர்தான்.

 

giஇந்தக் கணவாய் வழியாகவும், மலைச் சிகரங்களில் இருந்தும் பிரிட்டிஷாரை எதிர்த்து முல்லா சைதுல்லா என்ற இஸ்லாமிய மதகுரு போரிட்ட வரலாறு இருக்கிறது. முல்லாவை பைத்தியக்கார பக்கிரி என்று பிரிட்டிஷார் கிண்டல் செய்திருக்கிறார்கள். இதுகுறித்து பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் சர்ச்சில் புத்தகமே எழுதியிருக்கிறார். இந்த மலைச்சிகரங்களில் ஒன்றுக்கு சர்ச்சிலின் சிகரம் என்று இப்பகுதி மக்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். மலாகண்ட் கணவாயின் முடிவில் ஒரு கோவில் இருக்கிறது. பாதுகாப்பாக கணவாயை கடந்துவிட்டால், பயணிகள் அந்த கோவிலில் சில்லறைகளை வீசுவது வழக்கம். ஸ்வாத் சமவெளியின் மிகப்பெரிய நகரம் மிங்கோரா. சொல்லப்போனால் அது ஒன்று மட்டுமே நகரம். சுற்றிலும் இருந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் எல்லாம் இந்த நகரத்துக்கு குடியேறி நகரத்தையே அழுக்காக்கி விட்டார்கள். ஹோட்டல்கள், கல்லூரிகள், கோல்ஃப் மைதானங்கள் என்று சகல வசதிகளும் இங்கு இருக்கிறது. நகருக்கு வெளியே அகலமான ஸ்வாத் நதி ஓடுகிறது. விடுமுறை தினத்தில் இந்த நதியில் மீன் பிடிப்பதை மக்கள் பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்கள்.

 

hஇந்த நகரில் குல்கடா என்ற இடத்தில்தான் மலாலாவின் வீடு இருக்கிறது. இந்த இடத்தை புட்காரா என்று அழைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். இதற்கு புத்தர் சிலைகளின் இடம் என்று அர்த்தம். மலாலாவின் வீடு அருகேயுள்ள பகுதியில் நிறைய தலையிழந்த சிலைகளும், சிங்கச் சிலைகளும், உடைந்த தூண்களும் நிறைய கிடக்கின்றன. நூற்றுக்கணக்கான கல் குடைகளும் இருக்கின்றன. 11 ஆம் நூற்றாண்டில்தான் இந்தப் பகுதிக்கு இஸ்லாம் வந்தது. ஆப்கானிஸ்தானிலிருந்து படையெடுத்து வந்த முகமது கஜினிதான் இந்தப் பகுதியின் முதல் இஸ்லாமிய மன்னர். அதற்கு முன்னர் இந்தப்பகுதியில் புத்தர்களின் முடியாட்சி நடைபெற்றது.

இரண்டாம் நூற்றாண்டிலேயே புத்தர்கள் இந்தப் பகுதிக்கு வந்துவிட்டார்கள். ஸ்வாத் நதிக்கரை நெடுகிலும் 1400 புத்தமத சிற்றரசுகள் அமைந்திருந்ததாக சீன யாத்ரீகர்கள் எழுதியிருக்கிறார்கள். நிறைய புத்தமத ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. ஆனால், இப்போது அவற்றின் எச்சங்கள் மட்டுமே கிடைக்கின்றன. பாறைச் சிற்பங்களும், தாமரையில் தியான நிலையில் அமர்ந்த புத்தர் சிலைகளையும் காணமுடியும். அவை பிக்னிக் பகுதிகளாக மாறியிருக்கின்றன. புத்தத் துறவிகளை புதைத்த இடங்களில் தங்கத்தால் வேயப்பட்ட கூரைகளுடன் கல்லறைகள் அமைந்திருந்தன. ஒரு காலத்தில் இந்தப் பகுதி புனித ஸ்தலமாக இருந்தது என்று தொல்லியல் நிபுணர்கள் கூறியிருக்கிறார்கள்.
 

jபுட்காரா மிச்சங்கள் என்ற தலைப்பில் மலாலாவின் தந்தை ஒரு கவிதை எழுதியிருக்கிறார்… அதில் புத்தர் ஆலயங்களும் மசூதிகளும் எப்படி பக்கம் பக்கம் அமைந்திருந்தன என்பதை சுருக்கமாக சொல்லியிருக்கிறார்… “மசூதிகளில் இருந்து உண்மையின் குரல் ஒலிக்கும்போது,  புத்தர் புன்னகைக்கிறார்… உடைபட்ட சங்கிலியை வரலாறு மீண்டும் இணைக்கிறது…” என்று அவருடைய கவிதை வரிகள் சொல்கின்றன.

 

 
 

Next Story

'பெண்கள் புர்கா அணியாவிட்டால் ஆண்களின்...'-எச்சரிக்கும் தலிபான்கள்! 

Published on 08/05/2022 | Edited on 08/05/2022

 

Taliban warns womens... if not to wear burqas

 

கடந்த 2021- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு அங்கு பெண் குழந்தைகளின் கல்வி என்பது கேள்விக் குறியானது. பெண்கள் உடலையும், முகத்தையும் மறைக்கும் அளவிற்கு 'புர்கா' அணிய வேண்டும், பாடசாலைகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே திரைச்சீலை அமைய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தலிபான்கள் மேற்கொண்டனர்.

 

பெண் கல்வி மற்றும் சுதந்திரத்தைக் கேள்விக்குறியாக்கும் இதுபோன்ற செயல்களை தலிபான்கள் தவிர்க்க வேண்டும் இல்லையெனில் சர்வதேச சமூகத்தில் அவர்கள் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள் என நோபல் பரிசு பெற்ற மலாலா உள்ளிட்ட பெண்ணிய ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இஸ்லாமிய பெண்கள் தங்களது முழுஉடலை மறைக்கும் வகையில் 'புர்கா' அணியவேண்டும், பண்பாடு மற்றும் மத ஒழுக்கத்தை கடைபிடிக்கும் வகையில் பெண்கள் தங்களது முகத்தை முழுவதுமாக மூடிக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ள தலிபான்கள், இந்த உத்தரவை மீறும் பெண்களுடைய ஆண் உறவினர்களின் அரசு வேலைகள் பறிக்கப்படும் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கை உத்தரவை வழங்கியிருக்கிறார்கள்.

 

 

Next Story

''பெண் குழந்தைகள் படிக்க தலிபான்கள் அனுமதிக்க வேண்டும்''-மலாலா கருத்து

Published on 27/03/2022 | Edited on 27/03/2022

 

"The Taliban should allow girls to study," she said-malala speech

 

பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை தலிபான்கள் வழங்காவிட்டால் சர்வதேச சமூகத்தில் அவர்கள் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள் என நோபல் பரிசு வென்ற மலாலா தெரிவித்துள்ளார்.

 

அண்மையில் ஆப்கானிஸ்தானில் பள்ளிக்குச் சென்ற சிறுமிகள் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பேசிய மலாலா ''பெண் குழந்தைகள் கல்வி அறிவை பெறுவதற்கு தலிபான்கள் அனுமதிக்க வேண்டும். பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளை தலிபான்கள் வழங்காவிட்டால் சர்வதேச சமூகத்தில் அவர்கள் அங்கீகரிக்கப்பட மாட்டார்கள்'' என்றார்.

 

கடந்த 2012 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பெண் குழந்தைகளுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்ட மலாலா மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதில் பலத்த காயமுற்ற மலாலா இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மீண்டு வந்தார். அதனையடுத்து மலாலாவுக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.