உளவியல் ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் கணவரால் மன உளைச்சலுக்கு ஆளான பெண்ணுக்கு கொடுத்த கவுன்சிலிங்கைப் பற்றி விவரிக்கிறார்.
இந்தியாவில் ரூ.1 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்கி வேலை செய்து வந்த பெண் ஒருவர் தனது வேலைகளை விட்டுவிட்டு வெளிநாட்டு மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ளத் தனது உறவினர்களால் தூண்டப்படுகிறாள். அந்த தூண்டுதலின் பேரில் அந்த பெண்ணும் அந்த வெளிநாட்டு மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறாள். அதன் பிறகு திருமணத்தின்போது அந்த பெண்ணின் உறவினர்கள் வெளிநாட்டில் நம்ம பொண்ணு செட்டில் ஆகப் போகிறாள் என்ற ஆசையை அந்த பெண்ணின் மனதில் ஆழமாகப் பதிய வைக்கின்றனர். இந்த இடத்தில்தான் அந்த பெண்ணுடைய பிரச்சனை தொடக்க ஆரம்பித்தது. தனது வேலை, மேற்படிப்பு என எல்லாவற்றையும் விட்டு அந்த பெண் தன் கணவரைச் சார்ந்து வாழ பழக்கப்படுத்தப்படுகிறாள்.
திருமணம் முடிந்து அந்த பெண் தன் கணவரோடு வெளிநாட்டில் வசித்து வந்த சமயத்தில் தன் கணவருக்கு நிறைய கெட்ட பழக்கவழக்கங்கள் இருப்பதை அந்த பெண் கண்டு பிடிக்கிறாள். மது, திருமணம் கடந்த உறவு, ஆண்களுடன் உடலுறவு என நிறையத் தவறுகளை மனைவிக்கு தெரியாமல் அவர் செய்திருக்கிறார். மேலும் அவர் தாம்பத்திய உறவில் அந்தளவிற்கு ஈடுபாடு இல்லாமலும் இருந்திருக்கிறார். ஆனால் எப்படியோ இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. இந்த சூழலில் தன் கணவரை பிரிய மனமில்லாத அந்த பெண் பலமுறை அவரிடம் காலில் விழுந்து திருந்தி தன்னுடன் வாழ வேண்டுமெனக் கெஞ்சி இருக்கிறாள். ஆனால் அந்த பெண்ணின் கணவர் தன் மனைவியின் பாஸ் போர்ட்டை வாங்கி வைத்துக்கொண்டு ஆணாதிக்க மனப்பான்மையுடன் மனைவியை நடத்தியிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் திருமண வாழ்வில் விரக்தியடைந்த அந்த பெண் நடந்ததை என்னிடம் கூறி ஆன்லைனில் கவுன்சிலிங் பெற வந்தாள். அந்த பெண்ணிடம் நான், உங்களிடம் இருக்கும் திறமையைக் காட்டி அவரை சார்ந்து வாழாமல் தனித்தன்மையோடு வாழப் பழகுங்கள் என்று ஆலோசனை கொடுத்தேன். தொடர்ந்து பலமுறை என்னிடம் அந்த பெண் கவுன்சிலிங் பெற்று வந்ததோடு ஒரு நாள் தான் வேலைக்குப் போவதாக முடிவெடுத்தாள். இதை தன் கணவரிடம் தெரிவித்திருக்கிறாள். ஆனால் முதலில் அவர் அதற்கு மறுத்துள்ளார். பின்பு அந்த பெண் தனியாக இருப்பது கஷ்டமாக இருக்கிறது. உங்களைப்போல் எதாவது வேலைக்குச் சென்றால் கொஞ்சம் மன ஆறுதலாக இருக்கும் என்று சொல்லி தன் கணவரிடம் வேலைக்கு போக ஒப்புதல் வாங்கி இருக்கிறாள்.
அதன் பிறகு வேலைக்குச் சென்ற அந்த பெண் குறைந்த நாட்களில் நல்ல வருமானத்தை ஈட்டும் அளவிற்கு வேலையில் சிறந்து விளங்கினார். அதன் பின்பு அந்த பெண்ணுக்கு தன்னம்பிக்கை வரத் தொடங்கியது. தனது மேற்படிப்புகளிலும் கவனம் செலுத்தினாள். இப்படி படிப்படியாகத் தனது மதிப்பை உயர்த்திக்கொண்டே இருந்தாள். கணவரின் தொடர் நடவடிக்கைகள் சரியில்லாததை உணர்ந்த அந்த பெண், கணவரிடம் விவாகரத்து கோரி முதலில் நோட்டீஸ் கொடுத்துள்ளார். அதை வாங்கிய கணவர் ஜீரணிக்க முடியாமல் தன் மனைவியை கடுமையாக தாக்கியிருக்கிறார். அதன் பிறகு அந்த பெண், காவல்துறையினரிடம் புகார் கொடுத்திருக்கிறாள். வெளிநாடு என்பதால் அங்கு புகார் கொடுத்ததும் உடனடியாக அந்த பெண்ணின் கணவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவிட்டார்கள். அதோடு சில வழக்குகளையும் பதிவிட்டார்கள். அதனால் அந்த பெண்ணின் கணவர் வேலையும் பறிபோனது. சில நாட்கள் கழித்து அந்த பெண்ணுக்கு தான் வேலை பார்த்து வந்த இடத்தில் பதவி உயர்வு கிடைத்துவிடுகிறது.
விவாகரத்தான பிறகு அந்த நபர் வெளிநாட்டில் வேலை பார்க்க முடியாமல் இந்தியா திரும்பி இருக்கிறார். அந்த பெண் தன் குழந்தையுடன் தனது இரண்டாவது திருமணத்திற்குத் தயாரானாள். அந்த திருமணத்தின்போது மாப்பிள்ளை வீட்டாரிடம், தன் வேலையையும் படிப்பையும் உயிருள்ளவரை நிறுத்த மாட்டேன் என்று அந்த பெண் கூறியிருக்கிறாள். அதன் பிறகு அந்த பெண்ணுக்கு இரண்டாவது திருமணம் நடந்து தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறாள். முன்பு நான் அந்த பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுத்தபோது மனவேதனைப்பட்டு அழுது தனது பிரச்சனைகளைக் கூறினாள். சமீபத்தில் அந்த பெண்ணுடன் பேசியபோது முன்பு வந்த பெண்ணா இது? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு தன்னம்பிக்கையுடன் இருந்தாள் என்றா