Skip to main content

நல்லா படிக்கிறது தப்பா? மாணவிக்கு நடந்த டார்ச்சர் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 14

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

 jay-zen-manangal-vs-manithargal- 14

 

மாணவி ஒருவருக்கு கொடுக்கப்பட்ட கவுன்சிலிங் குறித்து ஜெய் ஜென் விவரிக்கிறார்

 

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடமிருந்து எனக்கு கால் வந்தது. அவரோடு பேசும்போது அவருக்கு படிப்பின் மீது மிகுந்த ஆர்வம் இருப்பது தெரிந்தது. தான் நன்றாகப் படித்தாலும், படிக்காத பிள்ளையை ட்ரீட் செய்வது போலவே தன்னை தன்னுடைய பெற்றோர் நடத்துவதாக அவர் தெரிவித்தார். தான் என்ன செய்கிறேன் என்பதே தெரியாமல் தன்னுடைய பெற்றோர் தனக்குத் தொடர்ந்து அறிவுரை வழங்கி வருவதாக அவர் கூறினார். அவர்களை எவ்வாறு எதிர்கொள்வது என்று தனக்குத் தெரியவில்லை என்றார். 

 

தன்னுடைய நண்பர்களும் தான் நன்றாகப் படிப்பதால் தன்னை ஒதுக்குவதாக அவர் நினைத்தார். ஆசிரியர்களும் முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என அவருக்கு பிரஷர் கொடுத்தனர். இவை அனைத்தையும் அவர் என்னிடம் தெரிவித்த பிறகு, அவரோடு நான் உரையாடத் தொடங்கினேன். பெற்றோரை மாற்றுவது சாத்தியமில்லை என்றேன். ஆனால் தன்னிடம் சில விஷயங்களை மாற்றிக்கொள்வது எளிது. தான் படித்துக்கொண்டிருப்பதை தாயிடமும் தந்தையிடமும் அப்டேட் போல் தெரிவிக்குமாறு கூறினேன். பெற்றோருடன் அமர்ந்து பேச வேண்டும் என்று கூறினேன்.

 

அவரும் அதை ஏற்றுக்கொண்டார். முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் சொல்வதற்கு முன் அது குறித்து தானே அவர்களிடம் உரையாடலாம் என்றேன். இதன் மூலம் அவர்கள் பேசுவது குறையும். நண்பர்களிடமும் படிப்பு தவிர மற்றவை குறித்த உரையாடலைத் தாமாக முன்னெடுக்கலாம் என்றேன். இதையெல்லாம் செய்த பிறகு அவருடைய வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது என்பதை அவர் உணர்ந்தார். பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் பெரிய மாற்றம் தெரிந்தது. 

 

நண்பர்களும் அவரோடு சகஜமாக, விளையாட்டாகப் பேச ஆரம்பித்தனர். அனைத்து குழந்தைகளுமே இந்த முறையைப் பின்பற்றலாம். பாதுகாப்பான முறையில் வாழ்க்கையை எதிர்கொள்வதை விட, பக்குவப்பட்ட  முறையில் சில முன்னெடுப்புகளை நாமே மேற்கொள்ளும்போது நல்ல விளைவுகள் கிடைக்கும். ஆனால் இதைச் செய்யும்போது மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் மரியாதை குறைவாக நடந்துவிடக் கூடாது. படிக்கும் குழந்தைகளுக்கு இந்த முறை நிச்சயமாக உதவும் என்பதில் சந்தேகமில்லை.

 

 

Next Story

பிணவறை மனிதரின் இறப்பு குறித்த பார்வை - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 21

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
 jay-zen-manangal-vs-manithargal- 21

கவுன்சிலிங் கொடுப்பது என்பது மனச்சிக்கலோடு நம்மிடம் வருபவர்களுக்கு நாம் மனநலத்திற்கான ஆலோசனை வழங்குவது தான். சில சமயம் நாமும் பலரிடமிருந்து ஆலோசனையை அனுபவங்களாகப் பெற்றுக் கொள்வோம். அப்படி பெற்றுக்கொண்ட ஒரு கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

நண்பரின் அப்பாவுக்கு விபத்து ஏற்பட்டு விட்டதாக தகவல் கிடைக்கிறது. விபத்து நடந்த இடத்திற்கு சென்று பார்த்தால் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று விட்டார்கள் என்றும், அங்கே சென்றால் இறந்துவிட்டார் பிணவறையில் வைத்திருக்கிறோம் என தகவல் கிடைக்கப்பட்டு அங்கே சென்று பார்த்தால் பல வகையில் மரணமடைந்த பிணங்கள் வைக்கப்பட்டு உள்ளது.

