வெற்றிகளை விட தோல்விகள் அந்த புதிய நடிகனை அதிகமாக சூழ்ந்தன. 'தோல்வியில் இருந்து எவனொருவன் பாடம் கற்கிறானோ அவனே சாதனையாளர் ஆகிறான்' என்பது உலக பொன்மொழி. அதை நன்கு தெரிந்து வைத்திருந்தாரோ என்னவோ தெரியவில்லை... தோல்விகள் குறித்தான காரணங்களை அலச தொடங்குகிறார். 'நாம் தனித்து தெரியவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? தனித்துவமான பாணியைக் கடைபிடிக்க வேண்டும்' என்ற சூத்திரம் அவருக்கு புரிந்தது. தான் ஒரு சண்டைக்கலைஞன்... சண்டைப்பட ஹீரோ... சரி, சண்டை என்றால் வெறும் சண்டை மட்டுமேதான் இருக்க வேண்டுமா? அதனிடையே காமெடி இருந்தால் என்ன? சாலையில் ஒருவர் வழுக்கி விழும்போது எல்லோருமே பரிதாபப்படுகிறார்களா என்ன? சிலர் சிரிக்கிறார்கள்தானே? வில்லன்கள் காமெடியாக விழுந்தால், வில்லன்களை காமெடியாக அடித்தால் இன்னும் ரசித்து சிரிப்பார்கள்தானே? தனக்கான ஸ்டைலை பிடித்தார். டிஸ்யூம்... டிஸ்யூம் என அடிதடிகள் மட்டும் நிரம்பியிருந்த சண்டைக் காட்சிகளுக்கு இடையிடையே தனித்துவமான நகைச்சுவை நகர்வுகள் சேர்த்து உலக சினிமா ரசிகர்களை மெல்ல தன் பக்கம் திருப்பினார் அந்த வெற்றி நாயகன் ஜாக்கி சான்.
நடிகர், இயக்குநர், சண்டைப் பயிற்சியாளர், தயாரிப்பாளர் என பன்முகத்தை உலக சாதனையாளர்களின் வரலாற்று பக்கத்தில் பதித்தவர் ஜாக்கி சான். ஹாங்காங்கில் உளவாளி ஒருவருக்கு மகனாக பிறந்து இன்று ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் எனும் பெருமையை தனதாக்கி கொண்ட ஜாக்கிசானின் வாழ்க்கை பாதை, வெற்றியைத் தேடி நடைபோடும் நாளைய உலக சாதனையாளரான உங்களுக்கு சரியான வழிகாட்டலாக அமையும். பணிச்சூழல் காரணமாக அவருடைய பெற்றோர் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட இவரை ஹாங்காங்கில் உள்ள ஒரு பள்ளியில் சேர்த்து விட்டு செல்கின்றனர். ஜாக்கிசானின் அப்போதைய வயது வெறும் ஆறு. அங்கு சீனர்களுக்கே உண்டான அனைத்து தற்காப்பு கலைகளும் பாடத்தோடு சேர்த்து கற்பிக்கப்படுகின்றன. எல்லாக் கலைகளையும் முழுமையாக கற்று நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் சண்டைக் கலைஞராகப் பணியாற்றுகிறார். சிறு வயது முதலே ப்ருஸ்லீதான் அவரது ஆதர்சன நாயகன். அவருடனும் சண்டைக் கலைஞராக பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிறது. பின் கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பிக்கிறார். ஆரம்ப கட்டத்தில் அடைந்த தோல்விகளின்போது சிந்தித்ததுதான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் உள்ளது.
புன்னகை பூத்த முகத்தோடு எப்போதும் எளிமையான தன்மையுடன் இருக்கும் ஜாக்கிசான் வெற்றியின் ரகசியம் குறித்து பேசியது : "என்னை ப்ருஸ்லீ மாதிரி நடிக்க சொல்வார்கள். நான் அவர் எப்படி எல்லாம் செய்வாரோ அதற்கு எதிர்ப்பதமாகத்தான் செய்வேன். நான் ப்ருஸ்லீ மாதிரி தான் ஆக ஆசைப்பட்டேனே தவிர ஒரு நாளும் ப்ருஸ்லீயாகிட வேண்டுமென்று ஆசைப்பட்டது இல்லை. உங்களிடம் இருக்கும் தனித்துவத்தை ஒரு போதும் கைவிட்டு விடாதீர்கள். அமெரிக்க ரசிகர்களுக்கு என்னுடைய சண்டைக்காட்சிகள் பிடிக்கவில்லை. அதனால் என்னுடைய ஆங்கில திரைப்படங்கள் தோல்வியடைய ஆரம்பித்தன. அப்போதும் என்னை நான் மாற்றிக்கொள்ளவில்லை. இதில் என்ன வேடிக்கை என்றால் 'அன்று பிடிக்கவில்லை என்று சொன்னவர்கள்தான் இன்று அதைக் கற்றுக்கொடுக்கும் படி என்னைத் தேடி வருகிறார்கள்'. உங்களுடைய திறமையை ஒருவர் பாராட்டுகிறார் என்றால் அதை நினைத்து பெருமையடைந்து வீண் கற்பனைகள் செய்து நேரத்தினை விரயம் செய்யவேண்டாம். அதை இன்னும் மெருகேற்ற என்ன செய்ய வேண்டுமோ அதை நோக்கி உழைக்க தொடங்குங்கள். நீங்கள் யார் என்பதை உணர்ந்துவிட்டால் வாழ்க்கை உங்களைக் கீழே தள்ளும்போது மீண்டும் எழுவோமா, வேண்டாமா என்பதை எளிதில் முடிவெடுத்து விடலாம். வலிமையான கனவுகள்தான் தீர்க்கமான வெற்றியைத் தரும். கடினமாக உழைக்க தொடங்குங்கள்...".
தோல்வியடைந்தால் என்ன செய்யவேண்டும் என்பதை வென்றவரான ஜாக்கி சான் சொல்லியிருக்கிறார். செய்வோமா?