அந்த பிணங்களிடையே இருந்து ஒருவர் எழுந்து வருகிறார். நியாயமாகப் பார்த்தால் இந்த இடத்தில் பயந்திருக்க வேண்டும். ஆனாலும் பயத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பார்த்தால் பிணவறை நிர்வாகியாக இருப்பவர் அங்கிருந்து வருகிறார். அவரிடம் விவரத்தைச் சொல்லி கேட்டதும், அவரும் விவரத்தை உறுதி செய்து கொண்டு காத்திருக்கச் சொன்னார். அப்பாவின் பிணத்தை வாங்க நண்பர் வரும் வரை காத்திருந்த நேரத்தில் அந்த பிணவறை நிர்வாகி என்னிடம் பேச்சு கொடுத்தார்.

நீங்க இறந்தவருக்கு யார் என்றதும், நண்பனின் அப்பா என்று சொன்னேன். என்ன வேலை பாக்குறீங்க என்றதும், பெரிய நிறுவனங்களுக்குச் சென்று திறமையை வளர்த்தெடுக்கும் பயிற்சி கொடுப்பது மற்றும் மனநிலை சிக்கலை சரி செய்வது குறித்து மனப்பயிற்சி கொடுப்பது போன்றவைகளை செய்கிறேன் என்றேன். அவரோ ‘நீங்க சொன்னா கேட்டுக்கிறாய்ங்களா’? என்று கேட்டார். கேட்டுக்குறாங்களா இல்லையான்னு தெரியலை, ஆனால் என் பயிற்சிக்கு பிறகு நிறைய மாற்றம் வந்ததாக நினைக்கிறார்கள். அதனால் தான் திரும்ப என்னை கூப்பிடுகிறார்கள் என்றேன். அவரோ அதெல்லாம் சும்மா நடிப்பானுங்க, நீங்க சொல்றதை எவனும் உள் வாங்கியிருக்க மாட்டான் என்றார்.

அவருடைய பேச்சில் இருந்த ஒரு ஈர்ப்பில் மேற்கொண்டு கவனித்தேன். அவரே தொடர்ந்தார், வாழ்க்கையில் ரொம்ப ஆட்டம் போடுறவய்ங்க பலரை இந்த பிணவறையை காலையும், மாலையும் ஒரு தடவை பார்க்க சொல்லுங்க, தானாக அடங்கிடுவானுங்க. ஏனெனில், இங்கே இறப்பு குறித்த பயம் எல்லாருக்கும் போயிடுச்சு அதனால் தான் நிறைய ஆட்டம் ஆடுறாங்க என்றார். இங்க வந்து தொடர்ச்சியாக பார்த்தால் வாழ்க்கை குறித்த பயம் வந்து பொறுப்பு அதிகரித்து எல்லாரையும் நன்றாக பார்த்துக் கொள்வார்கள். ஆட்டம் போடாமல் அடங்கி இருப்பார்கள் என்றார்.

மேலும், சாவை உணர்ந்த மனிதன் சரியான மனிதனா இருப்பான். அதை உணராதவன் தான் நிறைய சிக்கலோடு இருப்பான். அவனுக்கு வாழ்கிற காலத்திலேயே நன்மைகளை செய்து விட வேண்டும் என்பதை இதுபோன்ற பிணக்குவியல்களை அடிக்கடி பார்த்தால் தான் உணர முடியும். இதைச் சொல்ல எதற்கு ஒரு பயிற்சி வகுப்பு, வாத்தியார், போதனை எல்லாம் என்று சொன்னார். பெரிய தத்துவங்கள், புத்தகங்கள் இவையெல்லாம் சொல்லாத ஒரு விசயத்தை ஒரு சாமானிய மனிதர் சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டார். இதை இன்றும் நான் எனக்கு கொடுக்கப்பட்ட, என்னுடைய சிந்தனையை மேம்படுத்திக்கொள்ள ஒரு கவுன்சிலிங்காகத் தான் எடுத்துக் கொள்கிறேன்.

Next Story

விவாகரத்தான பெண்; வலியாக மாறிய மலரும் நினைவுகள் - ‘ஜெய் ஜென்’ பகிரும் மனங்களும் மனிதர்களும்: 20

Published on 27/12/2023 | Edited on 27/12/2023
jay-zen-manangal-vs-manithargal- 20

திருமண உறவை முறித்துக் கொண்ட பிறகும், உடன் வாழ்ந்தவர்களின் நினைவுகளை சுமந்து இருக்கிறவர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

நல்லபடியாக திருமணம் நடந்தது, பிரச்சனை வந்தது, சரி செய்ய முயற்சித்தோம், முடியவில்லை, பிரிந்துவிட்டோம் என்று சர்வசாதாரணமாக தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி விவரித்தார் அந்த பெண். ஆனால், பிரச்சனை வந்து பிரிந்தேன், பிரச்சனைக்கு முன்பு வாழ்ந்த அழகான வாழ்க்கையுடைய நினைவுகள் இப்போது மீண்டும் வரும்போது அது தருகிற வெறுமையான மனநிலையிலிருந்து மீள முடியவில்லை என்று பேசினார். 

குறிப்பாக தன்னுடைய கணவர் அடிக்கடி பாடுகிற பாடலை எங்கேயாவது கேட்டாலோ, அவருக்கு பிரியமான உணவை எங்கேயாவது சாப்பிட நேர்ந்தாலோ, இமாச்சல பிரதேசத்தில் உள்ள மணாலி சுற்றுலாத்தளம் பற்றி யாராவது பேசினாலோ இவர்களுக்கு மலரும் நினைவுகள் வந்து விடுகிறது. அந்த நினைவுகள் வலியாக மாறுகிறது என்றார்.

கவுன்சிலிங்க் ஆரம்பித்தபோது, அவர்களது நினைவுகளை வகைப்படுத்தி அதற்கு ஒரு பெயர் வைக்கச் சொன்னேன். அது நல்ல நினைவுகள் அதற்கென்ன பெயர் வைப்பது என்றார். நானோ ஏதாவது காமெடியாக வையுங்கள் என்றதற்கு ‘இங்கி பிங்கி பாங்கி’ என்று வைப்போமா என்று கிண்டலாக சிரித்துக் கொண்டே சொன்னார். நானும் அதையே வச்சுப்போமே என்று சொல்லி, ஒருவாரம் கழித்து வாருங்கள் என்று அனுப்பி வைத்தேன்.

ஒரு வாரத்திற்கு பிறகு திரும்ப வந்தவரிடம் கேட்டேன், இப்பொழுதும் பழைய நல்ல நினைவுகள் வருகிறதா? ஆம், எனில் அந்த நினைவுகள் இப்பொழுதும் வலியைத் தருகிறதா என்று கேட்டபோது, இல்லை என்பதுதான் பதிலாக இருந்தது. எப்படி வலியாக இல்லாமல் போனதென்றால் அந்த நினைவுகள் வரும்போது நாம் வைத்த காமெடியான பெயரும் நினைவோடு சேர்ந்து வருகிறது. அது சிரிக்க வைத்து விடுகிறது என்றார். அதற்காகத்தான் அந்த நினைவுகளுக்கு காமெடியாக பெயர் வைக்கச் சொன்னதன் அர்த்தத்தைச் சொன்னேன். 

நாமெல்லாம் கஷ்டம், வலி, சிக்கல், துன்பம் என்ற இருக்கையில் அமர்ந்துகொண்டே அதை சரி செய்ய முயற்சிக்கிறோம். ஆனால் மகிழ்ச்சி, புத்துணர்ச்சி, ஆரோக்கியம், என்ற இருக்கை நமக்கு அருகிலேயே இருக்கும். அதைப் பற்றிய புரிதல் இல்லாமலேயே இருப்போம். அதைப் புரிந்து கொண்டால் ஒரு இருக்கையிலிருந்து எழுந்து இன்னொரு இருக்கையில் அமர்ந்து விடலாம். அப்படித்தான் இனிமையான நினைவுகளை நமக்கு தந்தவர்கள் பிரிந்து விட்டால், அந்த நினைவுகள் வலியாக மாறும்போது அதை வேறு விதமாக பார்க்க பழகிக்கொண்டால் நாம் இயல்பாக இருக்க பழகி விடுவோம்.

பின் ஒரு நாளில் அந்த பெண்ணை பொதுவான ஒரு இடத்தில் சந்தித்த போது, இப்பொழுதெல்லாம் சில கோவமான நிகழ்வுகளுக்கு காமெடி பெயர் வைத்து சிரித்து விடுவதாகச் சொன்னார். நாம் சொன்ன டெக்னிக்கை புரிந்து கொண்டார் என்பது கவுன்சிலிங்க் கொடுத்த எனக்கும் திருப்தியாக அமைந்தது.